Published : 25 Oct 2020 10:50 AM
Last Updated : 25 Oct 2020 10:50 AM
பிஹார் சட்டப்பேரவை தேர்தலுக்கான பாஜகவின் அறிக்கையில் கரோனா தடுப்பு மருந்து இலவசம் என அறிவிப்பு வெளியானது. வேறு சில மாநிலங்களும் இதே அறிவிப்பை வெளிட்டதால், மத்திய அரசிற்கு அந்த மருந்துகளை அதிகமாக வாங்கும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது.
பிஹார் சட்டப்பேரவைக்கான தேர்தல் அறிக்கையை பாஜக கடந்த 22 ஆம் தேதி வெளியிட்டது. இதில், தம் கட்சியின் கூட்டணி ஆட்சி அமைந்தால் பிஹார்வாசிகள் அனைவருக்கும் கரோனா தடுப்பு மருந்தை இலவசமாக அளிப்பதாக மத்திய நிதித்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவிப்பு வெளியிட்டிருந்தார்.
இதற்காக நான்கு வகையான தடுப்பு மருந்துகள் தயாராகி வருவதாகவும் அவர் தகவல் அளித்திருந்தார். இதையடுத்து அதே போன்ற அறிவிப்பை அதிமுகவின் தமிழக அரசும், பாஜக ஆளும் மத்தியப்பிரதேச அரசுகளும் அறிவித்துள்ளன.
இதை மேலும் பல மாநில அரசுகளும் அறிவிக்க உள்ள நிலையில் மத்திய அரசிற்கு புதிய நெருக்கடி உருவாகி விட்டதாகக் கருதப்படுகிறது. இதன் காரணமாக ஒரே சமயத்தில் அதிக அளவிலான மருந்துகளை வாங்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
இது குறித்து ‘இந்து தமிழ் திசை’ இணையத்திடம் மத்திய சுகாரத்துறை அமைச்சக அதிகாரிகள் வட்டாரம் கூறும்போது, ‘பிஹாரில் பாஜக கூட்டணி ஆட்சி அமைந்து அதற்கு மட்டும் முதலாவதாக தடுப்பு மருந்து அளித்தால் பிரச்சனை உருவாகும்.
இதனால், இதை இலவச அறிப்பாக வெளியிட்ட மாநிலங்கள் அனைத்திற்கும் ஒரே சமயத்தில் சுமார் 30 கோடி மக்களுக்கு மருந்தை அளிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதற்காக அம்மருந்துகளை அதிக அளவில் விலைக்கு பெற ஒரு நிபுணர் குழுவும் அமைக்கப்பட உள்ளது.’ எனத் தெரிவித்தனர்.
பொதுமக்களின் சுகாதார நலன் என்பது மாநில அரசு எடுக்கும் முடிவுகளுக்கு உட்பட்டது. இதனால், மத்திய அரசிடம் இருந்து மானிய விலையில் கிடைக்கும் மருந்துகளை விற்பனை செய்வதும், இலவசமாக அளிப்பதும் மாநில அரசின் எடுக்கும் முடிவாக இருக்கும்.
எனவே தான், பிஹாரை தொடர்ந்து வேறு பல மாநிலங்களும் அரசியல் லாபத்தை கணக்கில் கொண்டு தடுப்பு மருந்துகளை இலவசமாக அளிப்பதாக அறிவிக்கத் துவங்கி உள்ளன. போலியோ உள்ளிட்ட தேசிய அளவிலான தடுப்பு மருந்துகள் செலுத்தும் திட்டத்தின்படி மொத்தம் 12 வகையான மருந்துகள் தற்போது அளிக்கப்படுகின்றன.
முழுக்க இலவசமாக மாநிலங்களில் அளிக்கப்படும் இத்தடுப்பு மருந்துகள் அனைத்திற்கும் மத்திய அரசும் எந்த விலையும் பெறுவதில்லை. இதேவகையில், கரோனாவிற்கான தடுப்பு மருந்துகளும் இலவசமாகவே கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த தடுப்பு மருந்து அனைவருக்கும் இலவசமாகவே அளிக்கப்பட வேண்டும் எனவும் டெல்லி முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவால் வலியுறுத்தி உள்ளார். பிஹாரில் ஆட்சி அமைப்பது யாராக இருப்பினும், பாஜக அறிவிப்பின் பலன் நாடு முழுவதிலும் உள்ள மக்களுக்கும் கிடைக்கும் சூழல் உருவாகி உள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT