Published : 26 Oct 2020 11:43 AM
Last Updated : 26 Oct 2020 11:43 AM
ரிசர்வ் வங்கி கவர்னர் சக்திகாந்த தாஸ் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார். அறிகுறியில்லாமல் இருப்பதால், வீட்டில் இருந்தே பணிகளைக் கவனிப்பதாக ட்விட்டரில் அவர் தெரிவித்துள்ளார்.
நாட்டில் கரோனா வைரஸ் எண்ணிக்கை நாள்தோறும் 90 ஆயிரம் எனும் பாதிப்பிலிருந்து தற்போது 50 ஆயிரத்துக்கும் கீழ் சரிந்துள்ளது. ஒட்டுமொத்த தொற்று எண்ணிக்கை 80 லட்சத்தை நெருங்கியுள்ளது, அதேசமயம், குணமடைந்தோர் எண்ணிக்கையும் 68 லட்சத்தை நெருங்கியுள்ளது.
கரோனா வைரஸ் பாதிப்புக்கு மத்திய அமைச்சர்கள், எம்.பி.க்கள், எம்எல்ஏக்கள், முக்கிய உயர் அதிகாரிகள் எனப் பலரும் பாதிக்கப்பட்டனர். மத்திய அமைச்சர் அமித் ஷா, தர்மேந்திர பிரதான், நிதின் கட்கரி உள்ளிட்ட பலர் பாதிக்கப்பட்டு உடல்நலம் தேறினர்.
இந்நிலையில் ரிசர்வ் வங்கி கவர்னர் சக்திகாந்த தாஸ் கரோனாவில் பாதிக்கப்பட்டுள்ளார். கரோனா காலத்தில் முழுவீச்சில் பணியாற்றிய சக்திகாந்த தாஸ் இப்போது தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார்.
சக்திகாந்த தாஸ் தனது ட்விட்டர் பதிவில், “எனக்கு நடத்தப்பட்ட பரிசோதனையில் கரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. எனக்கு அறிகுறி இல்லாத தொற்று இருப்பதால் வீட்டில் இருந்தபடி பணியாற்றுவேன். வழக்கம் போல் ரிசர்வ் வங்கி செயல்படும்.
கடந்த சில நாட்களாக என்னுடன் தொடர்பில் இருந்தவர்கள் தங்களைத் தனிமைப்படுத்திக் கொண்டு பரிசோதனை செய்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன். துணை கவர்னர்களுடன் தொடர்ந்து தொடர்பில் இருந்து வருகிறேன். மற்ற அதிகாரிகளும் பணி நிமித்தமாக ஆலோசித்து வருகிறார்கள்” எனத் தெரிவித்துள்ளார்.
தற்போது ரிசர்வ் வங்கி, 4 துணை கவர்னர்களான பி.பி.கனுகோ, எம்.கே.ஜெயின், எம்.டி பத்ரா, எம்.ராஜேஸ்வர் ராவ் என முழுமையான அளவில் பணியாற்றி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT