Published : 29 Oct 2020 02:45 PM
Last Updated : 29 Oct 2020 02:45 PM
வளர்ச்சியும், சுற்றுப்புறச் சூழல் பாதுகாப்பும் ஒன்றோடொன்று கைகோர்த்திருக்க வேண்டும் என்று குடியரசு துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடு இன்று கூறினார்.
இந்திய தொழில் கூட்டமைப்பின் பசுமை கட்டிடங்கள் மாநாடு 2020-ஐ மெய்நிகர் முறையில் தொடங்கி வைத்து பேசிய அவர் இவ்வாறு கூறினார்.
அனைத்துப் புதிய கட்டிடங்களும் சுற்றுப்புறச் சூழலுக்கு உகந்த வகையில் கட்டப்படுவதை கட்டாயமாக்குவதை பரிசீலிப்பதற்கான நேரம் வந்து விட்டதென அவர் கூறினார். வலிமையான இந்தியா மட்டுமல்ல, பசுமையான இந்தியாவும் நமக்குத் தேவை என்று அவர் வலியுறுத்தினார்.
வரி சலுகைகள் மற்றும் இதர நடவடிக்கைகளின் மூலம் பசுமைக் கட்டிடங்களை ஊக்குவிக்குமாறு அரசுகள், நிதி ஆணையங்கள் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளை அவர் கேட்டுக் கொண்டார்.
புதிய கட்டிடங்கள் மட்டுமல்ல, பழைய கட்டிடங்களும் சுற்றுப்புறச் சூழலுக்கு உகந்த வகையில் மாற்றியமைக்கப்பட வேண்டும் என்றும் மின்சார சிக்கனமும், தண்ணீர் சேமிப்பும் ஊக்கப்படுத்தப்பட வேண்டும் என்றும் குடியரசு துணைத் தலைவர் கூறினார்.
பசுமைக் கட்டிடங்கள் குறித்து மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட வேண்டும் என்று கூறிய நாயுடு, பருவநிலை மாற்றம் என்பது உறுதியாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது, அதை எதிர்கொள்வதற்கான நடவடிக்கைகள் தேவை என்றும் கூறினார்.
உள்ளூரில் தயாரிக்கப்பட்ட, சுற்றுப்புறச் சூழலுக்கு உகந்தப் பொருட்களை கட்டிடங்களின் கட்டுமானத்தில் பயன்படுத்த வேண்டும் என்று குடியரசு துணைத் தலைவர் வலியுறுத்தினார். பசுமையான, சுகாதாரமான, வளமான இந்தியாவை கட்டமைக்க அரசுகளுடன் கட்டுமானத் துறை இணைந்து பணிபுரிய வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT