Published : 29 Oct 2020 07:08 PM
Last Updated : 29 Oct 2020 07:08 PM
தமிழகத்தில் 59 அணைகள் உட்பட 736 அணைகள் புனரமைப்பு திட்டத்துக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது.
நாடு முழுவதும் 736 அணைகள் புனரமைப்பு திட்டம், சணல் சாக்குகளில் பொருட்கள் அனுப்பும் திட்டம், பொதுத்துறை நிறுவனங்கள் எத்தனால் கொள்முதல் செய்யும் திட்டம் உட்பட பல திட்டங்களுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
மத்திய அமைச்சரவை கூட்டம், பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் இன்று நடந்தது. இதில் மத்திய அரசு சார்பில் எடுக்கப்பட்ட பல முடிவுகளுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டன.
உலக வங்கி, ஆசிய கட்டமைப்பு முதலீட்டு வங்கி ஆகியவற்றின் நிதியுதவியுடன், அணை புனரமைப்பு மற்றும் மேம்பாட்டு நிதியுதவி திட்டத்தின் 2ம் மற்றும் 3ம் கட்ட பணிகளை மேற்கொள்ள பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பொருளாதார விவகாரங்களுக்கான அமைச்சரவை குழு ஒப்புதல் அளித்துள்ளது.
இதன் மூலம் தமிழகத்தில் 59 அணைகள் உட்பட, நாடு முழுவதும் 736 அணைகளின் பாதுகாப்பு மற்றும் செயல்பாடுகள் மேம்படுத்தப்படும். இத்திட்டத்திற்கு ரூ.10,211 கோடி செலவிடப்படவுள்ளது. 10 ஆண்டு காலத்தில் இத்திட்டம் அமல்படுத்தப்படும்.
சணல் தொழில் ஊக்குவிப்பு:
சணல் சாக்குகளில் பொருட்களை அனுப்புவதற்கான விதிமுறைகளை நீட்டிக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இதன் மூலம் 100 சதவீத உணவு தானியங்கள் மற்றும் 20% சர்க்கரை ஆகியவை சணல் சாக்குகளில் நிரப்பப்பட்டு அனுப்புவது கட்டாயமாக்கப்படும். இந்த முடிவு சணல் தொழிலை ஊக்குவிக்கும். நாடு முழுவதும், கிழக்கு மற்றும் வடகிழக்கு மாநிலங்களில் 3.7 தொழிலாளர்கள் சணல் தொழிலை வாழ்வாதாரமாக கொண்டுள்ளனர். அவர்களின் நலனை கருத்தில் கொண்டு மத்திய அரசு இந்த முடிவை எடுத்துள்ளது.
எத்தனால் கொள்முதல்:
எத்தனால் கலந்த பெட்ரோல் திட்டத்தின் கீழ் பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் எத்தனால் கொள்முதல் செய்யவும் மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இந்தாண்டு கரும்பு அறுவடை காலம் மற்றும் எத்தனால் விநியோக ஆண்டு 2020-21-ல், எத்தனால் விலையை நிர்ணயம் செய்வது உட்பட எத்தனால் கொள்முதல் செய்ய ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. எத்தனால் விலை ரகத்திற்கு ஏற்ப லிட்டருக்கு ரூ.62.65 வரை அதிகரிக்கப்படுகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT