Published : 24 Oct 2020 05:41 PM
Last Updated : 24 Oct 2020 05:41 PM
2019-20 ஆம் நிதியாண்டுக்கான தனிநபர் வருமான வரிக் கணக்கைத் தாக்கல் செய்யும் காலக்கெடுவை டிசம்பர் 31-ம் தேதி வரை நீட்டித்து மத்திய அரசு இன்று உத்தரவிட்டுள்ளது.
இதற்கு முன் நவம்பர் 30-ம் தேதிவரை காலக்கெடு விதித்திருந்த நிலையில், அது டிசம்பர் வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. அதேசமயம், வருமான வரி செலுத்துவோரின் கணக்குகள் தணிக்கைக்கு உட்படுத்தப்பட்டு அதன்பின் ரிட்டர்ன் செலுத்துவதாக இருந்தால் அதற்கான காலக்கெடு 2021, ஜனவரி 31-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
கரோனா வைரஸ் பரவல் காரணமாக வரி செலுத்துவோர் வரி செலுத்துவதில் பல்வேறு சிரமங்களைச் சந்தித்ததைத் தொடர்ந்து, வரிவிதிப்புச் சட்டங்களில் தளர்வு அளிக்கும் அவசரச் சட்டம் கடந்த மார்ச் 31-ம் தேதி மத்திய அரசால் கொண்டுவரப்பட்டது. இதன்படி வருமான வரிக் கணக்கைத் தாக்கல் செய்வதில் பல்வேறு தளர்வுகளை மத்திய அரசு அறிவித்தது.
கடந்த 2019-20 ஆம் நிதியாண்டுக்கான வருமான வரிக் கணக்கைத் தாக்கல் செய்யும் காலக்கெடு மே மாதம் வரை முதலில் நீட்டிக்கப்பட்டது. அதன்பின் ஜூலை 31-ம் தேதிவரை நீட்டிக்கப்பட்டது. அதன்பின் மூன்றாவது முறையாக நவம்பர் 30-ம் தேதிவரை நீட்டித்து மத்திய நிதியமைச்சகம் உத்தரவிட்டது.
இந்நிலையில், பல்வேறு கணக்குத் தணிக்கையாளர்கள், தணிக்கையாளர் அமைப்புகள் மத்திய அரசுக்கு விடுத்த கோரிக்கையில், வருமான வரிக் கணக்குத் தாக்கல் செய்யும் காலக்கெடுவை நவம்பருக்குப் பின்பும் நீட்டிக்க வேண்டும் என்று வலியுறுத்தி இருந்தனர். ஏற்கெனவே நவம்பர் 30-ம் தேதிவரை நீட்டித்த நிலையில் தற்போது டிசம்பர் 31-ம் தேதிவரை நீட்டித்து மத்திய நேரடி வரிகள் வாரியம் இன்று உத்தரவிட்டுள்ளது.
இதுகுறித்து மத்திய நேரடி வரிகள் வாரியம் வெளியிட்ட அறிவிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:
''தனிநபர் வருமான வரிக் கணக்குத் தாக்கல் செய்யும் காலக்கெடு நவம்பர் 30-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டு இருந்தது. அந்தக் காலக்கெடு டிசம்பர் 31-ம் தேதிவரை நீட்டிக்கப்படுகிறது.
வரி செலுத்துவோரின் வருமான வரிக் கணக்குகள் தணிக்கைக்கு உட்படுத்த வேண்டிய கணக்குகளாக இருந்தால் அந்தக் கணக்குதாரர்களுக்கு ரிட்டர்ன் தாக்கல் செய்யும் காலக்கெடு 2021, ஜனவரி 31-ம் தேதிவரை நீட்டிக்கப்படுகிறது.
சர்வதேச பணப் பரிமாற்றங்கள், உள்நாட்டில் குறிப்பிட்ட வங்கிக் கணக்குப் பரிமாற்றங்கள் குறித்து கணக்குத் தாக்கல் செய்ய வேண்டிய வருமான வரி செலுத்துவோருக்கான காலக்கெடுவும் 2021, ஜனவரி 31-ம் தேதிவரை நீட்டிக்கப்பட்டுள்ளது
வருமான வரிச் சட்டத்தின் கீழ் இதர வருமான வரி செலுத்துவோருக்கான காலக்கெடு 2020, டிசம்பர் 31-ம் தேதிவரை நீட்டிக்கப்படுகிறது''.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT