Published : 02 Nov 2020 02:20 PM
Last Updated : 02 Nov 2020 02:20 PM
எதிரெதிர் சித்தாந்தங்கள் கொண்ட பகுஜன் சமாஜ் கட்சி-பாஜக கூட்டணி சாத்தியமில்லை என்று பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவர் மாயாவதி தெரிவித்தார்.
பிஹாரில் சட்டப்பேரவைத் தேர்தலுக்கான இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு நாளை நடைபெற உள்ளது. உத்தரப் பிரதேசம், மத்தியப் பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களுக்கான இடைத்தேர்தல்களும் நடைபெற உள்ளன. பிரதமர் மோடி உள்ளிட்ட அனைத்துக் கட்சித் தலைவர்களும் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவர் மாயாவதி இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். லக்னோவில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஊடகச் சந்திப்பின்போது மாயாவதி கூறியதாவது:
''எதிர்வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் சமாஜ்வாதி கட்சியின் வேட்பாளரைத் தோற்கடிக்க எங்கள் கட்சி உறுதியாக உள்ளது. இதற்காக பாஜக உட்பட எந்தக் கட்சி வேட்பாளருக்கும் ஆதரவளிக்கத் தயார் என்று நான் கடந்த வாரம் பேசியது திரித்துக் கூறப்பட்டு வருகிறது. இதனால் எங்களுக்கும் முஸ்லிம் சமுதாயத்தினருக்கும் இடைவெளியை ஏற்படுத்த காங்கிரஸும் சமாஜ்வாதி கட்சியும் முயன்று வருகின்றன.
இதனை நான் வன்மையாகக் கண்டிக்கிறேன். அவர்களுக்கு நான் சொல்லிக்கொள்ள விரும்புவது இதுதான். பகுஜன் சமாஜ் கட்சி, பாஜகவுடன் கூட்டணி என்பது எதிர்காலத்தில் எந்தவொரு தேர்தலிலும் சாத்தியமில்லை. பகுஜன் சமாஜ் கட்சி வகுப்புவாதக் கட்சியுடன் இணைந்து போட்டியிட முடியாது.
எங்கள் சித்தாந்தம், அனைவருக்கும் மற்றும் அனைத்து மதங்களுக்கும் நன்மை என்பதாகும். இது பாஜகவின் சித்தாந்தத்திற்கு நேரெதிரானது. பகுஜன் சமாஜ் கட்சி எந்தக் காலகட்டத்திலும் வகுப்புவாத, சாதி மற்றும் முதலாளித்துவ சித்தாந்தங்களைக் கொண்டவர்களுடன் கூட்டணி வைக்க முடியாது. அத்தகைய கட்சிகளுடன் நட்பு கொள்வதை விட அரசியலில் இருந்து நான் சன்னியாசம் பெற்று விலகிவிடுவேன்.
நான் அனைத்து முனைகளிலும் வகுப்புவாத, சாதி மற்றும் முதலாளித்துவ சக்திகளை எதிர்த்துப் போராடுவேன். யாருக்கும் தலைவணங்கப் போவதில்லை''.
இவ்வாறு மாயாவதி தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT