Published : 29 Oct 2020 07:25 AM
Last Updated : 29 Oct 2020 07:25 AM
ஒரு கொலையை மறைக்க 9 பேரை கொன்றவருக்கு தூக்கு தண்டனை விதித்து வாரங்கல் மாவட்ட நீதிமன்றம் நேற்று தீர்ப்பளித்தது.
தெலங்கானா மாநிலம், வாரங்கல் மாவட்டம், கொர்ர குண்டா பகுதியில் உள்ள ஒரு சணல் தொழிற்சாலையில் மேற்குவங்கத்தைச் சேர்ந்த மக்சூத், அவரது மனைவி நிஷா ஆகியோர் பணியாற்றி வந்தனர். இவர்களுக்கு பிஹார் மாநிலத்தைச் சேர்ந்த சஞ்சீவ் குமார் பழக்கமானார். இதனிடையே நிஷாவின் சகோதரி ரஃபீகா (31), தனது கணவரை விட்டுப் பிரிந்து 3 குழந்தைகளுடன் நிஷாவின் வீட்டில் தங்கினார். நாளடைவில் ரஃபீகா – சஞ்சீவ் குமார் இடையே பழக்கம் ஏற்பட்டது. ஆனால் நடத்தை சரியில்லாத சஞ்சீவ், ரஃபீகாவின் 12 வயது மகளிடம் தவறாக நடக்க முயன்றுள்ளார். அப்போது இனியும் இதுபோல் நடந்துகொண்டால் போலீஸில் புகார் அளிப்பேன் என ரஃபீகா எச்சரித்துள்ளார்.
இதனால், ரஃபீகாவை கொல்ல சஞ்சீவ் திட்டமிட்டுள்ளார்.
இந்நிலையில், கடந்த மார்ச் 6-ம் தேதி ரஃபீகாவை விசாகப்பட்டினம் செல்லும் ரயிலில் சஞ்சீவ் அழைத்துச் சென்றார். அப்போது மோரில் தூக்க மாத்திரைகளை கலந்து கொடுத்து, ஓடும் ரயிலில் இருந்து ரஃபீகாவை சஞ்சீவ் தள்ளி விட்டுள்ளார். பின்னர் எதுவும் தெரியாதது போல் மீண்டும் வாரங்கல் வந்து விட்டார். ரஃபீகா பிஹார் சென்றுள்ளதாகவும் விரைவில் வந்துவிடுவார் எனவும் கூறி சமாளித்துள்ளார். எனினும் இதில் சந்தேகம் அடைந்த நிஷா, போலீஸுக்கு செல்லப் போவதாக கூறியுள்ளார்.
இதனால், நிஷா மற்றும் அவரது குடும்பத்தினரை ஒட்டு மொத்தமாக கொல்ல திட்டமிட்டார் சஞ்சீவ். கடந்த மே 20-ம் தேதி, நிஷா தனது மூத்த மகன் ஷாபாத்தின் பிறந்த நாளை கொண்டாடியுள்ளார். அப்போது விருந்தில் தூக்க மாத்திரைகளை சஞ்சீவ் கலந்துள்ளார். இந்த விருந்தை உண்ட நிஷா (45), அவரது கணவர் மக்சூத் (50), மகள் புஸ்ரா (20), மகன்கள் ஷாபாத் (22), சோஹைல் (20), புஸ்ராவின் 3 வயது மகன் மற்றும் அந்த வீட்டின் மாடியில் தங்கியிருந்த பிஹார் தொழிலாளர்கள் ஷியாம் (22), ராம் (20) முகம்மது ஷகீல் (38) ஆகிய அனைவரும் சிறிது நேரத்தில் மயங்கி விட்டனர். இவர்களை இரவு 12.30 மணி முதல் அதிகாலை 4 மணி வரை ஒருவர் பின் ஒருவராக அருகில் உள்ள விவசாய கிணற்றில் வீசினார் சஞ்சீவ். விவசாய கிணற்றில் இருந்து 9 பேரின் சடலங்கள் மீட்கப்பட்டது அப்போது மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியது.
இது தொடர்பான விசாரணையில் கண்காணிப்பு கேமரா பதிவுகள் மூலம் சஞ்சீவ் சிக்கினார். இது தொடர்பான வழக்கு வாரங்கல் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இவ்வழக்கில் சஞ்சீவ் கொலையாளி என்பது உறுதி செய்யப்பட்டதால், அவருக்கு தூக்கு தண்டனை விதித்து நேற்று தீர்ப்பளிக்கப்பட்டது.
ஒரு கொலையை மறைக்க 9 கொலைகளை செய்த இந்தசம்பவம் தெலங்கானா மாநிலத் தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத் தியது. தீர்ப்பு நாளான நேற்று இறந்தவர்களின் உறவினர்கள் நீதிமன்றத்துக்கு வந்திருந்தனர். தீர்ப்புக்கு பிறகு அவர்கள் இனிப்பு வழங்கி மகிழ்ச்சி தெரிவித்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT