Published : 03 Nov 2020 05:29 PM
Last Updated : 03 Nov 2020 05:29 PM
மத்திய அரசு கொண்டுவந்த வேளாண் சட்டங்களுக்கு எதிராகப் பஞ்சாப் அரசு கொண்டுவந்து நிறைவேற்றியுள்ள சட்டங்களுக்கு ஒப்புதல் வழங்கக் கோரி குடியரசுத் தலைவரைச் சந்திக்க முயன்ற பஞ்சாப் முதல்வர் அமரிந்தர் சிங்கிற்கு இன்று அனுமதி மறுக்கப்பட்டது.
இதையடுத்து, நாளை ராஜ்காட் பகுதியில் முதல்வர் அமரிந்தர் சிங் பேரணியிலும், தர்ணா போராட்டத்திலும் ஈடுபட உள்ளார்.
மத்திய அரசு வேளாண் துறை தொடர்பான வேளாண் விளைபொருள் வர்த்தக மசோதா, விவசாயிகளின் விளைபொருட்களுக்கு உரிய விலை கிடைக்க உத்தரவாதம் அளிக்கும் மசோதா, அத்தியாவசியப் பொருட்கள் திருத்த மசோதா ஆகியவற்றைச் சமீபத்தில் கொண்டு வந்து நாடாளுமன்றத்தில் நிறைவேற்றியது. இதற்குக் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தும் ஒப்புதல் அளித்துவிட்டார்
இந்தச் சட்டம் விவசாயிகளுக்கு எதிரானது எனக் கூறி நாடு முழுவதும் விவசாயிகள், வேளாண் தொழிலாளர் அமைப்புகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதில் பஞ்சாப், ஹரியாணா மாநிலங்களில் ரயில் மறியல் போராட்டம் நடந்தது. இன்னும் அங்கு ரயில்கள் முழுமையாக இயக்கப்படவில்லை.
இந்நிலையில் மத்திய அரசு கொண்டுவந்த வேளாண் சட்டங்களுக்கு எதிராக பஞ்சாப் அரசு 3 மசோதாக்களைக் கொண்டு வந்து நிறைவேற்றியது. பஞ்சாப் மாநிலத்தைத் தொடர்ந்து ராஜஸ்தான் மாநிலமும் இதேபோன்று வேளாண் சட்டங்களுக்கு எதிரான மசோதாக்களை சட்டப்பேரவையில் அறிமுகம் செய்துள்ளது.
இந்நிலையில் பஞ்சாப் சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட வேளாண் மசோதாக்களுக்குக் குடியரசுத் தலைவர் ஒப்புதல் அளிக்கக் கோரி, அவரைச் சந்திக்க பஞ்சாப் முதல்வர் அமரிந்தர் சிங் இன்று அனுமதி கோரியிருந்தார்.
ஆனால், பஞ்சாப் முதல்வர் அமரிந்தர் சிங் தலைமையிலான குழுவைச் சந்திக்க குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் மறுத்துவிட்டார்.
இதையடுத்து முதல்வர் அமரிந்தர் சிங் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில், “பஞ்சாப் மாநிலத்துக்கு ரயில் போக்குவரத்தையும் மத்திய அரசு நிறுத்திவிட்டது. இந்தச் சூழலை நாட்டுக்கு எடுத்துக்காட்ட எனது தலைமையில் டெல்லி ராஜ்காட்டில் பேரணியும், தர்ணா போராட்டமும் நாளை நடத்தப்படும்.
ரயில் போக்குவரத்து இல்லாததால், அனல் மின்நிலையத்துக்குத் தேவைப்படும் நிலக்கரி பற்றாக்குறை ஏற்பட்டு மின் உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளது. நாளை பஞ்சாப் எம்எல்ஏக்கள் டெல்லியில் உள்ள பஞ்சாப் பவனிலிருந்து ராஜ்காட் வழியாக மகாத்மா காந்தி சமாதி வரை பேரணி சென்று தர்ணா போராட்டம் நடத்துவார்கள்” எனத் தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT