Published : 24 Oct 2020 06:15 AM
Last Updated : 24 Oct 2020 06:15 AM
இந்திய கடல் பகுதிகளைப் பாதுகாப்பதற்கும் போருக்குத் தயார் நிலையில் இருப்பதை உறுதிப்படுத்தும் வகையிலும், அரபிக் கடலில் ஏவுகணையை செலுத்தி கப்பற்படையினர் ஒத்திகைப் பார்த்து அசத்தி உள்ளனர். இதுதொடர்பான வீடியோ வெளியாகி வைரலாகி உள்ளது.
இந்திய எல்லைப் பகுதிகளில் சீனா அத்துமீறி நுழைய முயற்சித்து வருகிறது. அத்துடன், கடல் பகுதிகளிலும் ஆதிக்கம் செலுத்தும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது. இந்நிலையில், அமெரிக்கா, ஜப்பான், ஆஸ்திரேலியாவுடன் இணைந்து இந்திய கப்பற்படையினர் போர் பயிற்சி நடத்தினர். இந்நிலையில், இந்தியக் கடல் பகுதிகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்தவும், போருக்கு தயாராக இருப்பதை வெளி உலகத்துக்குத் தெரியப்படுத்தவும், இந்திய கப்பற்படையினர் ஏவுகணையைச் செலுத்தி ஒத்திகைப் பார்த்துள்ளனர்.
அரபிக் கடலில் எதிரியின் போர்க்கப்பலை தாக்கி அழிக்கும் ஏவுகணையை கப்பற்படையினர் ஏவியுள்ளனர். எந்த இடத்திலும் சிறிதளவு கூட பிசகாமல், திட்டமிட்டபடி அந்த ஏவுகணை பழைய கப்பலை தாக்கி அழித்தது. ‘ஐஎன்எஸ் பிரபால்’ போர்க் கப்பலில் இருந்து இந்த ஏவுகணை ஏவப்பட்டு எதிரி இலக்கு தகர்க்கப்பட்டுள்ளது.
விமானம் தாங்கி போர்க்கப்பல் விக்கிரமாதித்யா மற்றும் பல போர்க்கப்பல்கள், ஹெலிகாப்டர்கள் பிரம்மாண்ட போர் ஒத்திகையில் ஈடுபட்டுள்ளன. அதன் ஒரு பகுதியாக இந்த ஏவுகணை செலுத்தப்பட்டுள்ளது. இதுதொடர்பான வீடியோவை கப்பற்படை செய்தித் தொடர்பாளர் ட்விட்டரில் நேற்று வெளியிட்டார். இது தற்போது வைரலாகி உள்ளது.
எந்த அச்சுறுத்தலையும் எதிர்கொள்ள இந்திய கப்பற்படை முன்னேற்பாடுகளை செய்து வருகிறது. அதற்கான பணிகளை கப்பற்படை தலைமை தளபதி அட்மிரல் கரம்பீர் சிங் கடந்த வியாழக்கிழமை நேரில் ஆய்வு செய்தார். அப்போது அவர் கூறும்போது, ‘‘இந்திய கப்பற்படை வீரர்கள் போருக்குத் தயார் நிலையில் இருக்கின்றனர். அதில் அவர்கள் தொடர்ந்து கவனம் செலுத்தி வருகின்றனர். அதற்காக அவர்களைப் பாராட்டுகிறேன்’’ என்று தெரிவித்தார்.
இந்தியாவுடன் சீனா எல்லைப் பிரச்சினையை உருவாக்கி, பதற்றத்தை ஏற்படுத்தி வருகிறது. இந்நிலையில், எதற்கும் தயார் என்று சீனாவுக்கு தெரிவிக்கும் வகையில் இந்திய கப்பற்படையினரின் போர்ப் பயிற்சி அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT