

லடாக்கை சீனாவின் ஒரு பகுதியாக காட்டிய விவகாரத்தில் ட்விட்டரின் விளக்கம் போதுமானதல்ல என்று நாடாளுமன்ற கூட்டுக் குழு தலைவர் கூறினார்.
கடந்த 18-ம் தேதி ட்விட்டர் நிறுவனத்தின் ஜியோடேக் பதிவு வரைபடத்தில் லடாக், சீனப் பகுதியில் இருப்பதாக காட்டப்பட்டது. இதற்கு இந்தியாவில் கடும் எதிர்ப்பு கிளம்பியது. இதையடுத்து சில மணி நேரத்தில் ட்விட்டர் அந்த வரைபடத்தை திருத்தி சரி செய்தது.
இந்நிலையில் 2019-ம் ஆண்டு புள்ளிவிவரப் பாதுகாப்பு மசோதா மீதான நாடாளுமன்ற கூட்டுக் குழு, அதன் தலைவர் மீனாட்சி லேகி தலைமையில் நேற்று கூடியது. இக்கூட்டத்தில் ட்விட்டர் நிறுவனத்தின் பிரதிநிதிகள் ஆஜராகினர். அவர்களிடம் நாடாளுமன்றக் குழு உறுப்பினர்கள் கேள்வி எழுப்பினர். இது தொடர்பாக மீனாட்சி லேகி கூறும்போது, லடாக்கை சீனாவின் ஒரு பகுதியாக காட்டிய விவகாரத்தில் ட்விட்டரின் விளக்கம் போதுமானதல்ல என்று ஒருமனதாக முடிவுக்கு வந்துள்ளோம். இந்தியாவின் உணர்வுகளை மதிப்பதாக ட்விட்டர் நிறுவனப் பிரதிநிதிகள் கூறினர். என்றாலும் இது உணர்வுபூர்வமான விஷயம் மட்டுமல்ல. இந்தியாவின் இறையாண்மை மற்றும் ஒருமைப்பாடு தொடர்புடையது. ட்விட்டரின் இந்தச் செயல் 7 ஆண்டுகள் வரை தண்டனை விதிக்கக் கூடிய ஒரு குற்றமாகும்” என்றார்.