Published : 31 Oct 2020 06:34 PM
Last Updated : 31 Oct 2020 06:34 PM

இந்தியாவின் இரும்பு மனிதருக்கு நாடே கடமைப்பட்டுள்ளது: அமித் ஷா புகழாரம்

புதுடெல்லி

ஒற்றுமை தினத்தை முன்னிட்டு புதுடெலியில் சர்தார் பட்டேல் திருவுருவப் படத்திற்கு குடியரசுத் தலைவர், குடியரசுத் துணைத்தலைவர், மத்திய உள்துறை அமைச்சர் ஆகியோர் அஞ்சலி செலுத்தினர்.

இந்தியாவின் இரும்பு மனிதர் என்று அழைக்கப்படும் சர்தார் வல்லபாய் பட்டேலின் பிறந்த நாள், தேசிய ஒற்றுமை தினமாகக் கடைபிடிக்கப்படுகிறது. இதனை முன்னிட்டு டெல்லியில் உள்ள சர்தார் பட்டேல் சவுக்கில் சிறப்பு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ‌இந்த நிகழ்ச்சியில் குடியரசுத் தலைவர் ராம் நாத் கோவிந்த், குடியரசுத் துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடு, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா மற்றும் டெல்லி துணைநிலை ஆளுநர் அனில் பைஜால் ஆகியோர் சர்தார் வல்லபாய் பட்டேலின் திருவுருவச்சிலைக்குக் கீழ் வைக்கப்பட்டிருந்த அவரது படத்திற்கு மலர்தூவி மரியாதை செய்தனர்.

ஒற்றுமை தினத்தில் பேசிய மத்திய அமைச்சர் அமித் ஷா, "இரும்பின் உறுதியுடன் கூடிய சர்தார் பட்டேலின் தலைமை, அர்ப்பணிப்பு மற்றும் நாட்டுப்பற்று நம்மைத் தொடர்ந்து வழிநடத்திச் செல்லும்" என்று கூறினார்.

"நாட்டின் ஒற்றுமை, ஒருமைப்பாடு மற்றும் பாதுகாப்பை காப்பதுடன், இந்த தகவலை என் நாட்டு மக்கள் அனைவரிடமும் கொண்டு செல்ல அரும்பாடுபடுவேன் என்றும் நான் உறுதிமொழி ஏற்கிறேன். இந்த நாட்டை ஒன்றிணைக்க சர்தார் வல்லபாய் பட்டேல் மேற்கொண்ட நடவடிக்கைகள் அனைத்தையும் நினைவு கூறும் வகையில் இந்த உறுதிமொழியை நான் ஏற்கிறேன். மேலும் நாட்டின் பாதுகாப்பை உறுதிசெய்ய எனது பங்களிப்பை அளிப்பேன் என்றும் உறுதியளிக்கிறேன்" என்ற ஒற்றுமை உறுதிமொழியை அமித் ஷா செய்து வைத்தார்.

மேலும் அவர் பேசுகையில், "இந்தியாவை ஒன்றிணைப்பதிலிருந்து சோம்நாத் ஆலயத்தை மீண்டும் கட்டுவது வரையில் தனது வாழ்நாள் முழுவதையும் சர்தார் வல்லபாய் பட்டேல் நாட்டின் ஒற்றுமை மற்றும் ஒருமைப்பாட்டுக்காக அர்ப்பணித்தார். அவருக்கு நன்றிக் கடன்பட்ட நாட்டின் சார்பாக இந்தியாவின் இரும்பு மனிதரும், உயரிய தேசபக்தருமான சர்தார் பட்டேலுக்கு எனது மரியாதையை செலுத்துகிறேன்" என்று கூறினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x