Published : 25 Oct 2020 02:35 PM
Last Updated : 25 Oct 2020 02:35 PM
ஜம்மு காஷ்மீரின் முன்னாள் முதல்வர் மெகபூபா முப்தியின் மக்கள் ஜனநாயகக் கட்சியின் அங்கீகாரத்தை ரத்து செய்ய வேண்டும் எனக் கோரி பாஜக மூத்த தலைவர் அஸ்வனி குமார் சருங்கோ தேர்தல் ஆணையத்திடம் புகார் அளித்துள்ளார்.
மெகபூபா முப்தி நேற்று முன்தினம், தேசத்துக்கு விரோதமாகவும், அரசியலமைப்புச் சட்டத்துக்கு மாறாகவும் கருத்துக்களைத் தெரிவித்தார் என்பதை சுட்டிக்காட்டி இந்த புகார் அளிக்கப்பட்டுள்ளது.
மெகபூபா முப்தி நேற்றுமுன்தினம் அளித்த பேட்டியில் கூறுகையில், “ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கான கொடி , சிறப்பு அந்தஸ்து மீண்டும் வழங்கப்பட்டால்தான் இந்திய தேசியக்கொடியை நான் பிடிப்பேன், தேர்தலில் போட்டியிடுவேன் அதுவரை இந்த விஷயங்களைச் செய்வதில் நாட்டமில்லை
ஜம்மு காஷ்மீர் மக்களின் மரியாதை, உரிமைகளை பாஜக கொள்ளையடித்துவிட்டது. நாங்கள் சுதந்திரமான, ஜனநாயகமான மதச்சார்பற்ற இந்தியாவை விரும்புகிறோம். இன்றுள்ள சூழலில் சிறுபான்மையினர், தலித்துகள் பாதுகாப்பாக இல்லை. சிறுபான்மையினரை அவமதிக்கிறார்கள்” என்று பேசியிருந்தார்.
இந்தப் பேச்சுக்கு மாநில பாஜக கடுமையாகக் கண்டனம் தெரிவித்துள்ளது. மெகபூபா முப்தியின் தேசவிரோதப் பேச்சுக்கு அவரை தேசவிரோதச் சட்டத்தில் கைது செய்ய வேண்டும் என்று பாஜக கோரிக்கை விடுத்திருந்தது.
இந்நிலையில் பாஜகவின் அரசியல் விவகாரப்பிரிவுப் பொறுப்பாளர் அஸ்வானி குமார் சுருங்கோ , தேர்தல் ஆணையத்திடம் மெகபூபா முப்தியின் மக்கள் ஜனநாயக்கட்சிக்கு எதிராக புகார் அளித்துள்ளார். அந்த புகாரில் அவர் கூறியிருப்பதாவது:
மக்கள் ஜனநாயகக் கட்சியின் தலைவர் மெகபூபா முப்தி கடந்த இரு நாட்களுக்கு முன் பேசியதை நீங்கள் அறிவீர்கள். அவரின் பேச்சு ஊடகங்களில், பொதுவெளியில் அனைவருக்கும் அறியநேர்ந்தது. மெகபூபா முப்தியின் பேச்சு தேசவிரோதமானது, இந்திய அரசியலமைப்புச் சட்டத்துக்கு விரோதமானது. ஆதலால், அவரின் பேச்சை ஆய்வு செய்து அவரின் மக்கள் ஜனநாயக்க கட்சியின் அங்கீகாரத்தை உடனடியாக ரத்து செய்ய வேண்டும்.
நாடாளுமன்றத்துக்கும், எம்.பி.க்களுக்கும், தேசியக் கொடிக்கும், தேசத்தின் அடையாளத்துக்கும் எதிராக பிடிபி கட்சியின் தலைவர் மெகபூபா ஒழுக்கக்கேடான கருத்துக்களைத் தெரிவித்துள்ளார்.
மெகபூபா முப்தி தனது வழக்கமான அரசியல் சொல்லாட்சி பேச்சுகளோடும், தேர்தல் அறிக்கைகளோடு தன்னைகட்டுப்படுத்துக் கொள்ளாமல், தேசத்தின் கொடி, தேசியத்தின் அடையாளம், நாடாளுமன்றத்தின் இறையாண்மை, எம்.பி.க்களின் மரியாதை, மாண்பு ஆகியவற்றை கேள்விக்குள்ளாக்கியுள்ளார்.
அதுமட்டுமல்லாமல், ஜம்மு காஷ்மீருக்கான கொடி, சிறப்பு அந்தஸ்து திரும்ப தரும்வரை தேசியக் கொடியைத் தொடமாட்டேன், தேர்தலில் போட்டியிடமாட்டேன் எனத் தெரிவித்துள்ளார். மெகபூபா முப்தியின் அரசியலமைப்புச் சட்டத்துக்கு விரோதமான, குற்றத்துக்குள்ளான பேச்சு, நாடாளுமன்றத்தில் உரிமை மீறலும், தேர்தல் ஆணையத்தின் உரிமை மீறல் கோருவதற்கும் இடமளிக்கிறது.
இவ்வாறு அந்த புகாரில் அஸ்வனி குமார் தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT