Last Updated : 27 Oct, 2020 12:21 PM

1  

Published : 27 Oct 2020 12:21 PM
Last Updated : 27 Oct 2020 12:21 PM

உ.பி. முதல் ம.பி. வரை நிற்காமல் ஓடிய ரயில்: கடத்தப்பட்ட குழந்தையை மீட்க ஆர்பிஎஃப் மேற்கொண்ட வியூகம்

புதுடெல்லி

உத்தரப் பிரதேசத்தில் கடத்தப்பட்ட 3 வயதுக் குழந்தையை மீட்க சிறப்பு ரயில், மத்தியப் பிரதேசம் வரை நிற்காமல் ஓடியுள்ளது. இதற்காக வியூகம் அமைத்துக் குழந்தையை மீட்ட ரயில்வே பாதுகாப்பு படையினருக்குப் (ஆர்பிஎஃப்) பாராட்டுகள் குவிகின்றன.

உ.பி.யின் புந்தேல்கண்ட் பகுதியின் லலித்பூர் மாவட்டத்தில் ஆஸாத்புராவைச் சேர்ந்தவர் ஆஷா ரெய்க்வார். இவரது கணவர் அர்வித் குமார் சரோஜ், ஆர்பிஎஃப் காவலராக இருப்பதால் வீடு லலித்பூர் ரயில் நிலையம் அருகில் அமைந்துள்ளது. இதன் வாசலில் ஆஷாவின் 3 வயதுக் குழந்தை காவ்யா நேற்று முன்தினம் (அக்.25) காலை வீட்டு வாசலில் விளையாடிக் கொண்டிருந்தது. அப்போது திடீரென குழந்தை காணாமல் போனது.

இதனால், லலித்பூர் ரயில் நிலையக் காவல் நிலையத்தில் ஆர்பிஎஃப் படையினரிடம் மாலை 6.30 மணிக்கு அர்வித் புகார் அளித்தார். இதையடுத்து, ரயில் நிலையத்தின் சிசிடிவி கேமரா பதிவுகளை ஆர்பிஎஃப் தேடியது. அதில், சற்று முன்பாக அங்கிருந்து கிளம்பிய ரப்திசாகர் சிறப்பு ரயிலில் ஒரு இளைஞர் குழந்தையுடன் ஏறுவது தெரிந்தது. போபால் வழியாக சாகர் செல்லும் அந்த ரயிலில், ஓட்டுநருக்குக் கட்டுப்பாட்டு அறை மூலமாக உடனடியாகத் தகவல் தெரிவிக்கப்பட்டது.

மத்தியப் பிரதேசத்தின் தலைநகரான போபால் வரை எந்த ரயில் நிலையத்திலும் நிறுத்தாமல் செல்லும்படி உத்தரவிடப்பட்டது. ஏனெனில், வழியில் உள்ள ரயில் நிலையங்களில் போதுமான ஆர்பிஎஃப் படையினர் இல்லாமையால் கடத்தல்காரன் தப்பிவிட வாய்ப்பிருந்தது. அதேசமயம் போபால் ரயில் நிலையத்தில் ஆர்பிஎஃப் படையினர் அதிக அளவில் ரப்தி சாகர் ரயிலைச் சுற்றி வளைக்கக் காத்திருந்தனர். சுமார் 260 கி.மீ. தொலைவிற்கு நிற்காமல் போபால் வந்த ரயிலில், கடத்தல்காரரிடம் இருந்து குழந்தை பத்திரமாக மீட்கப்பட்டது.

இதனிடையே, குழந்தையைப் பறிகொடுத்த ஆஷா தன் குடும்பத்தாருடன் போபால் வந்தடைந்தார். அவரிடம் குழந்தை பத்திரமாகத் திருப்பி ஒப்படைக்கப்பட்டது. கடத்திய இளைஞரைக் கைது செய்த ஆர்பிஎஃப் படையினர், அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

அதிரடி நடவடிக்கையால் குழந்தை மீட்கப்பட்டதைக் கேள்விப்பட்ட மத்திய ரயில்வே துறை அமைச்சர் பியூஷ் கோயல், லலித்பூர் ஆர்பிஎஃப் காவல் நிலைய அதிகாரிகளைப் பாராட்டியுள்ளார்.

பாலிவுட் திரைப்படப் பாணியில்...

இந்தச் செய்தி சமூக வலைதளங்களிலும் பரவி பெரும் பாராட்டைப் பெற்று வருகிறது. பல ஆண்டுகளுக்கு முன் பாலிவுட்டில் ‘தி பர்னிங் ட்ரெய்ன்’ என்னும் பெயரில் ஒரு இந்தித் திரைப்படம் வெளியாகி இருந்தது. இதில் ரயிலின் சில பெட்டிகள் வழியில் தீப்பிடித்து எரியும். இதை அணைத்துப் பயணிகளைக் காப்பதற்காக படத்தின் ஐந்திற்கும் மேற்பட்ட நாயகர்கள் ரயிலை நிறுத்தாமல் சாதுரியமாகத் தீயை அணைப்பார்கள்.

இத்திரைப்படக் காட்சியைப் போல், ஆர்பிஎஃப் படையினர் ரப்தி சாகர் ரயிலை 260 கி.மீ. தொலைவிற்கு நிறுத்தாமல் ஓட வைத்து குழந்தையைக் காப்பாற்றியுள்ளனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x