Published : 02 Nov 2020 06:23 PM
Last Updated : 02 Nov 2020 06:23 PM
மாநிலங்களவைத் தேர்தலில் உத்தர பிரதேசத்தில் பாஜக சார்பில் போட்டியிட்ட 8 பேரும், சமாஜ்வாதி மற்றும் பகுஜன் சமாஜ் கட்சிகள் சார்பில் போட்டியிட்ட தலா ஒருவரும் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
உத்திரப் பிரதேசம் மற்றும் உத்தரகாண்ட் மாநிலங்களில் இருந்து மாநிலங்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டவர்களில் 11 உறுப்பினர்களின் பதவிக்காலம் நவம்பர் மாதத்தோடு நிறைவடைகிறது.
உத்திரப் பிரதேசத்தில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட பாஜகவின் அருண் சிங், நீரஜ் சேகர், ஹர்தீப் சிங் புரி ஆகியோரும் சமாஜ்வாதிக்கட்சியின் டாக்டர் சந்திரபால் சிங் யாதவ், ஜாவெத் அலி கான், ராம்கோபால் யாதவ், ராம பிரகாஷ் வர்மா ஆகியோர் ஓய்வு பெறுகின்றனர். பகுஜன் சமாஜ் கட்சி சார்பில் ராஜாராம், வீர் சிங், காங்கிரஸ் சார்பில் பன்னா லால் பூனியாவும் ஓய்வு பெறுகின்றனர்.
தேர்தலுக்கான அறிவிக்கை கடந்த மாதம் 20-ம் தேதி வெளியிடப்பட்டது. வேட்பு மனுக்களை தாக்கல் செய்வதற்கான கடைசி நாள் அக்டோபர் 27ம் தேதி ஆகும். வேட்பு மனுக்களை திரும்ப பெறுவதற்கான கடைசி தேதி நவம்பர் 2-ம் தேதி என அறிவிக்கப்பட்டது. போட்டி இருந்தால் வரும் நவம்பர் 9-ம் தேதி தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.
பாஜக சார்பில் மத்திய அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி, அருண் சிங், ஹரித்துவார் துபே, பிரஜ் லால், நீரஜ் ஷேகர், கீதா சாக்யா, சீமா திவேதி, பி.எல். சர்மா ஆகியோர் போட்டியிட்டனர். சமாஜ்வாதி கட்சி சார்பில் போட்டியிட்ட ராம் கோபால் யாதவ், பகுஜன் சமாஜ் கட்சி சார்பில் ராம்ஜி கவுதம் ஆகியோர் வேட்புமனுத் தாக்கல் செய்தனர்.
உ.பி.யில் மொத்தமுள்ள 403 உறுப்பினர்களில் தற்போது அவையில் 395 உறுப்பினர்கள் இருக்கின்றனர். இதில் பாஜகவுக்கு மட்டும் 304 உறுப்பினர்கள் பலம் இருக்கிறது. ஒரு எம்.பி. சீட்டுக்கு 38 எம்எல்ஏக்கள் வாக்கு தேவை என்ற ரீதியில் பாஜக 8 இடங்களை எளிதாக வெல்ல முடியும்.
சமாஜ்வாதிக் கட்சியிடம் 48 எம்எல்ஏக்கள் இருப்பதால், ஒரு இடம் மட்டும் கிடைக்க வாய்ப்பு இருந்தது. பகுஜன் சமாஜ் கட்சிக்கு 18 எம்எல்ஏக்கள், அப்னா தளத்துக்கு 9 எம்எல்ஏக்கள், காங்கிரஸ் கட்சி, சுகல்தேவ் பாரதிய சமாஜ் கட்சிக்கு சேர்தது 7 எம்எல்ஏக்கள், 5 சுயேட்சைகள் உள்ளனர்.
மாநிலங்களவையில் 2 இடங்களைப் பெறுவதற்கான முயற்சியில் சமாஜ்வாதி கட்சி இறங்கியது. பகுஜன் சமாஜ் கட்சியின் 6 எம்எல்ஏக்கள் சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவைச் சந்தித்தனர்.
அவர்கள் விரைவில் சமாஜ்வாதி கட்சியில் சேரப்போவதாவும் தெரிவித்துள்ளனர். மேலும், பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலங்களவை வேட்பாளர் கவுதமை தாங்கள் ஆதரித்ததாக அளித்த கடிதம் போலியானது என்று தேர்தல் அதிகாரியிடம் பகுஜன் சமாஜ் கட்சி எம்எல்ஏக்கள் தெரிவித்தனர்.
எனினும் சமாஜ்வாதிக் கட்சி சார்பில் கூடுதலாக வேட்பாளர் யாரும் நிறுத்தப்படவில்லை. வேட்பு மனுக்களை திரும்பப் பெற இன்று கடைசி நாள் என்ற நிலையில் காலியாக இருந்த 10 இடங்களுக்கு பாஜக சார்பில் போட்டியிட்ட 8 பேரும், சமாஜ்வாதி மற்றும் பகுஜன் சமாஜ் கட்சிகள் சார்பில் தலா ஒருவரும் மட்டுமே மனுத்தாக்கல் செய்திருந்தனர். இதனால் அவர்கள் அனைவரும் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT