Last Updated : 21 Oct, 2020 09:47 AM

 

Published : 21 Oct 2020 09:47 AM
Last Updated : 21 Oct 2020 09:47 AM

நோய் எதிர்ப்புச் சக்தி 3 மாதம்தான்; கரோனாவில் மீண்டவர் மீண்டும் பாதிக்கப்படலாம்: ஐசிஎம்ஆர் எச்சரிக்கை

ஐசிஎம்ஆர் இயக்குநர் பல்ராம் பார்கவா : கோப்புப்படம்

புதுடெல்லி

கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு குணமடைந்தவர் உடலில் நோய் எதிர்ப்புச் சக்தி என்பது 3 முதல் 5 மாதங்கள் வரை மட்டுமே இருக்கும். ஆதலால், மீண்டும் பாதிக்கப்படலாம் என்று ஐசிஎம்ஆர் அதிர்ச்சித் தகவல் வெளியிட்டுள்ளது.

இந்தியாவில் கரோனா பாதிப்பு படிப்படியாக குறைந்து வருகிறது என்பது ஆறுதல் அளிக்கும் விஷயம் என்றாலும், கரோனாவில் பாதிக்கப்பட்டவர்களுக்கு மீண்டும் கரோனா தொற்று ஏற்படும் நிகழ்வுகள் நடந்து வருகின்றன. கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு மீண்டவர் உடலில் நோய் எதிர்ப்புச் சக்தி வந்துவிட்டால் மீண்டும் வராது என்ற கற்பிதங்கள், புரிதல்கள் மக்கள் மத்தியில் இருந்து வருகின்றன.

ஆனால், கரோனாவில் பாதிக்கப்பட்டு மீண்டவர் உடலில் அதற்கான நோய் எதிர்ப்புச் சக்தி 3 மாதங்கள் மட்டுமே இருக்கும் என்று மருத்துவ வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.

ஐசிஎம்ஆர் இயக்குநர் மருத்துவர் பல்ராம் பார்கவா நேற்று ஊடகங்களுக்குப் பேட்டி அளித்தார்.

அப்போது அவர் கூறியதாவது:

''இந்தியாவில் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு குணமடைந்தவர்கள் மீண்டும் வைரஸால் பாதிக்கப்படுவது குறித்து ஆய்வு செய்து வருகிறோம். இதில் புள்ளிவிவரங்களையும் சேகரித்து வருகிறோம். எங்களுக்குக் கிடைத்த தகவலின்படி, கரோனாவில் பாதிக்கப்பட்டு மீண்டவர்கள் உடலில் நோய் எதிர்ப்புச் சக்தி குறைந்தபட்சம் 3 மாதங்கள் வரையிலும் அதிகபட்சமாக 5 மாதங்கள் வரையில் மட்டுமே இருக்கும்.

குணமடைந்தவர் உடலில் நோய் எதிர்ப்புச் சக்தி 90 நாட்களுக்குப் பின் குறையத் தொடங்கினால், மீண்டும் தொற்று ஏற்பட வாய்ப்பு அதிகம். அதாவது 90 நாட்களுக்குப் பின் மீண்டும் தொற்றால் பாதிக்கப்பட வாய்ப்பு இருக்கிறது.

எத்தனை பேர் கரோனாவில் கரோனாவில் பாதிக்கப்பட்டுள்ளார்கள், அதில் எத்தனை பேர் குணமடைந்துள்ளார்கள், குணமடைந்தவர்களுக்கு மீண்டும் கரோனா எத்தனை பேருக்கு வந்துள்ளது குறித்து தொடர்ந்து ஆய்வு செய்து வருகிறோம்.

ஆதலால், கரோனாவில் பாதிக்கப்பட்டு குணமடைந்த ஒருவர் நோய் எதிர்ப்புச் சக்தி வந்துவிட்டதாக இருக்காமல், மீண்டும் பாதிக்கப்படமாட்டோம் என்று நம்பாமல் தொடர்ந்து முகக்கவசம், சமூக விலகலைக் கடைப்பிடிப்பது அவசியம்.

அதேபோல கரோனா நோயாளிகளின் உயிர் காக்கும் ரெம்டெசிவிர், ஹைட்ராக்ஸி குளோரோகுயின் போன்ற மாத்திரை, மருந்துகள் இடைக்காலத் தீர்வுதான். இது தொடர்ந்து ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. அதேபோல பிளாஸ்மா சிகிச்சையும் முழுமையாகப் பரிந்துரைக்கப்படவில்லை. அது தொடர்பான விவாதங்களும், ஆய்வுகளும் நடந்து வருகின்றன''.

இவ்வாறு பார்கவா தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x