Published : 30 Oct 2020 01:46 PM
Last Updated : 30 Oct 2020 01:46 PM
நவம்பர் 16-ம் தேதி முதல் தொடங்கும் சபரிமலை ஐயப்பன் கோயில் மண்டல, மகரவிளக்குப் பூஜைக்கு வரும் பக்தர்கள் அனைவரும் கரோனா நெகட்டிவ் சான்றிதழ், மருத்துவக் காப்பீடு அட்டை, ஆன்லைனில் முன்பதிவு செய்த சீட்டு போன்றவற்றைக் கண்டிப்பாக வைத்திருக்க வேண்டும் என்று கேரள அரசின் தேவஸம்போர்டு தெரிவித்துள்ளது.
சபரிமலை ஐயப்பன் கோயில் மாதாந்திர பூஜைக்காக கடந்த 17-ம் தேதி நடை திறக்கப்பட்டது. கரோனா வைரஸ் பரவல் காரணமாக கடந்த 6 மாதங்களாக பக்தர்கள் அனுமதிக்கப்படாத நிலையில், முதல் முறையாக பக்தர்கள் இந்த மாதம் அனுமதிக்கப்பட்டனர்.
இந்த முறை பக்தர்கள் வரும்போது கரோனா நெகட்டிவ் சான்றிதழ் கட்டாயமாக்கப்பட்டது. அவ்வாறு சான்றிதழ் இல்லாதவர்கள் நிலக்கல் பகுதியில் இருக்கும் மருத்துவ முகாமில் கரோனா பரிசோதனை செய்துகொண்டு அதன்பின் மலைக்குச் செல்ல அறிவுறுத்தப்பட்டனர். இந்த 5 நாள் நடை திறப்பில் நாள்தோறும் 250 பக்தர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டனர்.
இந்நிலையில் மண்டல, மகரவிளக்குப் பூஜை காலம் வரும் நவம்பர் 16-ம் தேதி தொடங்குகிறது. 2 மாதங்கள் நீடிக்கும் இந்த சீசன் காலத்தில், கேரளா, தமிழகம், கர்நாடகா, ஆந்திரா, தெலங்கானா ஆகிய மாநிலங்களில் இருந்து பக்தர்கள் வருவார்கள்.
கேரளாவில் கரோனா வைரஸ் தீவிரமாகப் பரவி வரும் நிலையில் பக்தர்கள் கூட்டத்தைக் கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகளைக் கேரள அரசும், தேவஸம்போர்டும் எடுத்துள்ளன. பக்தர்களுக்குப் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
இதுகுறித்து கேரள தேவஸம்போர்டு தலைவர் என்.வாசு நிருபர்களுக்கு நேற்று பேட்டி அளித்தார்.
அப்போது அவர் கூறியதாவது:
''மகரவிளக்கு , மண்டல பூஜையின்போது, சபரிமலைக்கு வரும் பக்தர்கள் அனைவரும் நிலக்கல் பகுதிக்கு வருவதற்கு 24 மணி நேரத்துக்கு முன் கரோனா பரிசோதனை செய்து நெகட்டிவ் சான்று வைத்திருக்க வேண்டும்.
அதுமட்டுமல்லாமல் நெகட்டிவ் சான்றிதழ் இல்லாத பக்தர்களுக்கு நிலக்கல், பம்பை ஆகிய பகுதிகளில் அமைக்கப்பட்டிருக்கும் மருத்துவ முகாம்களில் கரோனா பரிசோதனை செய்து அதில் நெகட்டிவ் வந்தபின் அவர்கள் மலை ஏற அனுமதிக்கப்படுவார்கள்.
அதேபோல சபரிமலைக்குப் பணிக்காக வரும் அரசின் பல்வேறு துறைகளைச் சேர்ந்த ஊழியர்களும் கரோனா நெகட்டிவ் சான்றிதழ் கட்டாயம் வைத்திருக்க வேண்டும்.
வார நாட்களில் நாள்தோறும் ஆயிரம் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள். வார இறுதி நாட்களான சனி, ஞாயிறுக்கிழமை நாட்களில் 2 ஆயிரம் பக்தர்களும், மண்டலப் பூஜை, மகர விளக்கு நாட்களில் 5 ஆயிரம் பக்தர்களும் அனுமதிக்கப்படுவார்கள்.
பக்தர்கள் அனைவரும் கரோனா விதிகளைக் கண்டிப்பாகப் பின்பற்ற வேண்டும். கையுறை, முகக்கவசம் கட்டாயம் அணிய வேண்டும். சமூக விலகலைக் கடைப்பிடிக்க வேண்டும். நிலக்கல் பகுதியில் பக்தர்களுக்காக பெரிய முகாம் அமைக்கப்பட்டிருக்கும். இலகுரக வாகனங்கள் மட்டுமே பம்பா வரை செல்லவும், நிலக்கல்லில் பக்தர்களைக் கொண்டுவந்து விடவும் அனுமதிக்கப்படும்.
பக்தர்கள் யாரும் பம்பை நதியில் நீராடக் கூடாது. கேரள நீர்ப்பாசனத்துறை சார்பில் குளியல் அறைகளும், ஷவர்களும் அமைக்கப்படும். அதில் மட்டுமே பக்தர்கள் குளிக்க முடியும்.
நிலக்கல், பம்பா, சன்னிதானம் பகுதியில் அன்னதானம் பெறுவதற்கான பேப்பர் பிளேட்டுகள் பக்தர்களுக்கு வழங்கப்படும். பக்தர்கள் வசதிக்காக ஸ்டீல் குடிநீர் பாட்டில்கள் ரூ.100க்கு விற்கப்படும். பக்தர்கள் பயன்படுத்திவிட்டுத் திரும்பக் கொடுத்துவிட்டால் பணம் திருப்பி வழங்கப்படும்.
பக்தர்கள் அனைவரும் சுவாமி ஐயப்பன் சாலை வழியாகச் செல்ல மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள். அந்த வழியில்தான் அவசரகால மருத்துவ முகாம்களும், ஆக்சிஜன் மையங்களும் அமைக்கப்பட்டிருக்கும்.
கோயில் வளாகத்தில் பக்தர்கள் அனைவரும் கூட்டமாகத் தங்கவோ, தூங்கவோ அனுமதியில்லை. சன்னிதானத்தில் உள்ள விருந்தினர் இல்லம், மற்ற தங்கும் விடுதியில் தங்கிக்கொள்ள வேண்டும்.
பக்தர்கள் தேங்காயில் அடைத்துக் கொண்டுவரப்படும் நெய் சிறப்பு வாயில் வழியாக, தேவஸம்போர்டு ஊழியரால் பெறப்படும். அபிஷேகம் செய்யப்பட்ட நெய் மீண்டும் பக்தர்கள் தரிசனம் முடித்துச் செல்லும்போது வழங்கப்படும். பக்தர்கள் பிரசாதம் வாங்குவதற்குத் தேவையான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன''.
இவ்வாறு வாசு தெரிவித்தார்.
41 நாட்கள் சீசன் காலம் முடிந்தபின், மண்டல பூஜை டிசம்பர் 26-ம் தேதி நடக்கிறது, அதன்பின் 27-ம் தேதி ஐயப்பன்கோயில் நடை சாத்தப்படும். பின்னர் டிசம்பர் 30-ம் தேதி மகரவிளக்குப் பூஜைக்காக மீண்டும் கோயில் நடை திறக்கப்பட்டு, 2021 ஜனவரி 14-ம் தேதி மகரவிளக்குப் பூஜை நடக்கும். பின்னர் 20-ம் தேதி கோயில் நடை சாத்தப்படும்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT