Last Updated : 23 Oct, 2020 01:57 PM

5  

Published : 23 Oct 2020 01:57 PM
Last Updated : 23 Oct 2020 01:57 PM

கேரளா கரோனா சூழல்: மத்திய அமைச்சர் ஹர்ஷவர்தனுக்கு பதில் அளித்த ராகுல் காந்திக்கு  முதல்வர் பினராயி விஜயன் பாராட்டு

காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி, கேரள முதல்வர் பினராயி விஜயன் : கோப்புப்படம்

திருவனந்தபுரம்

கேரளாவில் நிலவும் கரோனா வைரஸ் சூழல் குறித்து மத்திய அமைச்சர் ஹர்ஷவர்த்தன் பேசிய கருத்துக்கு பதிலும், கண்டனமும் தெரிவித்த காங்கிரஸ் எம்.பி.ராகுல் காந்திக்கு முதல்வர் பினராயி விஜயன் பாராட்டுத் தெரிவித்துள்ளார்.

கரோனா வைரஸ் நாட்டில் பரவத் தொடங்கியபோது, கேரள மாநிலம் நோய் தொற்றை கட்டுக்குள் வைத்திருந்து கரோனா நோயாளிகள் எண்ணிக்கையை குறைத்தது. ஆனால், கடந்த ஆகஸ்ட் மாதத்திலிருந்து அங்கு கரோனா நோயாளிகள் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றனர். நாள்தோறும் 7 ஆயிரம் பேருக்கும் அதிகமாக பாதிக்கப்பட்டு வருகின்றனர். 2 லட்சத்துக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர், ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.

கேரளாவின் கரோனா சூழல் குறித்து கடந்த ஞாயிற்றுக்கிழமை சண்டே சம்வாத் எனும் ஆன்லைன் நிகழ்ச்சியில் மத்திய சுகாதாரத்துறைஅமைச்சர் ஹர்ஷவர்தன் பேசினார். அப்போது, “ ஓணம் பண்டிகையில் அசட்டையாகவும், ஒட்டுமொத்த கவனக்குறைவாகவும் இருந்ததற்கான விலையைத்தான் கேரள மாநிலம் கொடுத்து வருகிறது. மக்கள் முழுமையாக பாதுகாப்பு விதிகளை பின்பற்றவி்லலை” என்று குற்றம்சாட்டினார். இதற்கு கேரள மாநில சுகாதாரத்துறை அமைச்சர் கே.கே. சைலஜாவும் பதில் அளித்திருந்தார்.

இந்நிலையில் கேரள மாநிலம் வயநாட்டுக்கு 3 நாட்கள் பயணமாக காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி வந்திருந்தார். அவர் புறப்பட்டுச் செல்லும் போது கேரள மாநிலம் கரோனா பரவலைக் கையாண்டுவரும் முறைகள், தடுப்பு முறைகள், பரிசோதனைகள், மருத்துவர்கள் , சுகாதாரப்பணியாளர்கள் செயல்பாடு அனைத்தையும் ராகுல் காந்தி பாராட்டிப் புகழந்து பேசினார்.

அப்போது மத்திய அமைச்சர் ஹர்ஷவர்தன் கேரள மாநிலம் குறித்து தெரிவித்த கருத்து குறித்து நிருபர்கள் கேட்டபோது அதற்கு ராகுல் காந்தி பதில் அளிக்கையில் “ ஹர்ஷவர்தன் பேசியது தவிர்க்கப்பட வேண்டிய கருத்து. ஒட்டுமொத்த தேசமும் கரோனாவுக்கு எதிராக ஒன்றாகச் சேர்ந்து போராடி வருகிறது. இதில் ஒரு குறிப்பிட்ட மாநிலத்தை மட்டும், குறிப்பிட்ட சிலரை மட்டும் குற்றம்சாட்டுவதை நான் ஏற்க முடியாது” எனத் தெரிவி்த்தார்.

ஹர்ஷவர்தனுக்கு பதில் அளித்த ராகுல் காந்தியின் கருத்துக் குறித்து கேரள முதல்வர் பினராயி விஜயனிடம் நேற்று நிருபர்கள் கேள்வி எழுப்பினர் அதற்கு அவர் கூறுகையில் “ காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர், முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, நாடுமுழுவதும் கரோனா சூழல் எவ்வாறு இருக்கிறது என்பதை நன்கு புரிந்தவர். ஆனால், ராகுல் காந்தி மாநில விஷயங்களில் கருத்துக் கூற மாட்டார் என்று ரமேஷ் சென்னிதலா தெரிவித்திருந்தார்.

ஆனால், ராகுல் காந்தி மாநில சுகாதாரத்துறையை பாராட்டிப் பேசியுள்ளார். அதற்கு காரணம் நாடுமுழுவதும், மற்ற மாநிலங்களில் கரோனா சூழல் எவ்வாறு இருக்கிறது என்பதை நன்கு அறிந்தவர் ராகுல் காந்தி. ராகுல் காந்தியின் கருத்துக்களை எதிர்க்கட்சித் தலைவர் ஏற்கிறாராஅல்லது இல்லையா என்பது பற்றி நான் கருத்துக் கூறவில்லை. இது அவர்களுக்கு இடையிலான விஷயம்” எனத் தெரிவித்தார்.

கரோனா வைரஸ் பரவலைக் கேரள அரசு கட்டுப்படுத்தவில்லை, முறையாக தடுப்பு நடவடிக்கைகளைக் கையாளவில்லை என்று காங்கிரஸ் கட்சியும், எதிர்க்கட்சித் தலைவருமான ரமேஷ் சென்னிதலா குற்றம்சாட்டி வரும் நிலையில் ராகுல் காந்தி மாநில சுகாதாரத்துறையை பாராட்டியுள்ளார்.

ரமேஷ் சென்னிதலா விடுத்த அறிக்கையில் “ ராகுல் காந்தி மாநில விவகாரங்களில் கருத்து ஏதும் கூறமாட்டார் என்று நான் கூறவில்லை. அவ்வாறு சொல்வது ஆதாரமற்றது. ராகுல் காந்தி தேசியத் தலைவர் அவரின் கருத்துக்கள் பிராந்தியத்துக்கு மட்டும் பொருத்தமானது அல்ல. அவரின் பார்வை எப்போதும் தேசியஅளவில் இருக்கும். அவரின் கருத்துக்களும் அப்படித்தான் இருக்கும்” எனத் தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x