Published : 24 Oct 2020 04:46 PM
Last Updated : 24 Oct 2020 04:46 PM
பிஹாரில் 15 வருட காலம் நிலவிய லாலு பிரசாத் யாதவின் ஆட்சியால் தவறானக் காரணங்களுக்காக பிஹார் பிரபலமானது. இதன் முதல்வராக 2005 இல் நிதிஷ்குமார் அமர்ந்தது முதல் அந்த அவப்பெயர் மாறத் துவங்கியது.
இவரை பிஹார்வாசிகள் ’விகாஸ் புருஷ் (வளர்ச்சியின் நாயகன்)’ என்றழைக்கத் துவங்கினர். ஆனால், 15 வருடங்களுக்கு பின் நிதிஷ் ஆட்சிக்கு எதிரான போக்கு பிஹார்வாசிகள் இடையே எழத் துவங்கி விட்டது.
பிஹாரில் மூன்று கட்டங்களாக நடைபெறவிருக்கும் சட்டப்பேரவை தேர்தல் இந்தமுறை புதிய முகம் எடுத்துள்ளது. இதில் வெற்றி பெற்று ஆட்சி அமைக்க முயலும் அனைத்து கட்சிகளுக்கும் ஒரு முக்கிய நோக்கம் உள்ளது.
இதன் பின்னணியில் தொடர்ந்து மூன்று முறை அம்மாநில முதல்வராக இருக்கும் நிதிஷ்குமார் இடம் பெற்று விட்டார். நிதிஷை எதிர்ப்பவர் பட்டியலில், அவருக்கு இதுவரையும் ஆட்சி அமைக்க ஆதரவளித்து வந்த பாஜகவும் இடம் பெற்றிருப்பதாக ஒரு சந்தேகம் உள்ளது.
இதன் அரசியல் உத்தியாகவே மறைந்த ராம்விலாஸ் பாஸ்வானின் லோக் ஜன சக்தி கட்சி(எல்ஜேபி) பிஹாரில் தனித்து களம் இறங்கி இருப்பதாகப் புகாரும் உள்ளது. லாலு பிரசாத் யாதவின் ராஷ்டிரிய ஜனதா தளம் தலைமையிலான மெகா கூட்டணியுடன் நிதிஷ் கட்சியின் வாக்குகளையும் எல்ஜேபி பிரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதனால், 243 தொகுதிகளில் சரிபாதியை விட ஒன்றில் அதிகமாக போட்டியிட்டாலும் நிதிஷுக்கு பாஜகவைவிடக் குறைந்த எம்எல்ஏக்களே கிடைக்கும் வாய்ப்பு உள்ளது. இதை காரணம் காட்டி தம் கட்சிக்காக முதல்வர் பதவியை கோர பாஜக காத்திருக்கிறது.
தேர்தல் முடிவுகளில் நிதிஷ் கட்சிக்கு மிகக்குறைவான தொகுதிகள் கிடைத்தால், பாஜகவின் போக்கில் பெரும்
மாற்றம் வரும் வாய்ப்பும் உள்ளது. எல்ஜேபி உள்ளிட்ட சிறியக் கட்சிகளின் ஆதரவுடன் பாஜக ஆட்சி அமைக்க முயலும்.
ஏனெனில், இந்த தேர்தலில் சிறிய மற்றும் வேற்று மாநிலக் கட்சிகள் அனைத்தும் இரண்டு கூட்டணிகளாக இணைந்து போட்டியிடுகின்றன. முற்போக்கு ஜனநாயகக் கூட்டணி என ஜன் அதிகார், ஆஸாத் சமாஜ் கட்சி உள்ளிட்ட ஐந்து கட்சிகள் இணைந்துள்ளன.
