Published : 06 Oct 2015 12:47 PM
Last Updated : 06 Oct 2015 12:47 PM
பிஹார் மாநில சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிடும் லாலு பிரசாத் யாதவின் மூத்த மகன் தேஜ் பிரதாப் யாதவ், வேட்புமனுவில் தன் வயதை குறைவாகக் குறிப்பிட்டதாக சர்ச்சையில் சிக்கியுள்ளார்.
இவரை விட அவரது இளைய சகோதரனான தேஜஸ்வீ யாதவ் தனது வேட்பு மனுவில் வயதை ஒரு வருடம் அதிகமாகக் குறிப்பிட்டுள்ளார்.
ராஷ்ட்ரீய ஜனதா தளம் கட்சியின் தலைவரான லாலு பிரசாத் யாதவ். இவரது மூத்த மகன் தேஜ் பிரதாப் யாதவ். இவர், பிஹாரின் ஹாஜிபூர் மாவட்டத்தில் உள்ள மஹூவா தொகுதியில் போட்டியிடுகிறார். லாலுவின் இளைய மகன் தேஜஸ்வீ யாதவ். இவர் பாட்னா மாவட்டத்தின் ராகோபூரில் போட்டியிடுகிறார்.
முதன்முறையாக தேர்தலில் போட்டியிடும் லாலுவின் இருமகன்களில் மூத்தவரான தேஜ் பிரதாப் வேட்புமனுவில் தனது வயதை 25 எனக் குறிப்பிட்டிருந்தார். ஆனால், அவரது இளையவரான தேஜஸ்வியோ அவர் தாக்கல் செய்த வேட்புமனுவில் வயதி விவரத்தில் தம் வயதை 26 எனக் குறிப்பிட்டுள்ளார். இவ்வாறு மூத்தவரை விட இளைய சகோதரனின் வயது அதிகமாக இருக்க வாய்ப்பில்லை என்பதால், தேஜ் பிரதாப்பின் வேட்பு மனு விவகாரத்தில் சர்ச்சை கிளம்பி விட்டது.
வரும் 12 ஆம் தேதி துவங்கி, ஐந்து கட்டமாக தேர்தல் நடைபெறும் பிஹாரில் வரும் அக்டோபர் 28-ல் லாலுவின் இருமகன்களும் போட்டியிடும் தொகுதிகளுக்கு வாக்குப் பதிவு நடைபெற உள்ளது. இதற்காக, கடந்த அக்டோபர் 1 மற்றும் 4 ஆம் தேதி தம் வேட்புமனுவை தாக்கல் செய்தனர். வேட்புமனுவில் இருவரும் காட்டிய சொத்து மதிப்பும் தேஜ் பிரதாப்பிற்கு தம் இளையவர் தேஜஸ்வீயை விட குறைவாகவே உள்ளது. வயது சர்ச்சையுடன், சொத்து மதிப்பு சர்ச்சையும் சேர்ந்து கொண்டுள்ளது.
தேஜஸ்வீ போட்டியிடும் ரகோபூர் அவரது தாயும் பிஹாரின் முன்னாள் முதல்வருமான ராப்ரி தேவி கடந்த 2005 ஆம் ஆண்டு வரை இருமுறை போட்டியிட்டு வென்ற தொகுதி. கடைசியாக 2010 தேர்தலில் தோற்ற ராப்ரி, பிஹாரின் மாநிலங்களவை உறுப்பினராக இருக்கிறார். இந்தமுறை அவர் தேர்தலில் போட்டியிடவில்லை.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT