Published : 04 Nov 2020 03:13 AM
Last Updated : 04 Nov 2020 03:13 AM
டெல்லியில் கரோனா நோயாளிகளின் வீடுகளுக்கு வெளியே நோட்டீஸ் ஒட்டப்படுவதை எதிர்த்து, வழக்கறிஞர் குஷ் கர்லா டெல்லி உயர் நீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்தார்.
அந்த மனுவில், “கரோனா நோயாளிகளின் வீடுகளுக்கு வெளியே நோட்டீஸ்ஒட்டுவது அவர்களின் அந்தரங்கஉரிமை, வாழும் உரிமை மற்றும் தனிப்பட்ட சுதந்திரத்துக்கு எதிரானது. குடியிருப்போர் நலச்சங்க உறுப்பினர்களிடமும் சமூக ஊடக குழுக்களிலும் கரோனா நோயாளிகளின் பெயர்கள் பகிர்ந்து கொள்ளப்படுகிறது. இது நோயாளிகளை களங்கப்படுத்துவதாக உள்ளது” என கூறியிருந்தார்.
இந்த மனு நீதிபதிகள் ஹிமா கோலி, சுப்ரமணியம் பிரசாத் ஆகியோரைக் கொண்ட அமர்வு முன் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது டெல்லி அரசுத்தரப்பில், “கரோனா நோயாளிகளின் வீடுகளுக்கு வெளியே நோட்டீஸ் ஒட்டுவதற்கு எதிராக அதிகாரிகளுக்கு விரைவில் சுற்றறிக்கை அனுப்பப்படும். ஏற்கெனவே ஒட்டப்பட்டிருந்த நோட்டீஸ்கள் உடனடியாக அகற்றப்படும்” என உறுதி அளிக்கப்பட்டது.
இதையடுத்து நீதிபதிகள், “கரோனா நோயாளிகளின் பெயர்களை வெளியிடக்கூடாது. குறிப்பாக குடியிருப்போர் நலச் சங்க உறுப்பினர்கள் அல்லது சமூக ஊடகக் குழுக்களிடம் பகிர்ந்துகொள்ளக் கூடாது. இது தொடர்பாகவும் அதிகாரிகளுக்கு சுற்றறிக்கை அனுப்ப வேண்டும்” என உத்தரவிட்டனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT