Published : 30 Oct 2020 01:00 PM
Last Updated : 30 Oct 2020 01:00 PM
ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதல்வரும், தேசிய மாநாட்டுக் கட்சியின் தலைவருமான பரூக் அப்துல்லாவை, வீட்டை விட்டு வெளியே செல்லாதவாறு அதிகாரிகள் தடுக்கிறார்கள். மிலாது நபி நாளான இன்று தொழுகைக்கு அவர் வெளியே வரமுடியவில்லை என்று தேசிய மாநாட்டுக் கட்சி நிர்வாகிகள் புகார் தெரிவிக்கின்றனர்.
ஆனால், பரூக் அப்துல்லா வீட்டில் தடுத்து வைக்கப்பட்டுள்ளாரா என்று அதிகாரிகளிடம் நிருபர்கள், ஊடகவியலாளர்கள் கேட்டதற்கு எந்தவிதமான பதிலும் அளிக்கவில்லை.
ஸ்ரீநகரில் உள்ள ஹஸ்ராத்பால் மசூதியில் மிலாது நபி திருநாளான இன்று சிறப்புத் தொழுகை நடத்த ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. இன்று நடக்கும் சிறப்புத் தொழுகையில் தேசிய மாநாட்டுக் கட்சியினர் மற்றும் பல்வேறு கட்சியினரும், மக்களும் திரளாகப் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்பட்டது.
இந்நிலையில் தொழுகைக்கு தேசிய மாநாட்டுக் கட்சி தலைவர் பரூக் அப்துல்லா வீட்டை விட்டு வெளியேற முயன்றபோது அவரை அதிகாரிகள் தடுத்து நிறுத்தியதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதுகுறித்து தேசிய மாநாட்டுக் கட்சியின் ட்விட்டர் பதிவில், ''தேசிய மாநாட்டுக் கட்சியின் தலைவர் பரூக் அப்துல்லாவைத் தொழுகைக்கு வெளிேயறவிடாமல் ஜம்மு காஷ்மீர் நிர்வாகம் வீட்டிலேயே தடுத்து வைத்துள்ளது.
இன்று ஹஸ்ரத்பால் தர்ஹாவில் சிறப்புத் தொழுகை நடத்த ஏற்பாடு செய்யப்பட்ட நிலையில் பரூக் அப்துல்லா தடுக்கப்பட்டுள்ளார். அடிப்படை உரிமையான வழிபாட்டு உரிமையைப் பறிப்பதை ஜம்மு காஷ்மீர் தேசிய மாநாட்டுக் கட்சி கடுமையாகக் கண்டிக்கிறது. அதிலும் குறிப்பாக மிலாது நபி திருநாளில் தொழுகை நடத்தவிடாமல் தடுக்கிறார்கள்'' எனத் தெரிவிக்கப்பட்டது.
மக்கள் ஜனநாயகக் கட்சியின் தலைவர் மெகபூபா முப்தி ட்விட்டரில் பதிவிட்ட கருத்தில், “தேசிய மாநாட்டுக் கட்சியின் தலைவர் பரூக் அப்துல்லாவைத் தொழுகை நடத்தவிடாமல் தடுக்கப்பட்டுள்ளதன் மூலம், இந்திய அரசு, தங்களுக்கு விருப்பமில்லாதவர்களைத் துன்புறுத்துவதையும், ஜம்மு காஷ்மீருக்கு எதிராக இரும்புக் கரத்தைப் பயன்படுத்துவதும் வெளிப்பட்டுவிட்டது. இது எங்களின் ஒட்டுமொத்த உரிமையைப் பறிப்பதாகும். இதைக் கடுமையாகக் கண்டிக்கிறோம்” எனத் தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT