Published : 29 Oct 2020 05:58 PM
Last Updated : 29 Oct 2020 05:58 PM
இந்தியா போர் தொடுத்துவிடும் என்று அஞ்சிதான் இந்திய விங் கமாண்டர் அபிநந்தனை பாகிஸ்தான் விடுவித்துள்ளது. காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி இப்போதாவது நம்புவாரா என்று பாஜக விமர்சித்துள்ளது.
புல்வாமா தாக்குதலுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில் இந்திய விமானப்படை பலுசிஸ்தானில் தீவிரவாத முகாம்களை அழித்துத் திரும்பியது. அப்போது, பாகிஸ்தான் விமானத்தைச் சுட்டு வீழ்த்திய இந்திய விமானப் படைவீரர் அபிநந்தனை பாகிஸ்தான் ராணுவம் கைது செய்தது. கடந்த ஆண்டு பிப்ரவரி 27-ம் தேதி கைது செய்யப்பட்ட அபிநந்தன், இரு நாடுகளுடனான பேச்சுவார்த்தைக்குப் பின் மார்ச் 1-ம் தேதி விடுவிக்கப்பட்டார்.
இது தொடர்பாக, பாகிஸ்தான் எதிர்க்கட்சித் தலைவர் சர்தார் அர்யாஸ் சித்திக் நேற்று ஒரு சேனலுக்கு அளித்த பேட்டியில், “அபிநந்தனை விடுவிப்பது தொடர்பாக பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் சிறப்புக் கூட்டம் நடந்தது. அப்போது பேசிய வெளியுறவுத் துறை அமைச்சர் ஷா முகமது குரேஷி, அபிநந்தனை ராணுவம் விடுவிக்காவிட்டால், இன்று இரவு 9 மணிக்கே இந்திய ராணுவம் பாகிஸ்தான் மீது போர் தொடுக்கும் என்றார். இதைக் கேட்டவுடன் ராணுவத் தளபதி ஜெனரல் பஜ்வாவின் கால்கள் நடுங்கின, முகம் வியர்த்துக் கொட்டியது” எனத் தெரிவித்திருந்தார்.
இந்த வீடியோவை தனது ட்விட்டர் பக்கத்தில் இணைத்து பாஜக தேசியத் தலைவர் ஜே.பி. நட்டா, காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தியைக் கடுமையாக விமர்சித்துள்ளார். அவர் பதிவிட்ட கருத்தில், “காங்கிரஸ் இளவரசர் (ராகுல் காந்தி) எதையும் நம்பமாட்டார். நம்முடைய ராணுவம், நம்முடைய அரசு, நம்முடைய மக்களையும் நம்பமாட்டார். இளவரசரின் அதிநம்பிக்கைக்குரிய நாட்டிடம் இருந்து சில விஷயங்கள் வந்துள்ளன. இப்போதாவது இளவரசர் நம்புவாரா?
இந்திய ராணுவத்தின் நம்பிக்கையைக் குலைக்கும் வகையில்தான் காங்கிரஸ் கட்சி பிரச்சாரம் செய்தது. இந்திய ராணுவத்தின் வீரத்தைக் கேள்வி எழுப்பினர். அவர்களின் துணிச்சலைக் கிண்டல் செய்தார்கள். இந்தியாவுக்கு அதிநவீன ரஃபேல் போர் விமானம் கிடைப்பதையும் கிண்டல் செய்தார்தள்.
ஆனால், இந்திய மக்கள் இதுபோன்ற அரசியலை ஒதுக்கி காங்கிரஸைத் தள்ளிவைத்துவிட்டனர்” எனத் தெரிவித்துள்ளார்.
பாஜகவின் தேசியச் செய்தித் தொடர்பாளர சம்பித் பத்ரா நிருபர்களிடம் கூறுகையில், “ ராகுல் காந்தி காங்கிரஸ் கட்சியின் இளவரசர மட்டுமல்ல. பாகிஸ்தானின் இளவரசரும் கூட. இப்போது ராகுல் காந்தியிடம் கேட்க விரும்புவது என்னவென்றால், இந்தியாவைப் பார்த்து பயந்து, கால் நடுங்கிய, முகம் வியர்த்துக் கொட்டியவர்களுக்கு ஏன் நீங்கள் ஆதரவாக இருந்தீர்கள்?
நீங்கள் காங்கிரஸுக்கு மட்டுமல்ல பாகிஸ்தானுக்கும் இளவரசர். தேசிய நலனில் அனைத்துக் கட்சிகளும் ஒற்றுமையாக இருக்க வேண்டும். ஆனால், காங்கிரஸ் இதில் பிரிவினைவாத அரசியல் செய்கிறது” எனச் சாடினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT