Published : 31 Oct 2020 02:32 PM
Last Updated : 31 Oct 2020 02:32 PM
மத்திய அரசு கொண்டுவந்துள்ள 3 வேளாண் சட்டங்களுக்கு எதிராக, ராஜஸ்தான் அரசும் 3 மசோதாக்களை சட்டப்பேரவையில் இன்று அறிமுகம் செய்தது.
மத்திய அரசு கொண்டு வந்த 3 வேளாண் சட்டங்களுக்கு நாடு முழுவதும் விவசாயிகள், விவசாய அமைப்புகள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். பஞ்சாப், ஹரியாணா மாநிலங்களில் விவசாயிகள் ரயில் மறியல் போராட்டம், ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
இந்நிலையில் மத்திய அரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிராக பஞ்சாப் அரசு சட்டப்பேரவையைக் கூட்டி 3 மசோதாக்களை கடந்த 20-ம் தேதி நிறைவேற்றியது.
பஞ்சாப் அரசு சட்டப்பேரவையில் மசோதாக்களை நிறைவேற்றிய சில மணி நேரத்தில் ராஜஸ்தான் அரசும், சட்டப்பேரவையில் இதேபோன்று மசோதாக்கள் கொண்டு வந்து நிறைவேற்றுவோம் என அறிவித்திருந்தது.
அதன்படி, ராஜஸ்தான் சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் இன்று கூடியது. மாநிலச் சட்டப்பேரவை விவகாரத்துறை அமைச்சர் சாந்தி தாரிவால் மத்திய அரசின் 3 வேளாண் சட்டங்களுக்கு மாற்றாக 3 மசோதாக்களை அறிமுகம் செய்தார்.
அதாவது, வேளாண் துறை தொடர்பான வேளாண் விளைபொருள் வர்த்தக மசோதா, விவசாயிகளின் விளைபொருட்களுக்கு உரிய விலை கிடைக்க உத்தரவாதம் அளிக்கும் மசோதா, அத்தியாவசியப் பொருட்கள் திருத்த மசோதா ஆகியவற்றுக்கு எதிரான திருத்த மசோதாக்களை அறிமுகம் செய்தார்.
அதன்பின், சமீபத்தில் மறைந்த குடியரசு முன்னாள் தலைவர் பிரணாப் முகர்ஜி, மற்றும் மாநிலத் தலைவர்களுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டு அவை ஒத்தி வைக்கப்பட்டு திங்கள்கிழமை கூடும் என அறிவிக்கப்பட்டது.
காங்கிரஸ் கட்சி எந்தெந்த மாநிலங்களில் ஆட்சியில் இருக்கிறதோ அங்கு, மத்திய அரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிராக மசோதாக்களைத் தாக்கல் செய்து நிறைவேற்றிட வேண்டும் எனக் காங்கிரஸ் தலைமை அறிவுறுத்தி இருந்தது.
இது தொடர்பாக ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் கடந்த 20-ம் தேதி ட்விட்டரில் பதிவிட்ட கருத்தில், “சோனியா காந்தி, ராகுல் காந்தி தலைமையில் காங்கிரஸ் கட்சி நமக்கு உணவு வழங்கும் விவசாயிகளுக்காக முழுமையாகத் துணை நின்று, தேசிய ஜனநாயகக் கூட்டணி நிறைவேற்றிய விவசாயிகளுக்கு எதிரான சட்டத்தை எதிர்க்கும். பஞ்சாப் காங்கிரஸ் அரசு மசோதாக்களை நிறைவேற்றியுள்ளது.
அதைத் தொடர்ந்து ராஜஸ்தான் அரசும் வேளாண் சட்டங்களுக்கு எதிரான மசோதாக்களை நிறைவேற்றும்” எனத் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT