Published : 25 Oct 2020 11:12 AM
Last Updated : 25 Oct 2020 11:12 AM
குடியுரிமைத் திருத்தச் சட்டம் (சிஏஏ) என்பது குறிப்பிட்ட எந்த மதத்தினருக்கும் எதிரானது அல்ல. இந்த சட்டம் முஸ்லிம் சமூகத்தினர் எண்ணிக்கையைக் குறைக்கும் என்று சிலர் பொய்யாகப் பிரச்சாரம் செய்து முஸ்லிம் சகோதரர்களை சிலர் தவறாக வழிநடத்துகிறார்கள் என்று ஆர்எஸ்எஸ் அமைப்பின் தலைவர் மோகன் பாகவத் இன்று தெரிவித்தார்.
ஆர்எஸ்எஸ் அமைப்பின் ஆண்டுதோறும் நடக்கும் விஜயதசமி பேரரணி இன்று நாக்பூரில் உள்ள தலைமையகத்தில் இன்று நடந்தது. கரோனா வைரஸ் பரவல் காரணமாக மிகப்பெரிய அளவில் பேரணி நடத்தப்படாமல், 50 முக்கிய ஆர்எஸ்எஸ் தொண்டர்கள் பங்கேற்புடன், மகரிஷி வியாஸ் அரங்கில் நடத்தப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் பேசியதாவது:
சீனாவை எதிர்க்க இந்திய அரசு ராணுவ ரீதியாக சிறப்பாகத் தயாராவது அவசியம். பல நாடுகள் சீனாவுக்கு எதிராக எழுந்துவிட்டன. கரோனா வைரஸ் காலத்தைப் பயன்படுத்திக்கொண்டு சீன ராணுவம் இந்திய எல்லைகளை ஆக்கிரமிக்க முயன்றுள்ளது.
இந்தியாவின் எல்லைப்பகுதிகளை சீனா ஆக்கிரமித்து வருவது உலக நாடுகளுக்குத் தெரியும். சீனாவின் சட்டவிரோதமான ஆக்கிரமிப்பு பற்றி ஒவ்வொரு நாடும் அறிவார்கள். தைவான், வியட்நாம், அமெரி்க்கா, ஜப்பான், இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளுடன் சீனா சண்டையிட்டு வருகிறது அனைவருக்கும் தெரியும்.
ஆனால், இந்தியா அளித்த பதிலடி சீனாவுக்கு அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.சீனாவைவிட இந்தியா வலிமையிலும், ராணுவத்திலும் இன்னும் சிறப்பாக முன்னேற வேண்டும்.
இந்தியா அனைத்து நாடுகளுடனும் நட்புடன் பழகக்கூடியது. இதுதான் நம் தேசத்தின் இயல்பு. ஆனால், நம்முடைய பணிவான குணத்தை பலவீனமாக மதிப்பிட்டு, கொடூரமான சக்தியால் நம்மை பலவீனப்படுத்த சீனா முயற்சிப்பது ஏற்றுக்கொள்ள முடியாது. நம்மை எதிர்ப்பவர்கள் இதை இப்போது தெரிந்து கொள்ள வேண்டும்.
கடந்த 2019-ம் ஆண்டில் ஜம்மு காஷ்மீருக்கான சிறப்பு அதிகாரம் வழங்கும் 370 பிரிவு ரத்து செய்யப்பட்டுள்ளது, கடந்த ஆண்டு நவம்பர் 9-ம் தேதி உச்ச நீதிமன்றம் அயோத்தி வழக்கில் தீர்ப்பளித்துள்ளது. இந்த தீர்ப்பை ஒட்டுமொத்த தேசமும் ஏற்றுக்கொண்டது. இந்தஆண்டு ஆகஸ்ட் 5-ம்தேதி, ராமர் கோயில் கட்ட அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது. இந்த நிகழ்ச்சிகளில் இந்தியர்கள் பொறுமையுடன், உணர்ச்சிப்பூர்வமாக இருந்ததைக் காணமுடிந்தது.
மத்திய அரசு கொண்டு வந்த குடியுரிமைச் சட்டம் தொடர்பாக நாட்டில் பல்வேறு நகரங்களில் போராட்டம் நடந்தது,அதனால் பதற்றமான சூழல் உருவாகியது. இதுபற்றி விரிவாக விவாதிப்பதற்குள், நம்முடைய கவனம் அனைத்தும் கரோனா மீது திரும்பிவிட்டது.
சிலரின் மனதில் வகுப்புவாதம் தொடர்பான சிந்தனை அவர்கள் மனதில் மட்டுமேஇருக்கிறது. அனைத்து விவகாரங்களையும் கரோனா மறைத்துவிட்டது.குடியுரிமைத் திருத்தச் சட்டம் எந்த ஒரு மதத்தினருக்கும் எதிரானது அல்ல. சிலர் இந்த சட்டத்துக்கு எதிராகப் போராடுகிறார்கள்.
இந்தச்சட்டம் நடைமுறைக்கு வந்தால், முஸ்லிம் எண்ணிக்கை கட்டுப்படுத்தப்படும் என்று சிலரின் பொய்யான பிரச்சாரங்களை நம்பி, முஸ்லிம் சகோதரர்கள் தவறாக வழிநடத்தப்படுகிறார்கள். இதனால் தொடர்ந்து போராட்டம் நடந்தது.
கரோனா வைரஸைப் பற்றி அச்சப்பட வேண்டிய அவசியமில்லை, ஆனால், எச்சரிக்கையாவும், விழிப்புடனும் இருக்க வேண்டும். கரோனாவுக்காக நாம் வாழ்வாதாரத்தை நிறுத்த முடியாது, இயல்பு வாழ்க்கையை நிறுத்த முடியாது. கரோனா வைரஸ் பரவல் இருக்கிறது, ஆனால், உயிரிழப்புகள் குறைவுதான்.
மற்ற நாடுகளுடன் ஒப்பிடும்போது, கரோனா வைரஸால் இந்தியாவில் அடைந்த பாதிப்புகள் மிகக்குறைவுதான். மிகவிரைவாகவே மத்திய அரசு, மக்களுக்கு விழிப்புணர்வு ஊட்டியதாலும், முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்ததாலும், கட்டுப்பாடுகளை விதித்ததாலும் கரோனா கட்டுக்குள் வந்தது.
கரோனா அச்சம் காரணமாக மக்கள் கூடுதலாக வழிப்புணர்வு நடவடிக்கைகளை எடுத்தனர். கரோனா வைரஸால் சுத்தம், சுகாதாரம், வாழும் சுற்றுச்சூழலை சுத்தமாக வைத்திருத்தல், குடும்பத்தின் மதிப்பு ஆகியவற்றை உணர முடிந்தது.
கரோனா வைரஸ் புதிய வேலையின்மை உருவாக்கி பெரும் சவால்களை உருவாக்கியுள்ளது. ஏராளமான மக்கள் வேலையிழந்துள்ளார்கள். இருப்பினும் இயல்புநிலையால், மீண்டும் நகரங்களுக்கு தொழிலாளர்கள் திரும்பத் தொடங்கியுள்ளார்கள். ஆனால், வேலைவாய்ப்பு எதிர்பார்த்த அளவு இல்லை. பல்வேறு துறைகளில் புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்க வேண்டிய சவால் இருக்கிறது.
இவ்வாறு மோகன் பாகவத் தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT