Published : 04 Nov 2020 03:13 AM
Last Updated : 04 Nov 2020 03:13 AM
அமெரிக்கா, ஜப்பான், ஆஸ்திரேலியாகடற்படைகளுடன் இணைந்து இந்தியா கூட்டுப் போர் பயிற்சியை நேற்று தொடங்கியது.
ஆண்டுதோறும் பல்வேறு நட்பு நாடுகளின் கடற்படை கப்பல்கள் ஒத்துழைப்புடன் இந்திய கடற்படை கூட்டு போர் பயிற்சியை நடத்துவது வழக்கம். அந்த வகையில் இந்த ஆண்டு அமெரிக்கா, ஜப்பான், ஆஸ்திரேலிய கடற்படை கப்பல்களுடன் இந்தியா கூட்டு போர் பயிற்சியை நேற்று தொடங்கியது. இந்தப் பயிற்சிக்கு மலபார் கடற்பயிற்சி ஒத்திகை என பெயரிடப்பட்டுள்ளது.
வங்கக் கடலில் மலாக்கா நீரிணை அருகே இந்தப் பயிற்சி நேற்று அதிகாலை தொடங்கியது. இதைத் தொடர்ந்து அரபிக் கடலிலும் இதேபோன்ற போர் பயிற்சி ஒத்திகையை நடத்த இந்த 4 நாடுகளும் முடிவு செய்துள்ளன. இந்திய - பசிபிக் பிராந்தியத்தில், அமைதியை பராமரித்து, சுதந்திரமான கப்பல் போக்குவரத்துக்கு வழிவகை செய்ய, அமெரிக்கா, இந்தியா, ஆஸ்திரேலியா, ஜப்பான் ஆகியவை இணைந்து, 'குவாட்' என்ற அமைப்பை உருவாக்கியுள்ளன. இந்த அமைப்பின்சார்பில் முதன் முறையாக கூட்டுபோர் பயிற்சி தொடங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்த பயிற்சியின்போது இந்திய கடற்படையைச் சேர்ந்த ஒரு நீர்மூழ்கிக் கப்பல் உட்பட 5 கப்பல்கள் பங்கேற்றன. அமெரிக்க கடற்படையின் ஏவுகணை அழிப்பு கப்பல், ஆஸ்திரேலியாவின் பல்லாரட் பிரிகேட் கப்பல், ஜப்பானின் பிரம்மாண்ட போர்க்கப்பல் ஆகியவை பங்கேற்றதாக இந்திய கடற்படை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முதல் கட்ட போர் பயிற்சி ஒத்திகை நவம்பர் 6-ம் தேதி வரை நடைபெறும். இதைத் தொடர்ந்து இந்திய, அமெரிக்க விமானம் தாங்கி போர்க்கப்பல்களும் பயிற்சியில் ஈடுபடுத்தப்படும்.
இதுகுறித்து ஆஸ்திரேலிய பாதுகாப்புத் துறை அமைச்சர் லிண்டா ரெனால்ட்ஸ் கூறும்போது, “ஒத்த கருத்துடைய நாடுகளுடன் இணைந்து பணிபுரிவதில் ஆஸ்திரேலியாவுக்கு எப்போதும் விருப்பம்தான். இதுபோன்ற நாடுகளுடன் இணைந்து பணிபுரிவது அவசியமான ஒன்று. ஆஸ்திரேலியாவுக்கு இது ஓர் முக்கிய வாய்ப்பு” என்றார்.
இரண்டாவது கட்ட பயிற்சி, அரபிக் கடலில், நவம்பர் 17 முதல் 20-ம் தேதி வரை நடைபெறும் என, அறிவிக்கப்பட்டுள்ளது. மலபார் போர் பயிற்சியில், இந்தாண்டு முதல் முறையாக ஆஸ்திரேலிய கடற்படையும் இணைய சம்மதித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
வங்கக் கடல் முழுவதையும் தனது கட்டுப்பாட்டில் வைத்திருக்க சீனா முயன்று வருகிறது. இதனால் நமது அண்டை நாடுகளான இலங்கை, பாகிஸ்தானுக்கு துறைமுகங்கள் அமைப்பதில் சீனா உதவி புரிந்து வருகிறது.
இந்நிலையில், இந்த குவாட் அமைப்பு நாடுகளின் கூட்டு போர் பயிற்சிக்கு சீனா எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இந்த 4 நாடுகளும் நேட்டோ போன்ற ஒரு கூட்டணியை உருவாக்க முயற்சிப்பதாக சீனா குற்றம்சாட்டி உள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT