Published : 31 Oct 2020 03:13 AM
Last Updated : 31 Oct 2020 03:13 AM
காங்கிரஸ் கட்சியினரின் பல ஆண்டு கால எதிர்பார்ப்புக்கு பிறகுபிரியங்கா, கடந்த ஆண்டு பிப்ரவரியில் தீவிர அரசியலில் குதித்தார்.
பிரியங்கா வரவால் உ.பி.யில் காங்கிரஸ் மீண்டும் புத்துயிர் பெறும் என கட்சியினர் நம்பிக்கை வைத்தனர். எனினும் அமேதியில் 3 முறை எம்.பி.யாகஇருந்த ராகுல் காந்தியே கடந்த மக்களவைத் தேர்தலில் தோற்கும் நிலை ஏற்பட்டது. இருப்பினும் மனம் தளராத பிரியங்கா தொடர்ந்து உ.பி. அரசியலில் தீவிரம் காட்டி வருகிறார். யோகி ஆதித்யநாத் தலைமையிலான பாஜக அரசைகடுமையாக விமர்சித்து வருகிறார்.
இந்நிலையில், உ.பி.யில்7 தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் நவம்பர் 3-ல் நடைபெற உள்ளது. இத்தேர்தல் பிரியங்காவுக்கு பலப்பரீட்சையாக அமைந்துள்ளது. தேசிய பொதுச் செயலாளராக உ.பி. பொறுப்பை ஏற்றுள்ள பிரியங்கா தலைமையில் காங்கிரஸ் இத்தேர்தலை எதிர்கொள்கிறது. இந்நிலையில் ஓரிரு தொகுதியிலாவது வெற்றி கிடைத்தால் தான் காங்கிரஸுக்கு உ.பி.யில் எதிர்காலம் இருக்கும் எனக் கருதப்படுகிறது.
ஏழு தொகுதிகளில் ஒரு தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளரின் மனு ஏற்கப்படாததால் 6-ல் அக்கட்சி போட்டியிடுகிறது. இந்த 6 தொகுதிகளிலும் கடந்த 2017 சட்டப்பேரவை தேர்தலில் காங்கிரஸ் 3-ம் இடம் பிடித்தது. 7 தொகுதிகளில், 6 பாஜக வசமும் 1 சமாஜ்வாதி வசமும் இருந்தன.
வரும் தேர்தலில் சமாஜ்வாதி கட்சி 7 தொகுதிகளிலும் போட்டியிடுகிறது. வழக்கமாக இடைத்தேர்தலில் போட்டியிடாத பகுஜன்சமாஜ் கட்சி இம்முறை அனைத்துதொகுதிகளிலும் போட்டியிடுகிறது. இதனால் எதிர்க்கட்சிகளின் வாக்குகள் பிரிந்து பாஜக வெல்லும் சூழலும் நிலவுகிறது
காதம்பூர், பங்கர்காவ்ன் ஆகிய 2 தொகுதிகளில் மட்டும் காங்கிரஸின் எதிர்பார்ப்பு கூடியுள்ளது. இதில் ஒன்றிலாவது காங்கிரஸ் வென்றால் தான், உ.பி. அரசியலில் பிரியங்கா காட்டும் தீவிரத்திற்கு பலன் கிடைக்கும் என காங்கிரஸார் கருதுகின்றனர். தோல்வி ஏற்பட்டால் உ.பி. காங்கிரஸ் தலைமை மீண்டும் கேள்விக்குறியாகி விடும். இதன் பாதிப்பு 2022-ல் நடைபெறும் உ.பி. சட்டப்பேரவை தேர்தலில் எதிரொலிக்க வாய்ப்புள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT