Published : 31 Oct 2020 12:09 PM
Last Updated : 31 Oct 2020 12:09 PM
புல்வாமா தீவிரவாதத் தாக்குதலுக்கான காரணமும், உண்மையும் பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் ஒப்புக் கொள்ளப்பட்டுள்ளது. தாக்குதல் நடந்த நேரத்தில் சிலர் அரசியல் லாபத்துக்காக அசிங்கமான அரசியல் செய்ததை மறந்துவிட முடியாது என்று பிரதமர் மோடி குற்றம் சாட்டினார்.
பாகிஸ்தான் நாடாளுமன்றம் என்று நேரடியாகக் குறிப்பிடாமல் அண்டை நாட்டின் நாடாளுமன்றத்தில் என்று பாகிஸ்தானைக் குற்றம் சாட்டி மோடி பேசினார்.
பாகிஸ்தான் அறிவியல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் பவாத் சவுத்ரி கடந்த இரு நாட்களுக்கு முன் நாடாளுமன்றத்தில் பேசுகையில், “புல்வாமா தீவிரவாதத் தாக்குதலை வெற்றிகரமாக நடத்தினோம்” என்று பேசியிருந்தது குறிப்பிடத்தக்கது.
சர்தார் வல்லவாய் படேலின் 145-வது பிறந்த நாள் இன்று கொண்டாடப்படுகிறது. குஜராத் மாநிலத்துக்கு இரு நாட்கள் பயணமாக நேற்று சென்ற பிரதமர் மோடி, நர்மதை மாவட்டத்தில் கேவாடியா கிராமத்தில் ஆரோக்கிய வனம், சிறுவர்கள் பூங்கா, ஊட்டச்சத்து பூங்கா, விலங்கியல் பூங்கா, கைவினைப் பொருட்கள் அருங்காட்சியகம் உள்ளிட்டவற்றைத் திறந்து வைத்தார்.
நர்மதை அணை அருகே அமைக்கப்பட்டுள்ள ஒற்றுமையின் சிலையான சர்தார் வல்லபாய் படேலின் சிலைக்கு அவரின் 145-வது பிறந்த நாளான இன்று பிரதமர் மோடி மலர்கள் தூவி மரியாதை செலுத்தினார். அதன்பின் வீரர்களின் அணிவகுப்பு மரியாதையையும் ஏற்றுக்கொண்டார்.
அங்கு நடந்த நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேசியதாவது:
''ஜம்மு காஷ்மீரில் 40 சிஆர்பிஎஃப் வீரர்கள் கொல்லப்பட்ட புல்வாமா தீவிரவாதத் தாக்குதலுக்கு யார் காரணம் எனும் உண்மை அண்டை நாட்டின் (பாகிஸ்தான்) நாடாளுமன்றத்தில் ஒப்புக் கொள்ளப்பட்டுள்ளது. புல்வாமா தீவிரவாதத் தாக்குதல் நடந்த நேரத்தில் தேசமே சோகத்தில் மூழ்கி வீர மரணம் எய்திய வீரர்களுக்காக அஞ்சலி செலுத்தியது.
ஆனால், அந்த நேரத்தில் சிலர் தங்கள் அரசியல் ஆதாயத்துக்காக, அசிங்கமான அரசியல் செய்யும் நோக்கில், அகங்காரத்தில் தேவையில்லாத கருத்துகளைப் பேசியதை எளிதில் மறந்துவிட முடியாது. அண்டை நாட்டின் நாடாளுமன்றம் புல்வாமா தீவிரவாதத் தாக்குதலுக்கான காரணத்தை ஒப்புக்கொண்டபின், உண்மையை ஏற்றுக்கொண்டபின், சிலரின் உண்மையான முகம் வெளிப்பட்டுவிட்டது.
அரசியல் லாபத்துக்காக சிலர் எந்த எல்லைக்கும் செல்வார்கள் என்பதை புல்வாமா தாக்குதலுக்குப் பின் நடந்த சம்பவங்கள் வெளிப்படுத்தின.
இதுபோன்று அரசியல் செய்யாதீர்கள். அது நமது தேசத்தைப் பாதுகாக்கும் வீரர்களின் தன்னம்பிக்கையைக் குலைத்துவிடும் என்று அரசியல் கட்சிகளிடம் கேட்டுக்கொள்கிறேன். தெரிந்தோ, தெரியாமலோ தேசிய விரோத சக்திகளின் கரங்களில் நீங்கள் சிக்குவதைத் தவிர்க்க வேண்டும்.
உலகில் உள்ள அனைத்து நாடுகளும் தீவிரவாதத்துக்கு எதிராக ஒன்று திரண்டு போராடுகின்றன. வன்முறை மற்றும் தீவிரவாதத்தால் எந்த நாடும் பயன்பெற முடியாது. தீவிரவாதத்தை எதிர்த்து எப்போதும் இந்தியா போராடும்.
காஷ்மீர் இன்று புதிய வளர்ச்சிப் பாதையை நோக்கி நகர்ந்து வருகிறது. வடகிழக்கில் அமைதியை நிலைநாட்டுவதாக இருந்தாலும் சரி, வளர்ச்சியைக் கொண்டுவருவதாக இருந்தாலும் சரி, இன்று இந்த தேசம், ஒற்றுமையின் புதிய பரிமாணத்தை அடைந்துள்ளது.
சர்தார் சரோவிலிருந்து சபர்மதி நதிவரை நீரிலும், ஆகாயத்திலும் செல்லும் விமானச் சேவை இன்று அறிமுகப்படுத்தப்பட உள்ளது . இதன் மூலம் சுற்றுலா வளர்ச்சி பெறும்.
பிரிவுகளாக இருந்த இந்தியாவை ஒன்று திரட்டி இன்று ஒரு உருவமாக மாற்றியவர் சர்தார் வல்லபாய் படேல்தான். பல்வேறு சிற்றரசுகளை ஒன்றாக இணைத்து நாட்டைக் கட்டமைத்தவர் வல்லபாய் படேல். கடந்த 2014-ம் ஆண்டிலிருந்து வல்லபாய் படேல் பிறந்த நாளைக் கொண்டாடி வருகிறோம்''.
இவ்வாறு பிரதமர் மோடி தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT