Published : 22 Oct 2020 12:12 PM
Last Updated : 22 Oct 2020 12:12 PM
கடந்த 2 மாதங்களில் பிரதமர் மோடியிடமிருந்து சீனா எனும் வார்த்தையை மக்கள் கேட்டிருக்கிறார்களா. சீனா நம்முடைய நிலத்தை ஆக்கிரமித்துள்ளது. உண்மையின் பக்கம் மக்களைத் திருப்ப பிரதமருக்கு விருப்பமில்லை என்று காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி விமர்சித்துள்ளார்.
கேரள மாநிலம் வயநாடு மக்களவைத் தொகுதிக்கு 3 நாட்கள் பயணமாக காங்கிரஸ் முன்னாள் தலைவரும், எம்.பி.யுமான ராகுல் காந்தி கடந்த 19-ம் தேதி சென்றார். கடந்த 3 நாட்களில் தனது தொகுதியில் நடந்துவரும் கரோனா தடுப்பு நடவடிக்கைகள், மருத்துவமனையில் செய்யப்பட்டுள்ள வசதிகளைக் கேட்டறிந்தும், ஆய்வும் நடத்திய ராகுல் காந்தி நேற்று கண்ணூரிலிருந்து டெல்லி புறப்பட்டார்.
டெல்லி புறப்படும் காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி நிருபர்களுக்குப் பேட்டி அளித்தார்.
அப்போது அவர் கூறியதாவது:
“கடந்த இரு மாதங்களாக பிரமதர் மோடியிடமிருந்து சீனா எனும் வார்த்தையை மக்கள் கேட்டிருக்கிறார்களா. ஏன் பிரதமர் மோடி சீனா எனும் வார்த்தையை உச்சரிக்கவில்லை என்று சிந்திக்கிறீர்கள் . ஏன் சீனா எனும் வார்த்தையை மோடி பேசவில்லை என நினைக்கிறீர்கள்.
ஏனென்றால், உண்மையின் பக்கம் மக்களைத் திசை திருப்பிவிடக் கூடாது என்பதால்தான் சீனா எனும் வார்த்தையை பிரதமர் மோடி பேசவில்லை. இந்தியாவின் நிலப்பகுதியை சீனா ஆக்கிரமித்துள்ளதுதான் உண்மை.
நம்முடைய நிலப்பகுதியிலிருந்து எப்போது சீன ராணுவத்தை விரட்ட மோடி திட்டமிட்டுள்ளார். இதைவிட மிகப்பெரிய பிரச்சினை ஏதும் இருக்கிறது என்று நீங்கள் நினைக்கிறீர்களா. இதுதான் மிகப்பெரிய பிரச்சினை. ஆனால், இதுபற்றி பிரதமர் மோடி ஒரு வார்த்தைகூட பேசவில்லை. பாரத மாதாவின் நிலப்பகுதி குறித்து பிரதமர் ஒருவார்த்தைகூட பேசாதது வியப்பாக இருக்கிறது”.
இவ்வாறு ராகுல் காந்தி தெரிவித்தார்.
டெல்லி புறப்படும்முன், மலப்புரம் மாவட்டத்தில் உள்ள மனன்தாவடி மருத்துவமனையில் எம்.பி. நிதியில் கட்டப்பட்ட ஐசியு வென்டிலேட்டர் சிகிச்சை மையத்தை ராகுல் காந்தி திறந்துவைத்தார். மேலும், கேரளாவில் பாரம்பரிய நெல் வகைகளைச் சேகரித்துப் பராமரித்துவரும் செருவயல் ராமன் என்பவரை ராகுல் காந்தி சந்தித்துப் பாராட்டுகளைத் தெரிவித்தார்.
லடாக் எல்லைப் பகுதியில் இந்திய -சீன ராணுவத்துக்கு இடையே கடந்த 5 மாதங்களாகத் தொடர்ந்து பதற்றமான சூழல் நிலவி வருகிறது. இந்தியாவின் எல்லைப்பகுதியை சீனா ஆக்கிரமித்துள்ளதாக காங்கிரஸ் கட்சியும் அதன் தலைவர்களும் குற்றம் சாட்டுகின்றனர். ஆனால், மத்திய அரசும், ராணுவமும் அதை மறுத்து வருகின்றன.
ராகுல் காந்தி நேற்று முன்தினம் ட்விட்டரில் பதிவிட்ட கருத்தில், “ இந்தியா தொடர்ந்து மோடியால் உருவாக்கப்பட்ட பேரழிவுகளால் பாதிக்கப்பட்டு வருகிறது. பட்டினிச் சாவுகள், குறிப்பாக குழந்தைகள் இறப்பது இதயத்தை நொறுங்கச் செய்கிறது. மத்திய அரசின் சேமிப்பு கிட்டங்கிகளில் தானியங்கள் இருப்பு நிரம்பி வழியும்போது, இதுபோன்ற இறப்புகளை எவ்வாறு மத்திய அரசு அனுமதிக்கிறது” எனத் தெரிவித்திருந்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT