Published : 02 Nov 2020 03:13 AM
Last Updated : 02 Nov 2020 03:13 AM
கர்நாடக மாநிலத்தில் கல்வி, வேலைவாய்ப்பில் கன்னட மொழித் திறன் தேர்வை கட்டாயமாக்குவது குறித்து அரசு பரிசீலித்து வருகிறது. இந்த தேர்வை நடத்துவதற்காக புதிய சட்டம் கொண்டு வர முடிவெடுக்கப்பட்டுள்ளது என்று மாநில அரசு அறிவித்துள்ளது.
இதுகுறித்து கன்னட வளர்ச்சித் துறை தலைவர் டி.எஸ்.நாகபரணா கூறியதாவது:
கர்நாடகாவில் அரசு, தனியார் நிறுவனங்களின் வேலைவாய்ப்பில் கன்னடர்களுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என்று நீண்ட காலமாக கோரி வருகிறோம். இதை ஏற்று அரசுத் துறைகளில் கன்னடர்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டு வருகிறது. பிற மொழியை சேர்ந்தவர்களை பணியில் சேர்த்தாலும் 6 மாதங்களில் கன்னடம் கற்குமாறு வலியுறுத்தப்படுகிறது.
பெங்களூருவில் உள்ள தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களில் பிற மாநிலங்களை சேர்ந்தவர்கள் அதிகளவில் பணியாற்றுகிறார்கள். இதனால் கர்நாடகாவில் இருப்போருக்கு வேலை கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. எனவே, தனியார் நிறுவனங்களில் கர்நாடகாவை சேர்ந்தவர்களுக்கு இடஒதுக்கீடு வழங்க வேண்டும். அதற்காக புதிய சட்டத்தை கொண்டு வருமாறு அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளோம்.
மத்திய அரசு நிறுவனங்களில் பணியில் சேர்வதற்கு தேர்வு நடத்துவதைப் போல கர்நாடகாவில் அரசு பணியில் இணையும் ஊழியர்களுக்கும் கன்னட மொழித் திறன் தேர்வு நடத்த வேண்டும். அதே போல கர்நாடகாவில் உள்ள கல்வி நிறுவனங்களில் சேரும் மாணவர்களுக்கும் இந்த தேர்வு நடத்த வேண்டும். இதற்காக புதிய சட்டத்தை இயற்ற வேண்டும் என முதல்வர் எடியூரப்பாவுக்கு கோரிக்கை விடுத்துள்ளோம்.
இவ்வாறு நாகபரணா தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து கன்னட மொழி மற்றும் கலாச்சாரத் துறை அமைச்சர் சி.டி.ரவி கூறும்போது, "கல்வி, வேலைவாய்ப்பில் கன்னட மொழித் திறன் தேர்வை கட்டாயமாக்குவது குறித்து அரசு பரிசீலித்து வருகிறது.
இதன் மூலம் கர்நாடகாவை சேர்ந்தவர்களும், கன்னட மொழியை சேர்ந்தவர்களும் அதிகளவில் பயனடைவார்கள். வெளி மாநிலங்களில் இருந்து வருவோர் உள்ளூர் மொழியை கற்பார்கள்.
இந்த தேர்வை நடத்துவதற்காக புதிய சட்டம் கொண்டு வர முடிவெடுக்கப்பட்டுள்ளது. கர்நாடகாவை ஆண்ட பிற கட்சிகள் இது பற்றி பேசி இருந்தாலும், இதை செயல்படுத்துவதில் பாஜக மட்டுமே உறுதியோடு இருக்கிறது'' என்றார்.
முதல்வர் அறிவிப்பு
கன்னட ராஜ்யோத்சவ தினத்தை முன்னிட்டு பெங்களூருவில் நேற்று நடைபெற்ற கன்னட கலாச்சார விழாவில் முதல்வர் எடியூரப்பா பங்கேற்றார். அவர் கூறும்போது, ''கர்நாடகாவில் அனைத்து நிலைகளிலும் கன்னடம் கட்டாயமாக்கப்படும். இங்கு வாழும் அனைவரும் கன்னடம் கற்க வேண்டும். இந்த ஆண்டு முழுவதும் கன்னட மொழியை எல்லா தளங்களிலும் வளர்க்க தொடர் நிகழ்ச்சிகள் நடத்தப்படும்'' என அறிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT