Published : 10 Mar 2014 12:00 AM
Last Updated : 10 Mar 2014 12:00 AM
வாரணாசியில் நரேந்திர மோடி போட்டியிடும் விவகாரத்தில், கட்சியின் மேலிடம் எடுக்கும் முடிவிற்குக் கட்டுப்படுவதாக பாரதிய ஜனதாவின் மூத்த தலைவர் முரளி மனோகர் ஜோஷி ஞாயிற்றுக்கிழமை கூறியுள்ளார்.
அலகாபாத்தில் இருந்து 2009 தேர்தலில் வாரணாசிக்கு மாற்றப்பட்டு எம்பியாக இருக்கும் ஜோஷிக்கு பதிலாக மோடியை அங்கு போட்டியிடவைக்க பாஜக திட்டமிட்டுவந்தது.
இதனால் அதிருப்தியாக இருந்த ஜோஷிக்கு ஆதரவாக சுஷ்மா ஸ்வராஜ் கடந்த சனிக்கிழமை பாஜகவின் தலைமையகத்தில் நடந்த ஆட்சிமன்ற குழு கூட்டத்தில் ராஜ்நாத்சிங்கிடம் எதிர்ப்பு காட்டியதாகக் கூறப்பட்டது. இதற்கு விளக்கம் அளிக்கும் வகையில் முதன்முறையாக பேசினார் ஜோஷி.
இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய ஜோஷி கூறியதாவது: உபியின் வாரணாசியில் போட்டியிடுவது குறித்து 13-ம் தேதி கூட இருக்கும் ஆட்சிமன்ற குழு முடிவு எடுக்கும். இதில், கட்சியின் மேலிடம் எடுக்கும் முடிவை ஏற்றுக் கொள்ளத் தயாராக இருக்கிறேன்.
வாரணாசி தொகுதியில் போட்டியிடுவது குறித்து இரு ஆதரவாளர்களுக்கு இடையே மோதல் என வெளியான செய்திகளில் உண்மை இல்லை. அங்கு சுவரொட்டி கள் ஒட்டப்பட்டுள்ளது பிரச்சாரத்திற் காக அல்ல. அவை வர இருக்கும் ஹோலி பண்டிகைக்கு வாழ்த்து கூறும் விதத்தில் ஏற்கனவே ஒட்டப்பட்ட பழைய சுவரொட்டிகள்.
இதுபோன்ற விஷயங்களை நான் வெளியில் பேசவே இல்லை. இதன் மீது இதுவரை வெளியான செய்திகள் என்னை மிகவும் கவலைக்குள்ளாக்கி உள்ளன. பிரதமர் வேட்பாளரான மோடியின் கௌரவம் மற்றும் கட்சியின் வெற்றியை பாதிக்காத வகையில் மேலிடம் எந்த முடிவையும் எடுக்காது.’ எனக் கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT