Published : 29 Oct 2020 07:27 AM
Last Updated : 29 Oct 2020 07:27 AM
பிஹார் சட்டப்பேரவைத் தேர்தலில் ஆளும் என்டிஏ சார்பில் முதல்வர் வேட்பாளராக ஐக்கியஜனதா தளம் (ஜேடியு) தலைவர்நிதிஷ் குமார் மீண்டும் முன்னிறுத்தப்பட்டுள்ளார். எனினும், பாஜகவின் பிரச்சாரச் சுவரொட்டிகள் மற்றும் பத்திரிகை விளம்பரங்களில் பிரதமர் மோடி படத்துடன் நிதிஷ் படம் வெளியாகவில்லை.
என்டிஏவுடன் மத்தியில் கூட்டணி வைத்துள்ள சிராக் பாஸ்வானின் லோக் ஜன சக்தி (எல்ஜேபி), தனித்துப் போட்டியிடுகிறது. எனினும், ஜேடியு கட்சியை மட்டும் எதிர்ப்பதாகக் கூறும் எல்ஜேபி, பாஜகவுக்கு ஆதரவளித்து வருகிறது. தங்கள் கட்சிப் பெயரையும், பிரதமர் மோடியின் படத்தையும் பிரச்சாரங்களில் பயன்படுத்தக் கூடாது என பாஜக, எல்ஜேபியைஎச்சரித்துள்ளது. எனினும், எல்ஜேபி அதை பொருட்படுத்திய தாகத் தெரியவில்லை.
மாறாக பாஜக தலைமையில் எல்ஜேபி ஆட்சி அமையும் என அதன் தலைவர் சிராக் பாஸ்வான் பிரச்சாரம் செய்து வருகிறார். இதை பாஜக இதுவரை கண்டிக்கவில்லை. மேலும், தொடக்கத்தில் பாஜகவை எதிர்த்து வேட்பாளர்களை நிறுத்தப் போவதில்லை என சிராக் அறிவித்திருந்தார்.
ஆனால், தற்போது, 4 தொகுதிகளில் எல்ஜேபி வேட்பாளர்களை களம் இறக்கி உள்ளார். இதுபோன்ற காரணங்களால், என்டிஏ கூட்டணியின் நிலைப்பாடு மீதுவாக்காளர்கள் இடையே சிறியகுழப்பம் உருவானது. இந்நிலையில், முதன்முறையாக பிரதமர் மோடி, முதல்வர் நிதிஷ் குமாரின் படங்களுடன் சுவரொட்டியை பாஜக நேற்று வெளியிட்டது. இதேபோன்ற சுவரொட்டியை ஜேடியுவும் வெளியிட்டுள்ளது.
இந்நிலையில் தேர்தல் முடிவுக்குப் பிறகு அமையும் ஆட்சி தேர்தல் கூட்டணியின் அடிப்படையில் இல்லாமல் மாறுவதற்கான வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. தேர்தலுக்குப் பிறகு முதல்வர் பதவிக்காக நிதிஷ், லாலுவின் மெகா கூட்டணியில் இணைய வாய்ப்பு உள்ளதாக சிராக் பாஸ்வான் குற்றம்சாட்டி உள்ளார். ஆனால் மெகா கூட்டணியின் முதல்வர் வேட்பாளரான தேஜஸ்விபிரசாத் யாதவ், ‘‘தேர்தல் முடிவுக்குப் பின், முதல்வர் பதவியை பாஜக கைப்பற்றுவதற்காக நிதிஷை தனிமைப்படுத்தும்’’ எனப் பிரச்சாரம் செய்கிறார்.
எல்ஜேபி தனித்து போட்டியிடுவ தால், ஜேடியு, ராஷ்ட்ரிய ஜனதா தளத்தின் வாக்குகள் பிரியும் எனத் தெரிகிறது. இதுமட்டுமல்லாமல் மூன்றாவதாக பல்வேறு சிறிய கட்சிகளுடன் அமைந்துள்ள 2 கூட்டணிகளாலும் வாக்குகள் பிரியும் நிலை உள்ளது. ஒருவேளை அதிக தொகுதிகள் பெற்றகட்சியானால் பாஜக ஆட்சி அமைக்க முயலும் எனவும், அதற்காக எல்ஜேபி மற்றும் 3-வது கூட்டணியின் சிறிய கட்சிகள் உதவியை பயன்படுத்தும் வாய்ப்புகள் உள்ளதாக ஜேடியு அஞ்சுகிறது. இதுபோன்ற ஊகங்களை சமாளிக்க முன்பு போல் நிதிஷை அரவணைக்கத் தொடங்கியுள்ளது பாஜக. இதன் பலன் தேர்தல்முடிவு வெளியாகும் நவ.10-ல் தெரியும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT