Published : 04 Nov 2020 01:18 PM
Last Updated : 04 Nov 2020 01:18 PM

கோவிட்-19 காலத்திற்குப் பிறகு உலகப் பொருளாதாரத்தில் இந்தியா முன்னோடியாக திகழும்: ஜிதேந்திர சிங் நம்பிக்கை

கோவிட்-19 காலத்திற்குப் பிறகு உலகப் பொருளாதாரத்தில் இந்தியா முன்னோடியாக திகழும் என மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

மத்திய வடக்கு கிழக்கு மாகாண வளர்ச்சிக்கான இணை அமைச்சரும், பிரதமர் அலுவலகம், பணியாளர் பொதுமக்கள் குறைகள் மற்றும் ஓய்வூதியம், அணுசக்தி மற்றும் விண்வெளித் துறைகளுக்கான இணை அமைச்சருமான டாக்டர் ஜிதேந்திர சிங், கோவிட்-19 காலத்திற்குப் பிறகு மூலதன சந்தைகளின் மூலம் பொருளாதாரத்தை மீட்டெடுப்பது குறித்து ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இணையக் கருத்தரங்கை தொடங்கி வைத்தார்.

இந்திய நிறுவன செயலாளர்கள் அமைப்பின் (ஐசிஎஸ்ஐ) வட இந்திய மண்டலக் குழு, புதுதில்லி, இந்த இணையக் கருத்தரங்கை ஏற்பாடு செய்திருந்தது.

நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங், பிரதமர் நரேந்திர மோடி தலைமையில், இந்தியா, கோவிட்-19 காலகட்டத்திற்குப் பிறகு உலக பொருளாதாரத்தில் முதன்மையாக திகழும் என்று கூறினார்.

கரோனா நோய் தொற்றுப் பரவலை கருத்தில்கொண்டு இந்திய அரசு முன்கூட்டியே பொது முடக்கத்தை அறிவித்ததன் மூலம் பலரது உயிர்கள் காப்பாற்றப்பட்டு இந்திய பொருளாதாரத்திற்கும் கூடுதல் பாதிப்பு ஏற்படவில்லை என்று அவர் தெரிவித்தார்.

இந்திய பொருளாதாரத்தில் வடகிழக்கு மாகாணங்களின் பங்கு குறித்து பேசிய அமைச்சர் ஜிதேந்திர சிங், இந்த பகுதிகளில் தக்க தருணத்தில் பொது முடக்கம் அறிவிக்கப்பட்டதன் வாயிலாக கோவிட்-19 தொற்று பாதிப்பு இங்கு மிகக் குறைவு என்றும் கொரோனா பரவல் காலத்திற்குப் பிறகு ஐரோப்பிய சுற்றுலாத் தலங்களுக்கு மாற்றாக இந்தியாவின் வடகிழக்கு மாகாணங்கள் வளர்ச்சி அடையும் என்றும் நம்பிக்கை தெரிவித்தார்.

வட கிழக்கு மாகாணங்களில் அதிகம் விளையும் மூங்கில், நாட்டின் பொருளாதார நடவடிக்கைக்கு முக்கிய தூணாக விளங்கும் என்றார் அவர். கோவிட்-19 பரவல் காலகட்டத்திற்குப் பிறகு இந்திய பொருளாதாரத்தை மீட்டெடுக்கும் வகையில் புதிய உந்துசக்தியாக வடகிழக்கு மாகாணங்கள் வளர்ச்சி அடையும் என்று அவர் கூறினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x