Last Updated : 24 Oct, 2020 11:42 AM

1  

Published : 24 Oct 2020 11:42 AM
Last Updated : 24 Oct 2020 11:42 AM

நாடு திரும்பிய மலையாளிகள் புதிய தொழில் தொடங்க ஆர்வம்: 'நோர்கா' அமைப்பில் குவியும் விண்ணப்பங்கள்

பிரதிநிதித்துவப் படம்

திருவனந்தபுரம்

கரோனா காரணமாகப் பல்வேறு நாடுகளிலிருந்து ஊர் திரும்பியிருக்கும் மலையாளிகள், கேரளாவில் புதிய தொழில்களைத் தொடங்குவதில் மிகுந்த ஆர்வம் செலுத்தத் தொடங்கி இருக்கிறார்கள். கேரள மாநிலத்தவர்களுக்குத் தொழில் வாய்ப்பை வழங்கும் ‘நோர்கா’ (NORKA - Non-Resident Keralites Affairs) என்டிபிரேம் திட்டத்தில், கடந்த ஆறு மாதங்களில் மட்டும் 4,897 பேர் பதிவு செய்துள்ளனர். இது முந்தைய ஆண்டுகளைவிட மிக அதிகம்.

கடந்த காலங்களில் பெரும்பாலானோர் டாக்சி சர்வீஸ் உள்ளிட்ட பணிகளில்தான் அதிக ஆர்வம் காட்டினர். இப்போது உணவகங்கள், பேக்கரிகள், பட்டறைகள், எண்ணெய் ஆலைகள், கறித்தூள் உற்பத்தி, மசாலா அலகுகள், நறுமணப் பொருள் தயாரிப்புத் தொழிற்சாலைகள், சப்பாத்தி உற்பத்தி அலகுகள், பண்ணைகள், விளையாட்டு மையங்கள் மற்றும் உடற்பயிற்சிக் கூடங்களைத் தொடங்குவதில் மலையாளிகளின் ஆர்வம் திரும்பியிருக்கிறது.

தற்போது என்டிபிரேம் திட்டத்தின் கீழ் ரூ.30 லட்சம் வரை கடன் கிடைக்கிறது. இது ரூ.50 லட்சமாக உயர்த்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மானியமும் 15 சதவீதத்திலிருந்து 20 சதவீதமாக உயர்த்தப்படுகிறது. இந்தத் திட்டத்துக்காக பட்ஜெட்டில் ரூ.18 கோடி அனுமதி வழங்கப்பட்டது. இதை ரூ.40 கோடியாக உயர்த்தவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

கேரளாவில் உள்ள 18 நிதி நிறுவனங்கள் இத்திட்டத்திற்கு ஒத்துழைத்து வருகின்றன. வெளிநாடுகளிலிருந்து திரும்பி வந்தவர்களுக்கு ரூ.50 லட்சம் வரை கடன் வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதற்காகக் கேரள நிதி நிறுவனமான கேஎஃப்சி-யுடன் ஒப்பந்தம் செய்யப்பட்டிருக்கிறது.

இதுகுறித்துச் செய்தியாளர்களிடம் பேசிய குடியுரிமைத் துணைத் தலைவர் கே.வரதராஜன் மேலும் கூறியதாவது:

''வெளிநாடுகளிலிருந்து திரும்பிய மலையாளிகளுக்கு ஐடி துறையில் ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் தொடங்குவதற்கும் இப்போது ‘நோர்கா’ உதவிகளை வழங்குகிறது. தொழில் இழந்தவர்களுக்கு ‘ட்ரீம் கேரளா’ திட்டத்தின் மூலம் தொழில் அளிப்பதற்கான நடவடிக்கைகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்தத் திட்டத்தில் இதுவரை தொழில் வாய்ப்புக் கேட்டு சுமார் 3,000 பேர் பதிவு செய்துள்ளனர். 70 தொழில் கொடையாளர்களும் இதில் பதிவு செய்துள்ளனர்.

நவம்பர் 1-ம் தேதிக்குள் இதற்கான நடவடிக்கைகளை ‘நோர்கா’ பூர்த்தி செய்யும். இதனுடன் சேர்த்து வெளிநாடுகளிலிருந்து திரும்பியவர்களுக்கு சூப்பர் மார்க்கெட்டுகள் தொடங்குவதற்கும் ‘சப்ளைகோ’ நிறுவனத்துடன் பேச்சுவார்த்தை நடத்தப்படுகிறது. குறைந்தது, ஐந்து நபர்களுக்காவது வேலைவாய்ப்பு வழங்கும் நிறுவனங்களை அமைக்கும் சங்கங்களுக்கு ‘நோர்கா’ ரூ.3 லட்சம் வரை உதவி வழங்கும்.

இந்த ஆண்டு 60 சங்கங்களுக்கு உதவி வழங்கப்படும். அனைத்துப் பஞ்சாயத்துகளிலும் ‘பிரவாசி அப்பெக்ஸ்’ சங்கங்களைத் தொடங்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. ஒரு சங்கம் குறைந்தது பத்து பேர்களுக்கு வேலை கொடுக்கும் வகையில் ஒரு முயற்சியைத் தொடங்க வேண்டும் என்பதே நிபந்தனை ஆகும். இந்திய இறைச்சித் தயாரிப்பு நிறுவனமான எம்பிஐ-யுடன் ‘நோர்கா’ ஏற்படுத்திய ஒப்பந்தத்தின்படி, என்ஆர்ஐ-க்களுக்குக் கேரளாவில் 5,000 விற்பனை நிலையங்கள் திறக்க ஏற்பாடுகள் செய்யப்படும். கரோனா காலம் முடிந்த உடன் மீண்டும் கடன் மேளாவைத் தொடங்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

‘நோர்கா’ கணக்கின்படி கரோனா காரணமாக வளைகுடா நாடுகளிலிருந்து மட்டும் 2.5 லட்சம் மலையாளிகள் தாயகம் திரும்பியுள்ளனர். அவர்களில் சுமார் 60 சதவீதம் பேர் தங்கள் வேலையை இழந்தவர்கள். இவர்களில் ஆர்வமுள்ளவர்களுக்குத் திறன் பயிற்சி அளித்து சான்றிதழ்களை வழங்குவதற்கும், சிறந்த வேலைவாய்ப்பை வழங்குவதற்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன”

இவ்வாறு வரதராஜன் கூறினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x