Published : 31 Oct 2020 07:14 PM
Last Updated : 31 Oct 2020 07:14 PM
வெங்காயம் வாங்குவதையே மொத்த வியாபாரிகள் நிறுத்திவிட்டனர். இருப்பு வைத்துக்கொள்ளும் வரம்பை அதிகரியுங்கள் என்று மத்திய நுகர்வோர் விவகாரங்கள், உணவு மற்றும் பொது விநியோக அமைச்சர் பியூஷ் கோயலுக்கு உத்தவ் தாக்கரே கடிதம் எழுதியுள்ளார்.
நாட்டிலேயே வெங்காயத்தை அதிக அளவில் உற்பத்தி செய்யும் முன்னணி மாநிலமாக மகாராஷ்டிரா திகழ்கிறது. நாட்டின் மொத்த உற்பத்தியில் மூன்றில் ஒரு பங்கு இங்கிருந்தே நாடு முழுவதும் ஏற்றுமதியாகிறது.
இந்தியாவில் இருந்து வெங்காயம் ஏற்றுமதியில் மகாராஷ்டிராவிலிருந்து மட்டுமே 80 சதவீதம். கடந்த பருவத்தில் மட்டும் இம்மாநிலத்தின் வெங்காய உற்பத்தி சுமார் 100 லட்சம் மெட்ரிக் டன் ஆகும்.
இந்த ஆண்டு, மகாராஷ்டிரா உள்ளிட்ட முக்கிய வெங்காயம் உற்பத்தி செய்யும் மாநிலங்களில் அதிகப்படியான மழை மற்றும் வெள்ளம், நிற்கும் காரீப் பயிரைச் சேதப்படுத்தியது ஆகிய காரணங்களால் 2020 செப்டம்பர்-அக்டோபர் மாதங்களில் வெங்காய விலை அதிகரித்தது.
இதனால் வெங்காய இருப்புக்கு மத்திய அரசு நிர்ணயித்துள்ள வரம்பை அதிகரிக்குமாறு மத்திய நுகர்வோர் விவகாரங்கள், உணவு மற்றும் பொது விநியோக அமைச்சர் பியூஷ் கோயலுக்கு மகாராஷ்டிர முதல்வர் உத்தவ் தாக்கரே கடிதம் எழுதியுள்ளார்.
இதுகுறித்து உத்தவ் தாக்கரே தனது கடிதத்தில் கூறியுள்ளதாவது:
''வெங்காயத்தை வியாபாரிகள் மிகக் குறைந்த இருப்பு வரம்பு வைத்துக்கொள்ள மத்திய அரசு நிர்ணயித்துள்ள அளவினால் பாதிக்கப்பட்டது சில்லறை வியாபாரிகள் மட்டுமல்ல, மொத்த (பெரிய) வியாபாரிகளும்தான்.
மொத்த வியாபாரிகள் 25 மெட்ரிக் டன் எனும் மிகக் குறைந்த இருப்பு வரம்பு காரணமாக விவசாயிகளிடமிருந்து வெங்காயம் வாங்குவதை நிறுத்திவிட்டனர். இது விவசாயிகளிடமிருந்து நுகர்வோருக்கு வழங்கல் சங்கிலியை முடக்கியுள்ளது. இதன் விளைவாக சில்லறைச் சந்தையில் வெங்காயத்தின் விலை அதிகரித்துள்ளது.
காரீஃப் பருவத்தில் விளையும் வெங்காயத்தின் வருகை நவம்பர் முதல் வாரத்தில் தொடங்கும். ஆனால் காரீஃப் வெங்காயம் அதிகம் வீணாகிவிடும். இந்த வெங்காயத்தை வர்த்தகர்கள் தற்போது வாங்குவதில்லை என்றால், மகாராஷ்டிராவில் விவசாயிகள் பெரும் இழப்பைச் சந்திக்க நேரிடும்.
கடந்த ஆறு மாதங்களில், கோவிட்-19 ஊரடங்கினால் வெங்காய விவசாயிகள் ஏற்கெனவே பாதிக்கப்பட்டுள்ளனர். வெங்காயம் இருப்பு வைத்திருக்கும் வரம்பை 1,500 மெட்ரிக் டன்னாக உயர்த்த வேண்டும். மொத்த வர்த்தகர்களுக்கு 25 மெட்ரிக் டன் மற்றும் சில்லறை விற்பனையாளர்களுக்கு இரண்டு மெட்ரிக் டன் என்ற வரம்பு வெங்காய விவசாயிகளுக்கும் வர்த்தகர்களுக்கும் கடுமையான கஷ்டங்களை ஏற்படுத்தியுள்ளது.
எனவே, வெங்காய இருப்பு வைத்துக்கொள்ளும் வரம்பை மத்திய அரசு மேலும் அதிகரிக்க வேண்டும்''.
இவ்வாறு உத்தவ் தாக்கரே கேட்டுக்கொண்டுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT