Published : 26 Oct 2020 02:04 PM
Last Updated : 26 Oct 2020 02:04 PM
வீர சாவர்க்கர் பற்றிப் பேசும் பாஜக, கடந்த 6 ஆண்டுகளாக ஆட்சியில் இருந்தும் ஏன் பாரத ரத்னா விருதை அறிவிக்கவில்லை என்று சிவசேனா கட்சியின் எம்.பி. சஞ்சய் ராவத் கேள்வி எழுப்பியுள்ளார்.
தசரா பண்டிகையையொட்டி மும்பையில் உள்ள தாதர் பகுதியில் வீர சாவர்க்கர் அரங்கில் சிவசேனா சார்பில் நேற்று நிகழ்ச்சி நடந்தது. இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற சிவசேனா தலைவரும், மகாராஷ்டிர முதல்வருமான உத்தவ் தாக்கரே பாஜகவைக் கடுமையாக விமர்சித்துப் பேசியிருந்தார்.
அதில், "பாஜக ஆட்சிக் கவிழ்ப்பில் ஆர்வத்துடன் ஈடுபடுவதற்குப் பதிலாக, நாட்டின் பொருளாதார முன்னேற்றத்தில் கவனம் செலுத்தலாம்" என உத்தவ் தாக்கரே விமர்சித்திருந்தார்.
முதல்வர் உத்தவ் தாக்கரேவின் பேச்சுக்குப் பதிலடி கொடுத்து பாஜக செய்தித் தொடர்பாளர் கேசவ் உபாத்யாயே அளித்த பேட்டியில், “உத்தவ் தாக்கரே பாஜகவை விமர்சித்துப் பேசினாரே தவிர மாநிலத்தில் தங்கள் ஆட்சியின் அவலம் பற்றிப் பேசவில்லை.
காங்கிரஸ் கட்சி வீர சாவர்க்கர் பற்றிக் கடுமையாக விமர்சித்து வருகிறது. அதுபற்றி அவர் பேசவில்லை. ஆனால், தசரா பேரணியை மட்டும் வீர சாவர்க்கர் அரங்கில் சிவசேனா நடத்துகிறது. ஆட்சியைத் தக்கவைக்க இந்துத்துவாவில் சமரசம் செய்கிறது சிவசேனா. விவசாயிகளுக்கு ரூ.10 ஆயிரம் கோடி நிவாரணத் தொகை அறிவித்தது என்பது கேலிக்கூத்தாக இருக்கிறது” எனத் தெரிவித்தார்.
பாஜக செய்தித் தொடர்பாளர் கருத்துக்கு சிவசேனா கட்சியின் மூத்த தலைவரும் தலைமைச் செய்தித் தொடர்பாளருமான சஞ்சய் ராவத் இன்று அளித்த பேட்டியின் மூலம் பதிலடி கொடுத்தார்.
அதில் அவர் கூறுகையில், “ வீர சாவர்க்கர் தொடர்பான எந்த விஷயத்திலும் இதுவரை சிவசேனா கட்சி மவுனமாக இருந்ததில்லை. ஒருபோதும் மவுனமாக இருக்காது.
எங்களைப் பற்றிக் குறை கூறியவர்கள் வரலாற்றை ஆய்வு செய்து, வீர சாவர்க்கர் விஷயத்தில் சிவசேனா எந்த அளவுக்கு ஆதரவாக இருந்தார்கள், போராடியிருக்கிறார்கள் என்பதைத் தெரிந்து கொள்ளலாம்.
சிவசேனாவுக்கும், இந்துத்துவாவிற்கும் வழிகாட்டியாகவே வீர சாவர்க்கரைப் பார்க்கிறோம். எங்கள் மீது கேள்விகளை எழுப்புவோருக்கு நாங்கள் ஒரு கேள்வி கேட்கிறோம். கடந்த 6 ஆண்டுகளாக நீங்கள்தானே ஆட்சியில் இருக்கிறீர்கள். ஏன் வீர சாவர்க்கருக்கு பாரத ரத்னா விருது அறிவிக்கவில்லை?
கடந்த 6 ஆண்டுகளில் பலருக்கும் பாரத ரத்னா விருது அறிவித்தீர்கள். அப்படியிருக்கும் போது வீர சாவர்க்கருக்கு பாரத ரத்னா விருது அறிவிப்பதில் என்ன இடர்ப்பாடு வந்துவிடப்போகிறது” எனக் கேள்வி எழுப்பினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT