Published : 05 Nov 2020 03:22 PM
Last Updated : 05 Nov 2020 03:22 PM
பண்டிகை காலம் மற்றும் குளிர் காலத்தில் வைரஸ் பரவும் அபாயம் இருப்பதால், கோவிட்-19-க்கு ஏற்ற நடத்தைகளை மக்கள் பின்பற்ற வேண்டும் என மத்திய அமைச்சர் ஹர்ஷ் வர்தன் வலியுறுத்தியுள்ளார்.
கோவிட் 19 பாதிப்பு அதிகம் உள்ள மாநிலங்களில், தயார் நிலை மற்றும் மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் குறித்து காணொலி காட்சி மூலம் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் ஹர்ஷ்வர்தன் ஆய்வு செய்து வருகிறார். கர்நாடகாவில் கோவிட்-19 நிலவரம் குறித்து, மாநில சுகாதார மற்றும் மருத்துவ கல்வி அமைச்சர் டாக்டர் சுதாகர் மற்றும் மூத்த அதிகாரிகளிடம், ஹர்ஷ் வர்தன் ஆலோசனை நடத்தினார்.
பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசியதாவது:
கரோனாவுக்கு எதிரான போராட்டத்தில் 10 மாத பயணத்தை நாம் விரைவில் நிறைவு செய்யப் போகிறோம். கோவிட்-19 பரவலை கட்டுப்படுத்துவதிலும், குணப்படுத்துவதிலும் நல்ல முன்னேற்றங்கள் ஏற்பட்டுள்ளன. உயிரிழப்பு எண்ணிக்கை குறைந்து வருகிறது. சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கையும் குறிப்பிடத்தக்க அளவு குறைந்துள்ளது.
நாட்டில் குணமடைவோர் வீதம் இன்று 92%-ஐ கடந்துள்ளது. இறப்பு வீதமும் 1.49% -ஆக குறைந்துள்ளது. 2000-க்கும் மேற்பட்ட பரிசோதனை கூடங்களுடன், கொவிட் பரிசோதனை திறனும் அதிகரித்துள்ளது.
பிரதமர் அழைப்பு விடுத்த கோவிட்-19க்கு எதிரான மக்கள் இயக்கத்தை, அனைவரும் பின்பற்ற வேண்டும். வரும் பண்டிகை காலம் மற்றும் குளிர் காலத்தில் வைரஸ் பரவும் அபாயம் இருப்பதால், கொவிட்-19-க்கு ஏற்ற நடத்தைகளை மக்கள் பின்பற்ற வேண்டும்.
மகாராஷ்டிராவுக்கு அடுத்தபடியாக கர்நாடகாவில் கோவிட்-19 பாதிப்பு அதிகம் உள்ளது. இங்கு குணமடைவோர் வீதம் 93 சதவீதமாகவும், இறப்புவீதம் 1.35% வீதமாகவும் உள்ளது. சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கையை குறைக்க, கர்நாடகா சிறப்பான நடவடிக்கைகள் எடுத்து வருகிறது. பெங்களூரு, மைசூரு, பெல்லாரி, தக்ஷின் கன்னடா, ஹாசன் மற்றும் பெலகாவி பகுதியில் பாதிப்பு அதிகம் உள்ளது கவலை அளிக்கிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT