Published : 22 Oct 2020 08:13 AM
Last Updated : 22 Oct 2020 08:13 AM

இளநிலைப் பொறியாளர் பதவிகளுக்கான தேர்வு: பணியாளர் தேர்வு ஆணையம் நடத்துகிறது- முழு விவரம்

இளநிலைப் பொறியாளர் (குடிமுறை, பொறிமுறை, மின்சாரம், அளவுக் கணக்கிடுதல் மற்றும் ஒப்பந்தங்கள்) பதவிகள் 2019-க்கான (முதல் தாள்) தேர்வை கணினி முறையில் பணியாளர் தேர்வு ஆணையம் நடத்தவிருக்கிறது.

தெற்குப் பிராந்தியத்தில் 1,42,862 நபர்கள் தேர்வு எழுத அனுமதிக்கப்பட்டுள்ளார்கள். குடிமுறை, அளவு கணக்கிடுதல் மற்றும் ஒப்பந்தங்களுக்கான தேர்வு 36 மையங்களிலும், பொறிமுறைக்கான தேர்வு 32 மையங்களிலும், மின்சார பிரிவுக்கான தேர்வு 45 மையங்களிலும், தமிழ்நாட்டின் சென்னை, கோயம்புத்தூர், மதுரை, சேலம், திருச்சிராப்பள்ளி, திருநெல்வேலி மற்றும் வேலூர் ஆகிய நகரங்களில் உள்ள 20 இடங்களில் நடைபெறும். ஆந்திரப் பிரதேசத்தில் சிராலா, குண்டூர், காக்கிநாடா, குர்னூல், நெல்லூர், ராஜமுந்திரி, திருப்பதி, விஜயவாடா, விசாகப்பட்டினம் மற்றும் விஜய நகரம் ஆகிய இடங்களிலும் தெலுங்கானாவில் ஐதராபாத், கரீம் நகர் மற்றும் வாரங்கல் ஆகிய இடங்களிலும் நடைபெறும்.

2020 அக்டோபர் 26 முதல் அக்டோபர் 30 வரை நான்கு நாட்களுக்கு தெற்குப் பிராந்தியத்தில் இந்த தேர்வு நடைபெறும். காலை 10 மணி முதல் மதியம் 12 மணி வரை மற்றும் மாலை 3 மணி முதல் 5 மணி வரை என 2 சுழற்சிகள் இருக்கும்.

தங்களுடைய தேர்வு தினத்திற்கு நான்கு நாட்களுக்கு முன்னர் மட்டுமே அனுமதி சீட்டை பணியாளர் தேர்வு ஆணையத்தின் இணையதளத்தில் இருந்து தேர்வர்கள் பதிவிறக்கம் செய்துகொள்ளும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த தகவல் விண்ணப்பத்தில் குறிப்பிட்டிருந்த கைபேசி எண்களுக்கு குறுந்தகவல் மூலமாகவும் மின்னஞ்சல் முகவரிக்கு மின்னஞ்சல் மூலமாகவும் அனுப்பப்பட்டுள்ளது.
கடிகாரங்கள், புத்தகங்கள், துண்டு சீட்டுகள், பத்திரிகைகள், மின்னணு சாதனங்கள் (கைபேசிகள், ப்ளூடூத் உபகரணங்கள், ஹெட்ஃபோன்கள், ரகசிய கேமராக்கள், ஸ்கேனர்கள், கால்குலேட்டர், சேமிப்பு கருவிகள் போன்றவை) ஆகிய தடை செய்யப்பட்ட பொருட்கள் எக்காரணத்தைக் கொண்டும் தேர்வு அறைக்குள் அனுமதிக்கப்பட மாட்டாது.

இத்தகைய பொருட்கள் தேர்வர்களிடம் இருந்து கண்டறியப்பட்டால், அவர்களது தேர்வு நிராகரிக்கப் படுவதோடு சட்டப்பூர்வமான கிரிமினல் நடவடிக்கையும் எடுக்கப்படும். மேலும் 3 முதல் 7 வருடங்கள் வரை தேர்வு எழுத அவர்கள் அனுமதிக்கப்படமாட்டார்கள். எனவே, தடை செய்யப்பட்ட பொருட்களையும், பைகளையும் தேர்வு மையத்திற்கு கொண்டு வரவேண்டாம் என்று தேர்வர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

மின் அனுமதி சான்றிதழ் மற்றும் அதில் குறிப்பிடப்பட்டிருக்கும் அசல் அடையாள சான்று ஆகியவை இல்லாமல் தேர்வு எழுத தேர்வர்கள் அனுமதிக்கப்படமாட்டார்கள். மேலும் விவரங்களுக்கு தென் பிராந்திய அலுவலகத்தின் உதவி எண்களை அவர்கள் தொடர்பு கொள்ளலாம் (044-28251139 & 9445195946).

கோவிட்-19 காரணமாக தேவையான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் ஆணையம் எடுத்துள்ளது. இது தொடர்பாக மின் அனுமதி சீட்டில் குறிப்பிட்டிருக்கும் விதிமுறைகளை பின்பற்றுமாறு தேர்வர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

மேற்கண்ட தகவல்களை பணியாளர் தேர்வு ஆணையம் (தென் பிராந்தியம்), சென்னை, இணை செயலாளர் மற்றும் மண்டல இயக்குநர் நாகராஜன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு தெரிவிக்கிறது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x