Published : 05 Nov 2020 03:12 AM
Last Updated : 05 Nov 2020 03:12 AM
ஒடிசாவில் பட்டப்படிப்பை மறைத்து பியூன் வேலைக்கு சேர்ந்தவரை வங்கி நிர்வாகம் பணிநீக்கம் செய்தது சரிதான் என உச்ச நீதிமன்றம் உத்தர விட்டுள்ளது.
ஒடிசாவைச் சேர்ந்த அமித் குமார் தாஸ், பஞ்சாப் நேஷனல் வங்கியில் பியூன் வேலையில் சேர்ந்தார். பிறகு அவரது கல்விச் சான்றிதழ்களை வங்கி நிர்வாகம் ஆய்வு செய்தபோது, அவர் பட்டப்படிப்பை மறைத்து வேலையில் சேர்ந்தது தெரிய வந்தது. இதையடுத்து அவரை வங்கி நிர்வாகம் பணி நீக்கம் செய்தது.
இதற்கு எதிராக ஒடிசா உயர் நீதிமன்றத்தில் அமித் குமார் வழக்கு தொடர்ந்தார். இதில் அவருக்கு மீண்டும் பணி வழங்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
ஆனால் வங்கி நிர்வாகம் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. இந்த வழக்கு நீதிபதி கள் அசோக் பூஷண், ஆர்.சுபாஷ் ரெட்டி, ஆர்.எம்.ஷா ஆகியோர் அடங்கிய அமர்வு முன்நேற்று விசாரணைக்கு வந்தது.விசாரணைக்கு பிறகு நீதிபதிகள்தங்கள் உத்தரவில் கூறியிருப் பதாவது:
ஒரு தகவலை மறைத்து அல்லது தவறான தகவல் அளித்து பணியில் சேரும் ஒருவர், பணியில் தொடரும் உரிமையை கோர முடியாது. விண்ணப்பதார்கள் பட்டதாரியாக இருக்கக் கூடாது என வங்கி தனது விளம்பரத்தில் கூறியுள்ளது. இந்த தகுதி அளவு கோலை எதிர்க்காத அமித் குமார், தனது தகுதியை மறைத்து பணிக்கு விண்ணப்பித்துள்ளார். இது அவரது தவறான நடத்தையை வெளிப்படுத்துகிறது. மேலும் தேர்வு நடைமுறையை அவர் ஏற்றுக்கொண்டதாக ஆகிறது.
முதலாளிதான் முடிவு செய்வார்
பதவி நீக்கத்துக்கு கூடுதல் தகுதி ஒரு காரணமாக இருக்க முடியாது என்ற அவரது வாதத்தை ஏற்க முடியாது. ஒரு பணிக்கான தகுதியை முதலாளிதான் முடிவு செய்ய வேண்டும். அதை நீதி மன்றம் ஆராயவும் மதிப்பிடவும் முடியாது. என்றாலும் பதவிக்கான தகுதிகளை பரி்ந்துரைப்பதில் முதலாளி தன்னிச்சையாக அல்லது கற்பனையாக செயல்பட முடியாது. இவ்வாறு நீதிபதிகள் கூறியுள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT