Published : 06 Nov 2020 03:17 AM
Last Updated : 06 Nov 2020 03:17 AM
பிஹார் சட்டப்பேரவை தேர்தலுக் கான 3-ம் கட்ட தேர்தல் பிரச்சாரம் நேற்று ஓய்ந்தது. இதில் போட்டி யிடும் ராஷ்ட்ரிய ஜனதா தள (ஆர்ஜேடி) வேட்பாளர்களில் 73 சதவீதம் பேர் மீது குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளன.
பிஹாரில் 3 கட்டங்களாக சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறுகிறது. முதல்கட்டமாக கடந்த மாதம் 28-ம் தேதி 71 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடைபெற்றது. இரண்டாம் கட்டமாக கடந்த 3-ம் தேதி 94 தொகுதிகளுக்கு தேர்தல் நடந்தது. இறுதிக் கட்டமாக 78 தொகுதிகளுக்கு நாளை வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இதற்கான பிரச்சாரம் நேற்று மாலையுடன் முடிந்தது. முதல்வர் நிதிஷ் குமார், ஆர்ஜேடி தலைவர் தேஜஸ்வி உள்ளிட்ட தலைவர்கள் நேற்று இறுதிக் கட்ட பிரச்சாரத்தில் ஈடுபட்டனர்.
மூன்றாம் கட்ட தேர்தலில் 1,207 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். இதில் 1,195 வேட்பாளர்கள் தாக்கல் செய்த பிரமாண பத்திரங்களை ஆய்வு செய்து அவர்கள் மீதான குற்ற வழக்குகள் குறித்த விவரங்களை ஏடிஆர் என்ற தன்னார்வ தொண்டு அமைப்பு வெளியிட்டுள்ளது.
லாலு பிரசாத்தின் ராஷ்ட்ரிய ஜனதா தளம் சார்பில் 44 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். இதில் 32 பேர் மீது குற்ற வழக்குகள் உள்ளன. இதில் 22 பேர் மீது கொலை, பலாத்காரம் உள்ளிட்ட வழக்குகள் தொடரப்பட்டுள்ளன. ஒட்டுமொத்தமாக அந்த கட்சியின் 73 சதவீத வேட்பாளர்கள் மீது குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளன.
பாஜக சார்பில் 34 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். இதில் 26 பேர் மீது குற்ற வழக்குகள் உள்ளன. ஜேஏபி-எல் கட்சியின் 22 வேட்பாளர்கள் மீது குற்ற வழக்குகள் தொடரப்பட்டுள்ளன. ஐக்கிய ஜனதா தளத்தை சேர்ந்த 21, காங்கிரஸை சேர்ந்த 19, லோக் ஜன சக்தியை சேர்ந்த 18, ஆர்எல்எஸ்பி கட்சியை சேர்ந்த 16 வேட்பாளர்கள் மீது குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளன.
ஜேஏபி-எல் கட்சியின் தலைவர் பப்பு யாதவ், மாதேபுரா தொகுதியில் போட்டியிடுகிறார். மிக அதிகபட்சமாக அவர் மீது 132 குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளன. அவருக்கு அடுத்து ஐக்கிய ஜனதா தள வேட்பாளர் பீமா பார்தி, சிபிஐ (எம்எல்) கட்சியைச் சேர்ந்த மெகபூப் ஆலம், வீரேந்திர பிரசாத் குப்தா, லோக் ஜன சக்தியின் சங்கர் சிங், அமித் சவுத்ரி, ஆர்ஜேடியின் ஓம் பிரகாஷ் சவுத்ரி ஆகியோர் மீது அதிக குற்ற வழக்குகள் உள்ளன.
கோடீஸ்வர வேட்பாளர்கள்
ஆர்ஜேடி சார்பில் போட்டியிடும் 35 வேட்பாளர்கள் கோடீஸ்வரர்கள் ஆவர். பாஜக, லோக் ஜன சக்தி தலா 31, ஐக்கிய ஜனதா தளம் 30, காங்கிரஸை சேர்ந்த 17 வேட்பாளர்கள் கோடீஸ்வரர்கள் ஆவர்.
மிக அதிகபட்சமாக வாரிஸ்நகர் தொகுதியில் போட்டியிடும் ஆர்எல்எஸ்பி கட்சியின் வேட்பாளர் பி.கே. சிங்கிடம் ரூ.85.89 கோடி மதிப்புள்ள சொத்துகள் உள்ளன. ஆர்ஜேடி வேட்பாளர் ஓம் பிரகாஷ்சவுத்ரியிடம் ரூ.45.37 கோடி சொத்துகளும் சுயேச்சை வேட்பாளர் சங்கர் குமார் ஜாவிடம் ரூ.32.19 கோடி சொத்துகளும் உள்ளன.
மூன்றாம் கட்ட தேர்தலில் போட்டியிடும் 499 வேட்பாளர்கள் 5-ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரை படித்துள்ளனர். 552 வேட்பாளர்கள் பட்டதாரிகள் ஆவர். 12 பேர் பட்டயப் படிப்பை முடித்துள்ளனர். 126 வேட்பாளர்கள் எழுத, படிக்க தெரியும் என்று குறிப்பிட்டுள்ளனர். 5 பேர் எழுத, படிக்க தெரியாது என்று தெரிவித்துள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT