Published : 21 Oct 2020 09:40 PM
Last Updated : 21 Oct 2020 09:40 PM
அடிப்படைவாதிகளும், தீவிரவாதிகளும் நம் நாட்டின் மதரஸாக்களில் வளர்க்கப்படுவதாக மத்தியப்பிரதேச அமைச்சர் உஷா தாக்கூர் சர்ச்சை கருத்தை தெரிவித்தார். இடைத்தேர்தல் நடைபெறும் நிலையில் அமைச்சர் உஷா மீது மத்திய தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் காங்கிரஸ் வலியுறுத்தத் தொடங்கி உள்ளது.
பாஜக ஆளும் ம.பி. மாநிலத்தின் 28 தொகுதிகளுக்கு நவம்பர் 3 இல் இடைத்தேர்தல் நடைபெறுகிறது. இதில் காங்கிரஸ் மற்றும் பாஜகவிற்கு இடையே நிகழும் கடும் போட்டியால் அதன் தலைவர்கள் பேச்சு பல்வேறு சர்ச்சைகளை ஏற்படுத்தி வருகிறது.
ம.பி.யின் ஆன்மீகம் மற்றும் கலாச்சாரத்துறை அமைச்சரான உஷா தாக்கூர் இன்று போபாலின் செய்தியாளர்கள் கூட்டத்தில் பேசுகையில், ‘‘அனைவருக்கும் பொதுக்கல்வி அளிக்கப்பட வேண்டும். வெறும் மதஅடிப்படையிலானக் கல்வி தீவிரத்தை ஏற்படுத்தி பாதை மாற வழிவகுக்கிறது.
அனைத்து அடிப்படைவாதிகளும், தீவிரவாதிகளும் மதரஸாவில் படித்து உருவானவர்கள். ஜம்மு-காஷ்மீரை இவர்கள் தீவிரவாதிகளின் தொழிற்சாலையாக்கி விட்டனர்.
இதுபோன்ற மதரஸாக்களை தேச ஒருமைப்பாட்டை வளர்த்து சமூகத்தின் பொது வழியில் சேர்க்க முடியாது. இதனால், அவைகளை நாட்டின் பொதுக்கல்வியுடன் இணைப்பது அவசியம்.
இதை அசாம் அரசு அங்கு மதரஸாக்களை மூடி செய்து காட்டி விட்டது. தேசியவாதம் வளர தடையாக இருப்பவைகள் அனைத்தும் மூடப்பட வேண்டும்.
இந்த மதரஸாக்களுக்கு அரசு சார்பில் அளிக்கப்படும் நிதியும் நிறுத்தப்பட வேண்டும். அவசியமானால் இதை அவர்களது வஃக்பு வாரியச் சொத்துக்களின் வருமானம் மூலம் அளிக்க வகை செய்யலாம்.’’ எனத் தெரிவித்தார்.
ம.பி. அமைச்சர் உஷா தாக்கூரின் இந்த சர்ச்சைக்குரிய பேச்சை அம்மாநிலக் காங்கிரஸ் தலைவர்கள் கண்டித்துள்ளனர். இடைத்தேர்தலில் மதவாதத்தை கிளப்பி மக்களை பிரிக்கும் முயற்சி இந்து எனவும் விமர்சித்துள்ளனர்.
இதன் மீது மத்திய தேர்தல் ஆணையம் வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்கவும் காங்கிரஸ் வலியுறுத்தி உள்ளது. இந்த 28 தொகுதிகளின் இடைத்தேர்தல் முடிவுகள் ம.பி.யின் பாஜக ஆட்சி தொடருமா? இல்லையா? என்பதையும் தீர்மானிக்க இருப்பது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT