Published : 30 Oct 2020 01:30 PM
Last Updated : 30 Oct 2020 01:30 PM
கோவிட் விதிமுறைகளின்படி கர்த்தார்பூர் நடைபாதை விரைவில் திறக்கப்படும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.
அடுத்த மாதம் குருநானக் ஜெயந்தி வருவதை முன்னிட்டு கர்த்தார்பூர் நடைபாதையை மீண்டும் திறக்க மத்திய வெளியறவுத் துறை அமைச்சகம் முடிவு செய்துள்ளது.
இந்தியாவின் குர்தாஸ்பூரில் உள்ள தேரா பாபா நானக் சாஹிப்பையும், பாகிஸ்தானின் கர்த்தார்பூரில் உள்ள குருத்வாரா தர்பார் சாஹிப்பையும் இணைக்கும் 4.7 கிலோ மீட்டர் நீளமுள்ள பாதையை மீண்டும் திறப்பதாக பாகிஸ்தான் அரசு அக்டோபர் 2 ஆம் தேதி அறிவித்தது. கர்த்தார்பூர் நடைபாதையை பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் கடந்த ஆண்டு நவம்பர் 9 ஆம் தேதி அன்று திறந்து வைத்தார்.
இந்த நடைபாதை இந்தியாவின் குர்தாஸ்பூரில் உள்ள தேரா பாபா நானக் ஆலயத்தைப் பாகிஸ்தானில் உள்ள குருத்வாரா கர்த்தார்பூர் சாஹிப்போடு இணைக்கிறது. இது சீக்கிய நம்பிக்கையின் நிறுவனர் குருநானக்கின் இறுதி ஓய்வு இடமாகும். சென்ற ஆண்டு 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட சீக்கிய யாத்ரீகர்கள் குருநானக் பிறந்த தினத்தின்போது வருகை தந்தனர்.
பின்னர், கோவிட் -19 தொற்றுநோயை அடுத்து, கர்த்தார்பூர் நடைபாதை இந்திய அரசாங்கத்தால் மார்ச் மாதம் மூடப்பட்டது. பாகிஸ்தான் நாட்டினர் கர்த்தார்பூர் நடைபாதை வழியாகப் பயணம் செய்யவும் அந்நாட்டு அரசு தடை விதித்திருந்தது.
இந்நிலையில், கோவிட் விதிமுறைகளின்படி கர்த்தார்பூர் நடைபாதை விரைவில் திறக்கப்படும் என்று மத்திய வெளியுறவுத் துறை அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் அனுராக் ஸ்ரீவாஸ்தவா கூறியுள்ளார்.
காணொலிக் காட்சி வாயிலாக நடைபெற்ற வாராந்திரக் கூட்டத்தில் அவர் பேசியதாவது:
''கோவிட் -19 நெறிமுறை காரணமாக கர்த்தார்பூர் நடைபாதை மூடப்பட்டது. நடைபாதையை மீண்டும் திறக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. சம்பந்தப்பட்ட அனைத்து அதிகாரிகளுடனும் கலந்தாலோசித்த பின்னர் விரைவில் திறக்கப்படும்.
கர்த்தார்பூர் நடைபாதையை மீண்டும் திறக்கும் முடிவு கோவிட்-19 நெறிமுறைக்கு ஏற்ப இருக்கும். சம்பந்தப்பட்ட அனைத்து அதிகாரிகளுடனும் நாங்கள் தொடர்பில் இருக்கிறோம். கர்த்தார்பூர் நடைபாதை திறப்பது குறித்த அறிவிப்பு விரைவில் வரும்''.
இவ்வாறு அனுராக் ஸ்ரீவாஸ்தவா தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT