Published : 23 Oct 2020 01:33 PM
Last Updated : 23 Oct 2020 01:33 PM
ரிங்மாஸ்டரின் குச்சிக்கு சர்க்கஸ் சிங்கம் பதிலளித்துள்ளதாக காங்கிரஸ் மூத்த தலைவர் ப. சிதம்பரம் ட்விட்டரில் கருத்து தெரிவித்துள்ளார்.
ரிசர்வ் வங்கியின் ஆளுநர், செபியின் தலைவர், மற்றும் பொருளாதார செயலாளர் ஆகிய மூவரும் பொருளாதாரம் குறித்து பேசிய ஒரு நாள் கழித்து, காங்கிரஸ் மூத்த தலைவரும் முன்னாள் நிதியமைச்சருமான ப.சிதம்பரம் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்தி காந்த தாஸ் புதன்கிழமை, ''கரோனா வைரஸ் தாக்கம், ஊரடங்கு, பொதுமுடக்கத்தினால் சரிவடைந்த பொருளாதாரம் மீண்டும் எழுச்சி பெறும் வாசற்படியில் இருக்கிறோம்'' என்று கூறியிருந்தார்..
செபியின் தலைவர் அஜய் தியாகியும் அதேநாளில் பொருளாதாரம் குறித்து கூறுகையில், ''சந்தைகளில் மீண்டும் மூலதனங்கள் மீட்கப்படுவது பரந்துபட்ட செயல்களின் அடிப்படையிலானது அதில் சில சாதகமான அம்சங்களும் உள்ளன'' என்றார். அதனைத் தொடர்ந்து பொருளாதார விவகார செயலாளர் தருண் பஜாஜ், ''முதலீடுகளை ஈர்ப்பது'' குறித்து சில கருத்துக்களை தெரிவித்தார்.
இதனை அடுத்து ப.சிதம்பரம் தொடர்ச்சியான அடுத்தடுத்த ட்வீட்டுகளில் இவர்களுக்கு பதிலளிக்கும்விதமாக தனது கருத்தை பதிவு செய்துள்ளார்.
''செபி தலைவர், டி.இ.ஏ செயலாளர் மற்றும் ஆர்பிஐ ஆளுநர் சக்திகாந்த தாஸ் @DasShaktikanta ஆகிய மூவரும் ஒரே நாளில் ஒரே விஷயத்தில் பேச வேண்டும் என்பது புதிரானதல்லவா. அதிலும் இவர்கள் மூவரும் பொருளாதாரத்தைப் பற்றியே பேச முயன்றுள்ளனர். பொருளாதாரம் எழுச்சியடையும் என்று கூறியிருப்பது, ரிங்மாஸ்டரின் குச்சிக்கு சர்க்கஸ் சிங்கம் பதிலளித்துள்ளது என்றுதான் தோன்றுகிறது.
இந்தியாவில் உள்ள குடும்பங்களில் பாதிக்குக் கீழாக உள்ள குடும்பங்களின் கைகளில் அரசாங்கம் பணத்தை வைத்து, ஏழைகளின் தட்டுகளில் உணவை வைக்காவிட்டால் பொருளாதாரம் புத்திசாலித்தனமாக புத்துயிர் பெறாது.
பெரும்பான்மையான மக்களுக்கு பணம் அல்லது பொருட்கள் மற்றும் சேவைகளை பெறுவதற்கான நிலையில் இன்று இல்லை என்பதை அரசுத்துறைகளில் முக்கிய பொறுப்புகளில் உள்ள இந்த மூன்று பேரும் ஒற்றுமையுடன் இதனை நிதி அமைச்சரிடம் போய் சொல்ல வேண்டும்.
நான் சொல்வது உங்களுக்கு சந்தேகமாக இருந்தால், வாழ்வதற்கே நெருக்கடி ஏற்பட்டுள்ள பிஹார் வாக்காளர்களின் குரல்களைக் கேளுங்கள் - எந்த வேலையும் இல்லை, போதுமான வருமானமும் இல்லை, குறைந்த வருமானம்கூட இல்லாத நிலைமை அவர்களுக்கு ஏற்பட்டுள்ளது. அவர்களின் எண்ணம் எல்லாம் எப்படியாவது உயிர்வாழ்ந்தால் போதும் என்ற நிலையில்தான் உள்ளது. செலவு செய்வதில் அல்ல.
இவ்வாறு ப.சிதம்பரம் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT