Published : 02 Nov 2020 03:13 AM
Last Updated : 02 Nov 2020 03:13 AM
கரோனா தடுப்பூசியை அடுத்த ஆண்டு இரண்டாம் காலாண்டில் அறிமுகப்படுத்த பாரத் பயோடெக் நிறுவனம் திட்டமிட்டுள்ளது. இந்த தடுப்பூசி மருந்துக்கான அனுமதி கிடைக்கும் பட்சத்தில் உடனடியாக அறிமுகப்படுத்துவது சாத்தியமாகும் என்று நிறுவன அதிகாரிகள் தெரிவித்தனர்.
தற்போது கரோனா தடுப்பூசி பரிசோதனை முயற்சிகள் 3-வது கட்டமாக நாட்டின் பல்வேறு பகுதிகளில் வெற்றிகரமாக நடைபெற்று வருவதாக இந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந்திய மருத்துவக் கவுன்சில் ஆய்வு மையம், தேசிய வைராலஜி மையம் ஆகியவற்றுடன் இணைந்து கோவேக்ஸின் எனப்படும் தடுப்பு மருந்து உருவாக்கப்பட்டது. கரோனா வைரஸ் ஐசிஎம்ஆர் ஆய்வகத்தில் வைத்துபரிசோதிக்கப்பட்டு அதை அழிப்பதற்கான தடுப்பூசி உருவாக்கப்பட் டுள்ளது.
அனைத்து நிலையிலும் பரிசோதனை முடிவுகள் குறித்த விவரங்கள் தொகுக்கப்பட்டு, இந்த தடுப்பூசி எந்த அளவுக்கு பாதுகாப்பானது என்பதை நிரூபிக்கும் வகையிலான தரவுகள் அனைத்தும் துல்லியமாக பெறப்பட்டு சோதனைகள் நடத்தப்பட்டன.
இதன்படி அனைத்து நிகழ்வுகளும் சாதகமாக அமையும்போது தடுப்பூசி 2021-ல் 2-ம் காலாண்டில் நிச்சயம் விற்பனைக்கு வரும் என்று பாரத் பயோடெக் இன்டர்நேஷனல் நிறுவனத்தின் செயல் இயக்குநர் சாய் பிரசாத் தெரிவித்துள்ளார்.
நிறுவனம் உருவாக்கிய தடுப்பூசிக்கு இந்திய மருந்து கட்டுப்பாட்டு ஆணையம் (டிசிஜிஐ) அனுமதி அளித்தது. தற்போது 3-வது கட்ட பரிசோதனைக்கும் ஒப்புதல் அளித்துள்ளது. 3-வது கட்ட சோதனை நவம்பர் மாதத்தில் தொடங்கும் என்று சாய் பிரசாத் தெரிவித்தார்.
இந்தப் பரிசோதனையானது 14 மாநிலங்களில் 30 இடங்களில் மேற்கொள்ளப்படும். 2 முறை இந்த தடுப்பூசி செலுத்தப்பட்டு பரிசோதிக்கப்படும். ஒவ்வொரு மருத்துவமனையில் இருந்தும் 2 ஆயிரம் மாதிரி மருந்து அளிக்கப்பட்ட பிறகு எவ்விதம் செயல்படுகிறது என்பது ஆராயப்படும். இந்த தடுப்பூசி உருவாக்கத்துக்கு மட்டும் நிறுவனம் ரூ.350 கோடி முதல் ரூ.400 கோடி செலவிட்டுள்ளதாக அவர் கூறினார்.
இந்த தடுப்பூசியை அரசுக்கு வழங்குவது மற்றும் தனியாருக்கு விற்பனைக்கு அளிப்பது குறித்து பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது. பிற நாடுகளுக்கு அனுப்புவது தொடர்பான பேச்சுவார்த்தை ஆரம்பகட்டத்தில் உள்ளதாக பிரசாத் தெரிவித்தார்.
அதேசமயம் மருந்துக்கான விலையும் தீர்மானிக்கப்படவில்லை. இப்போதைக்கு 3-வதுகட்ட பரிசோதனையை வெற்றிகரமாக முடிக்க வேண்டும் என்பதில்நிறுவனம் தீவிரமாக உள்ளது என்று சாய் பிரசாத் கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT