Published : 30 Oct 2020 10:28 AM
Last Updated : 30 Oct 2020 10:28 AM
பிஹார் சட்டப்பேரவை தேர்தலில் தேசிய ஜனநாயக முன்னணி(என்டிஏ) வென்றால் அமித்ஷா, ஜே.பி.நட்டாவால் புதிய வியூகம் அமைக்கப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இதன்படி முதல்வர் பதவியில் தம் தலைவரை அமர்த்தி, நிதிஷ்குமாரை மத்திய அமைச்சரவையில் சேர்க்க பாஜக திட்டம் வகுத்துள்ளது.
மூன்று கட்டங்களாக நடைபெற்று வரும் பிஹாரின் 243 சட்டப்பேரவை தொகுதிகளுக்கானத் தேர்தல் துவங்குபவருக்கு முன்பிலிருந்து பாஜக பல வியூகங்கள் அமைத்து வருகிறது. இதில் புதிதாக, இதுவரை வெளியான தேர்தல் கணிப்புகளின்படி என்டிஏ கூட்டணி வென்றால் முதல்வர் பதவியில் அமர்வதை பாஜக உறுதிப்படுத்தி கொண்டுள்ளது.
இத்தேர்தலில் என்டிஏ சார்பில் முதல்வர் வேட்பாளராக முன்னிறுத்தப்பட்டுள்ள ஐக்கிய ஜனதா தளம்(ஜேடியு) தலைவர் நிதிஷ்குமாரை, மத்திய அமைச்சரவையில் சேர்க்கவும் திட்டமிட்டுள்ளது. இவர் ஏற்கனவே, பிரதமர் வாஜ்பாய் தலைமையிலான என்டிஏ ஆட்சியில் ரயில், கப்பல் மற்றும் சாலை போக்குவரத்து, விவசாயம் ஆகிய மூன்று துறைகளில் மத்திய அமைச்சராக இருந்தவர்.
இத்திட்டத்தை ஏற்கும் வகையில் இதுவரையும் தமது 15 வருட கால ஆட்சியின் சாதனைகளை முன்னிறுத்தி முதல்வர் நிதிஷ்குமார் செயல்பாடுகளில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. நேற்று முதல் நிதிஷ், முதன்முறையாக தன் பிரச்சாரங்களில் பிரதமர் மோடியை முன்னிறுத்தி பேசினார்.
தனது ஆட்சிக்கு எதிரான மனநிலை வாக்காளர்கள் இடையே நிலவுவதாக நிதிஷ் கருதி, மோடி அலை தான் வெற்றியை அளிக்கும் என்ற நிலைப்பாட்டிற்கு மாறிவிட்டதாகக் கருதப்படுகிறது.
பாட்னாவில் நடைபெற்ற கூட்டத்தில் பேசிய நிதிஷ் பேசும்போது, ’என்டிஏ வென்றால் பிரதமர் மோடி பிஹாரை வளர்ச்சி பெற்ற மாநிலமாக மாற்றி விடுவார். இதுவரையும்
பிஹாரில் மத்திய அரசு செய்த திட்டங்களுக்கு காரணமான பிரதமர் மோடியை எவராலும் மறக்க முடியாது.
என்டிஏவிற்கு இன்னொரு வாய்ப்பளித்தால் அடுத்த மக்களவை தேர்தலுக்கு முன்பாக பிஹார் நிச்சயம் முன்னேறி விடும்.’ எனத் தெரிவித்தார்.
பிஹாரில் மெட்ரோ ரயில், ஸ்மார்ட் நகரங்கள், உஜ்வாலா ஆகிய திட்டங்கள், சாலை மற்றும் பாலங்கள் அமைத்தல் போன்றவற்றை நிதிஷ் குறிப்பிட்டு பிரதமர் மோடியை பாராட்டத் துவங்கி உள்ளார். கரோனா காலத்தில் மத்திய அரசின் சாதனைகளை அடுக்கியவர் அதற்காகவும் பிரதமர் மோடியை தொடர்ந்து பாராட்டி வருகிறார் நிதிஷ்.
இந்நிலையில், வரும் 3 மற்றும் 7 தேதிகளில் நடைபெறவிருக்கும் மீதம் உள்ள இரண்டுகட்ட தேர்தலில் என்டிஏவின் பிரச்சாரம் புதிய உருவம் எடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதுவரை இருந்தது போல் அன்றி, பாஜக மற்றும் ஜேடியு இணைந்து எந்த வித்தியாசமும் காட்டாமல் பிரச்சாரம் செய்யவும் திட்டமிடப்பட்டுள்ளது.
இதனால், என்டிஏவிற்கு தனிமெஜாரிட்டி கிடைக்கவில்லை என்றாலும் அதிக தொகுதிகள் கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பு உள்ளது. இதில் குறையும் எம்எல்ஏக்களை, 142 இல் தனித்தி போட்டியிடும் லோக் ஜன சக்தியின்(எல்ஜேபி) சிராக் பாஸ்வானுக்கு கிடைப்பதில் எடுக்க பாஜக காத்திருக்கிறது.
தேர்தல் முடிவுகளுக்கு பின் தன் தந்தையின் அமைச்சர் பதவியை சிராக் பெறவும் வாய்ப்பிருப்பதாகக் கருதப்படுகிறது. என்டிஏ வெற்றி பெற்றால் பாஜகவின் முதல்வராக அமர்வது யார் என்ற சர்ச்சையும் கிளம்பி விட்டது. இதில், மத்திய சட்டத்துறை அமைச்சரான ரவிசங்கர் பிரசாத்தின் பெயர் முன்னிலையில் உள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT