Published : 24 Oct 2020 01:47 PM
Last Updated : 24 Oct 2020 01:47 PM
நாட்டில் உள்ள அனைத்து ராணுவ கேன்டீன்களிலும் சீனப் பொருட்களுக்குத் தடை விதிக்க பாதுகாப்பு அமைச்சகம் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. இதனை அடுத்து இறக்குமதி செய்யப்படும் மதுபானங்களுக்கும் தடை வரும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
'சுயசார்பு இந்தியா' கொள்கையின்படி உள்நாட்டுத் தயாரிப்புகளுக்கு முக்கியத்துவம் அளிக்கும் ஆத்மனிர்பர் திட்டத்தின் கீழ் இந்நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், ராணுவ கேன்டீன்களில் இறக்குமதி செய்யப்படும் பொருட்களைத் தடை செய்வதற்கான நடவடிக்கைகளில் பாதுகாப்பு அமைச்சகம் செயல்பட்டு வருவதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
அவ்வகையில, பாதுகாப்பு அமைச்சகத்தின் கீழ் இயங்கிவரும் கேன்டீன் ஸ்டோர்ஸ் துறை, (சி.எஸ்.டி) மற்றும் யூனிட் ரன் கேன்டீன்களிலும் இறக்குமதி செய்யப்பட்டு வரும் பல பொருட்களின் விற்பனை நிறுத்தப்படும்.
கேன்டீன் ஸ்டோர்ஸ் துறை சி.எஸ்.டி (Canteen Stroes Department) நாட்டின் மிகப் பெரிய சில்லறை விற்பனைச் சங்கிலிகளில் ஒன்றாகும். இதன் கீழ் 3,500க்கும் மேற்பட்ட கேன்டீன்கள் இயங்கிவருகின்றன. இவை வடக்கில் சியாச்சின் பனிப்பாறையில் தொடங்கி நாட்டின் தென்மேற்குப் பகுதியில் உள்ள அந்தமான் மற்றும் நிகோபார் தீவுகள் பகுதி வரை பரவியுள்ளன.
சி.எஸ்.டி மூலம் 5,000 க்கும் மேற்பட்ட வெவ்வேறு பொருட்கள் விற்பனை செய்யப்படுகின்றன. இவற்றில் சுமார் 400 பொருட்கள் இறக்குமதிப் பொருட்கள்.
இவற்றில், பெரும்பாலான பொருட்கள் சீன நிறுவனங்களின் தயாரிப்புகள் ஆகும். இவற்றில் கழிப்பறைத் தூரிகைகள், டயப்பர்கள், ரைஸ் குக்கர்கள், சாண்ட்விச் டோஸ்ட்டர்கள், வாக்குவம் கிளீனர்கள், சன் கிளாஸ்கள், பெண்களுக்கான விதவிதமான கைப்பைகள், மடிக்கணினிகள் மற்றும் டெஸ்க்டாப் கணினிகள் உள்ளிட்டவை அதிக அளவில் இறக்குமதி செய்யப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வருகின்றன.
சி.எஸ்.டி கவுன்ட்டர்கள் மூலம் இந்தப் பொருட்கள் விற்பனை செய்வது தடை செய்யப்பட்ட பிறகு அவற்றிற்கு மாற்றாக இந்தியத் தயாரிப்புகள் கேன்டீன்களில் இடம்பெறும்.
இறக்குமதி செய்யப்பட்டு கேன்டீன்களில் விற்கப்பட்டுவந்த வெளிநாட்டு மதுபானங்ளும் இனி நிறுத்தப்படும். மேலும் கடந்த பல மாதங்களாக, யூனிட் ரன் கேன்டீன்களில் உயர் ரக வெளிநாட்டு மதுபான பிராண்டுகள் விற்பனை செய்யப்படுவதில்லை எனவும் அரசுத்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT