Published : 02 Oct 2015 03:37 PM
Last Updated : 02 Oct 2015 03:37 PM
பக்ரீத்தில் பசு மாடு பலி கொடுத்ததாக இக்லாக் அடித்து கொல்லப்பட்டார். இந்த சம்பவத்தை சிபிஐ விசாரிக்க வேண்டும் என இக்லாக்கின் தாய் அஸ்கரி கோரியுள்ளார். இத்துடன் அங்குள்ள முஸ்லிம் குடும்பங்கள் அக்கிராமத்தை விட்டு வெளியேற ஆலோசித்து வருவதாகவும் தெரிய வந்துள்ளது.
டெல்லியில் இருந்து சுமார் 56 கி.மீ தொலைவில் உள்ள பிசோதா கிராமம், உபி மாநிலம் தாத்ரி தாலுக்காவில் அமைந்துள்ளது. இங்கு கடந்த வெள்ளிக்கிழமை கொண்டாடப்பட்ட பக்ரீத் பண்டிகைக்காக பசு மாடு பலி கொடுத்து அதன் இறைச்சியை உண்டதாக கிளம்பிய வதந்தியில், 52 வயது இக்லாக் அடித்துக் கொல்லப்பட்டார்.
கடந்த திங்கள் கிழமை நடந்த இந்த சம்பவத்தில் அவரது குடும்பத்தினரும் அப்பகுதி கிராமத்தினரால் கடுமையாக தாக்கப்பட்டனர். இதனால் அதிர்ந்து போன பிசோதாவில் வசிக்கும் சுமார் 50 முஸ்லிம் குடும்பங்கள் பாதுகாப்பு கருதி அக்கிராமத்தை விட்டு வெளியேற முடிவு செய்துள்ளனர். இதற்கு உபி அரசு மற்றும் போலீஸார் மீது அவர்களுக்கு நம்பிக்கை இல்லாதது காரணம் எனக் கருதப்படுகிறது.
இது குறித்து ‘தி இந்து’விடம் அக்கிராமம் அமைந்துள்ள கௌதம புத்தர் மாவட்டத்தின் ஊரகப் பகுதி காவல்துறை கண்காணிப்பாளரான சஞ்சய்சிங் கூறுகையில், ‘நான் உதவி ஆட்சியர் மற்றும் போலீஸ் படைகள் சகிதம் கடந்த இரண்டு நாட்களாக அக்கிராமத்தில் முகாம் அமைத்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகிறோம். இதனால் அமைதி திரும்பினாலும், கிராமத்தினர் இடையே லேசான பயம் நிலவுகிறது. முஸ்லிம் சமூகத்தினருக்கு முழு பாதுகாப்பு அளிக்கப்படுவதால் அவர்கள் பயப்படத் தேவை இல்லை. இதற்காக அக்கிராமத்தை விட்டு வெளியேறவும் அவசியம் இல்லை.’ என தெரிவித்தார்.
இந்நிலையில், அடித்துக் கொல்லப்பட்ட இக்லாக்கின் தாயான அஸ்கரி தன் குடும்பத்திற்கு எதிராக நடைபெற்ற சம்பவத்தில் சிபிஐ விசாரணை நடத்தப்பட வேண்டும் எனக் கோரியுள்ளார். இது ஒரு திட்டமிட்ட சம்பவமாக இருக்கும் என தாம் சந்தேகப்படுவதால் அதன் மீது சிபிஐ விசாரணை நடத்த உபி அரசு பரிந்துரைக்க வேண்டும் என அதன் முதல் அமைச்சர் அகிலேஷ்சிங் யாதவிடம் வலியுறுத்தி உள்ளார். இந்த சம்பவத்தில் நாடு முழுவதும் பரபரப்பு ஏற்படுத்த சமூக இணையதளங்கள் காரணம் என அம் மாநில காவல்துறை இயக்குநர் ஜக்மோகன் யாதவ் புகார் கூறி உள்ளார்.
இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய ஜக்மோகன், ‘அமைதி திரும்பும் பிசோதாவில், இந்த சம்பவத்தின் மீது சமூக இணையதளங்களில் பதிவிடப்படும் கருத்துக்களால் பதட்டம் கிளப்ப முயற்சி நடைபெறுகிறது. இதன் பல பதிவுகள் சமூக இணையதள விதிமுறைகளை மீறும் வகையில் அமைந்துள்ளதாக நம் கட்டுப்பாட்டு அறைகள் நடத்தும் கண்காணிப்பில் தெரிய வந்துள்ளது. இதை மேலும் கண்காணித்து கட்டுப்படுத்த, எங்கள் கட்டுப்பாட்டு அறைகளில் கூடுதலான அலுவலர்களை நியமிக்க உள்ளோம்.’ எனக் கூறியுள்ளார்.
வதந்தியை ஆதாரமாக வைத்து நடந்ததாகக் கருதப்படும் சம்பவம் குறித்து பிசோதாவின் சிவன் கோயிலின் ஒலிபெருக்கியில் அறிவிப்பு செய்த அதன் பூசாரியிடம் போலீஸார் நேற்று எட்டு மணி நேரம் விசாரணை நடத்தினர். அதில், கடந்த திங்கள் கிழமை இரவு அறிமுகம் இல்லாத மூன்று இளைஞர்கள் கோயிலுக்கு வந்து இந்த அறிவிப்பை ஒலிபெருக்கியில் அளிக்கும்படி தம்மை பலவந்தப்படுத்தியதாக பூசாரி கூறியுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT