Last Updated : 03 Nov, 2020 11:49 AM

 

Published : 03 Nov 2020 11:49 AM
Last Updated : 03 Nov 2020 11:49 AM

பிஹாரில் 2-ம் கட்டத் தேர்தல்: காலை 10 மணி வரை 8.14% வாக்குகள் பதிவு: நிதிஷ், தேஜஸ்வி வாக்களித்தனர்

பிஹாரில் இன்று நடக்கும் 2-ம் கட்டத் தேர்தலில் திகா நகரில் வாக்களித்த முதல்வர் நிதிஷ் குமார் : படம் | ஏஎன்ஐ.

பாட்னா

பிஹார் சட்டப்பேரவைத் தேர்தலில் 2-ம் கட்ட வாக்குப்பதிவு 94 தொகுதிகளுக்கு இன்று காலை 7 மணி முதல் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. காலை 10 மணி வரை 8.14 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன.

பிஹாரில் உள்ள 243 தொகுதிகளுக்கும் 3 கட்டங்களாகத் தேர்தல் நடக்கிறது. இதில் முதல் கட்டமாக 71 தொகுதிகளுக்குக் கடந்த மாதம் 28-ம் தேதி தேர்தல் நடந்து முடிந்தது. 2-வது கட்டமாக 94 தொகுதிகளுக்கு இன்று வாக்குப்பதிவு நடந்து வருகிறது. 3-வது கட்ட வாக்குப்பதிவு 7-ம் தேதியும், 10-ம் தேதி வாக்கு எண்ணிக்கையும் நடக்கிறது.

இன்று நடக்கும் 2-ம் கட்டத் தேர்தலில் ஆளுநர் பாகுசவுகான், முதல்வர் நிதிஷ் குமார், துணை முதல்வர் சுஷில் குமார் மோடி, மகாகட் பந்தன் கூட்டணித் தலைவரும் முதல்வர் வேட்பாளருமான தேஜஸ்வி யாதவ், லோக் ஜன சக்தி கட்சியின் தலைவர் சிராக் பாஸ்வான் ஆகியோர் போட்டியிடும் தொகுதிகளில் வாக்குப்பதிவு நடக்கிறது.

பாட்னா நகரில் வாக்குச்சாவடியில் வாக்களித்த தேஜஸ்வி யாதவ் : படம் | ஏஎன்ஐ.

காலை 7 மணி முதலே வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடந்து வருகிறது. கரோனா வைரஸ் தொற்று காரணமாக பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கைகள் செய்யப்பட்டுள்ளதால், வாக்களிக்கக் கூடுதலாக ஒரு மணி நேரம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

இதன்படி தேஜஸ்வி யாதவ் போட்டியிடும் வைஷாலி மாவட்டம், ரஹோபூரில் வாக்குப்பதிவு தொடங்கி 3 மணி நேரத்தில் 10 சதவீதம் வாக்குகள் பதிவாயின. தேஜஸ்வி யாதவை எதிர்த்து பாஜக சார்பில் சதீஷ்குமார் போட்டியிடுகிறார்.

லாலுபிரசாத் யாதவின் மூத்த மகன் தேஜ் பிரதாப் யாதவ் போட்டியிடும் ஹஸன்பூரில் வாக்குப்பதிவு தொடங்கி 3 மணி நேரத்தில் 7.21 சதவீத வாக்குகள் பதிவாயின.

வாக்குப்பதிவு தொடங்கியதிலிருந்து அதிகபட்சமாக கோபால்கஞ்ச் தொகுதியில் 10.75 சதவீதம் வாக்குகள் பதிவாயின. குறைந்தபட்சமாக தார்பங்கா மாவட்டத்தில் காலை 10 மணிவரை 5.79 சதவீத வாக்குகளே பதிவாயின.

லோக் ஜனசக்தி தலைவர் சிராக் பாஸ்வான் வாக்களித்த காட்சி

நிதிஷ் குமார் வாக்களித்துவிட்டு வெளியே வந்தபின் ஊடகங்களிடம் ஏதும் பேசாமல் சென்றுவிட்டார். ஆனால், தேஜஸ்வி யாதவ் வாக்களித்தபின் வெளியே வந்து நிருபர்களிடம், ''மக்கள் அரசு மீது கோபத்துடன் இருக்கிறார்கள். கல்வி, சுகாதாரம், நீர்ப்பாசனம், சட்டம் ஒழுங்கு ஆகியவற்றுக்காக வாக்களிப்பார்கள்” எனத் தெரிவித்தார்.

நக்சலைட் அச்சுறுத்தல் அதிகமாக இருக்கும் மாவட்டங்களில் மட்டும் வாக்குப்பதிவு மாலை 4 மணிக்கே முடிக்கப்படுகிறது.

இதேபோல 10 மாநிலங்களில் 54 தொகுதிகளுக்கான இடைத்தேர்தலும் இன்று நடக்கிறது.

உத்தரப் பிரதேசத்தில் 7 தொகுதிகள், மத்தியப் பிரதேசத்தில் 28 தொகுதிகள், குஜராத்தில் 8 தொகுதிகள், ஒடிசா, நாகாலாந்து, கர்நாடாகா, ஜார்க்கண்ட் மாநிலங்களில் தலா 2 தொகுதிகள், சத்தீஸ்கர், தெலங்கானா, ஹரியாணாவில் தலா ஒரு தொகுதிக்கு இடைத்தேர்தல் இன்று நடந்து வருகிறது.

உத்தரப் பிரதேசத்தில் காலை வாக்குப்பதிவு தொடங்கி 3 மணி நேரத்தில் 8 சதவீத வாக்குகள் பதிவாயின என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. மத்தியப் பிரதேசத்தில் 28 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் இன்று நடக்கிறது. காலை 10 மணி வரை 11. 50 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளன என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x