மற்றொரு கூட்டணியாக பகுஜன் சமாஜ், அகில இந்திய மஜ்லீஸ்-எ-இத்தாஹுதுல் முஸ்லிமின், ராஷ்டிரிய லோக் சமதா(ஆர்எல்எஸ்பி), சமாஜ்வாதி ஜனதா தளம் உள்ளிட்ட 6 கட்சிகள் இணைந்து மெகா ஜனநாயக மதநல்லிணக்கக் கூட்டணி அமைத்துள்ளன.
இவ்விரண்டு கூட்டணிகளும் தேர்தலின் முடிவுகள் வர மட்டுமே என்பது அவர்களுக்கும் தெரியும். இதன் உறுப்பினர்களுக்கு ஓரிரு தொகுதிகள் கிடைத்தால் அதை பயன்படுத்துவதில் பாஜக முதல் இடம் வகிக்கும் என எதிர்பார்ப்பு உள்ளது.
ஏனெனில், மத்தியில் பாஜக தலைமையிலான ஆட்சி தொடர்ந்து இரண்டாவது முறையாக அமைந்திருக்கிறது. இதன் பலனால் பிஹாரில் இந்த முறை முதல்வராகா விட்டால் எதிர்காலத்திலும் அந்த வாய்ப்பு கிடைக்காது என பாஜக எண்ணுகிறது.
இதனால், மத்தியில் தொடர்ந்து கொண்டு பிஹாரில் மட்டும் தனித்து போட்டியிடும் எல்ஜேபி மீது பாஜக எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதற்காக நிதிஷ்குமார் தொடர்ந்து வலியுறுத்தியும் பாஜக அசைந்து கொடுப்பதாக இல்லை.
இப்பிரச்சனையில் எழும் கேள்விகளுக்கு பதில் அளிக்கும் மத்திய உள்துறை அமைச்சரான அமித்ஷா, தேர்தல் முடிவுகளுக்கு பிறகே எல்ஜேபி மீது முடிவு எடுக்கப்படுவதாகக் கூறி வருகிறார்.
இதுபோல், பிஹாரின் முதல்வர் பதவி மீது பாஜகவிற்கு உருவாகும் ஆசை புதியது அல்ல. கடந்த வருடம் மக்களவை தேர்தலின் வெற்றிக்கு பின், அடுத்து முதல்வர் பதவி தம் கட்சிக்கு ஒதுக்கப்பட வேண்டும் என பிஹாரின் பாஜகவினர் குரல் கொடுத்தனர்.
இதனால், நிதிஷ் மீண்டும் லாலுவுடன் கைகோர்த்து விடாமல் இருக்க அதன் தேசிய தலைவர்கள் தலையிட்டு பிஹார் தலைவர்களை அமைதியாக்கினர். இப்போது நிதிஷ் தான் அடுத்த முதல்வர் எனக் கூறியபடி அப்பதவிக்கு பாஜக மறைமுகமாகக் குறி வைத்துள்ளது.
சிறிய கூட்டணிகளும் கூட முதல்வர் நிதிஷ்குமாரை தன் மேடைகளில் கடுமையாக சாடி வருகின்றனர். இந்த தேர்தலில் நிதிஷ் தலைமையில் ஆளும் கூட்டணிக்கு முக்கியப் போட்டியாளரான மெகா கூட்டணி உள்ளது.
இதன் முக்கிய குறியிலும் முதல்வர் நிதிஷ் சிக்கி உள்ளார். இவரை பதவிக்கு வராமல் தடுக்க சிறிய கட்சிகளின் கூட்டணியின் உதவியை மெகா கூட்டணி பெறும் வாய்ப்புகளும் தெரிகின்றன.
எனவே, பிஹாரின் அடுத்த முதல்வராக யார் வந்தாலும் அப்பதவியில் நிதிஷ்குமாரை மீண்டும் அமர வைக்கக் கூடாது என்பதில் அனைத்துக் கட்சிகளும் குறியாக உள்ளன. இதன் காரணமாக தேர்தல் முடிவுகளுக்கு பின் நிதிஷ் தனித்து விடப்படும் நிலை உருவாகி வருகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT