Published : 20 Oct 2020 06:54 PM
Last Updated : 20 Oct 2020 06:54 PM
கரோனா பொது முடக்கத்துக்குப் பின்னர் கேரளாவில் புதிதாக 20 ஐடி நிறுவனங்கள் தொழில் தொடங்கியுள்ளன. தற்போது கேரளாவில் இயங்கிவரும் 5 நிறுவனங்கள் தங்கள் வளர்ச்சிப் பணிகளுக்காக புதிய கட்டிடங்களைக் கட்ட கூடுதல் நிலம் வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளன.
புதிய நிறுவனங்கள் வருவதின் மூலம் நூற்றுக்கும் மேற்பட்டோருக்கு வேலை கிடைக்கும். 100 நாட்களில் டெக்னோ பார்க்கில் 500 பேருக்கும், இன்ஃபோ பார்க்கில் 1000 பேருக்கும், சைபர் பார்க்கில் 125 பேருக்கும் புதிதாகத் தொழில் வாய்ப்புகள் உருவாக்கப்படும் எனக் கருதப்படுகிறது.
டெக்னோ சிட்டியில் உள்ள ஐடி நிறுவனக் கட்டிடங்கள், டெக்னோ பார்க்கின் மூன்றாவது கட்டத்தில் உள்ள டோரஸ் குழுமத்தின் ஐடி கட்டிடம், டெக்னோசிட்டியிலும், டெக்னோ பார்க்கின் முதலாவது கட்டிடத்திலும் நடைமுறைப்படுத்தப்படவுள்ள ‘பிரிகேட்’ திட்டம், இன்ஃபோ பார்க்கில் உள்ள பிரிகேட் கார்னிவல், லூலூ நிறுவனங்களின் திட்டங்கள் ஆகிய புதிய திட்டங்கள்தான் கேரளாவின் ஐடி துறையில் தற்போதைய முக்கியத் திட்டங்கள் ஆகும். டெக்னோ பார்க்கில் தற்போது செயல்பட்டு வரும் வின் விஷ் என்ற நிறுவனம் ஒரு ஏக்கரில் ஐடி வளாகத்தைக் கட்டத் தீர்மானித்துள்ளது. இது சுமார் 100 கோடி ரூபாய் மதிப்புள்ள திட்டமாகும்.
இவை தவிர மேலும் கூடுதல் நிறுவனங்கள் கேரளாவுக்கு வர விருப்பம் தெரிவித்துள்ளன. இது தொடர்பான ஆலோசனைகள் நடத்தப்பட்டு வருகின்றன. டெக்னோ சிட்டியில் 100 கோடி ரூபாய் முதலீட்டில் 2 லட்சம் சதுர அடியில் கட்டப்படும் அரசுக் கட்டிடங்கள் இந்த வருடம் டிசம்பரில் திறக்கப்படும். கட்டிடப் பணிகள் நிறைவடைந்த கொரட்டி இன்ஃபோ பார்க், ஐபிஎஸ் நிறுவனத்தின் ஐடி வளாகம் ஆகியவற்றின் செயல்பாடுகள் அடுத்த வருடத்தில் தொடங்கப்படும். காஸ்பியன் டெக்னாலஜி பார்க், மீடியா சிஸ்டம் இந்தியா சொல்யூஷன்ஸ், கோழிக்கோடு சைபர் பார்க்கில் பிளக் அண்ட் பிளே வர்த்தக அலுவலகம் ஆகியவற்றுக்கான கட்டிடப் பணிகளும் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன.
கரோனா பரவலைத் தொடர்ந்து அனைத்து நிறுவனங்களும் ஹைபிரிட் பணிமுறை என்ற புதிய நடைமுறைக்கு மாறி வருகின்றன. வீட்டிலிருந்தே பணி செய்வது மற்றும் அலுவலத்தில் இருந்து பணி செய்வது ஆகியவற்றை இணைத்துச் செயல்படுத்துவதுதான் இந்தப் புதிய ஹைபிரிட் முறையாகும். தற்போது ஐடி பார்க்குகளில் 5 சதவீதம் முதல் 10 சதவீதம் வரை ஊழியர்கள் மட்டும்தான் பணிக்கு வருகின்றனர்.
இந்தப் புதிய முறையின் மூலம் ஐடி நிறுவனங்களில் 85 சதவீதம் வரை உற்பத்தித் திறனை அதிகரிக்க முடிந்துள்ளது. கரோனா காலத்திற்குப் பின்னரும் 20 சதவீத ஊழியர்கள் வீட்டிலிருந்தபடியே வேலை பார்க்கும் முறையைத் தொடர ஐடி நிறுவனங்கள் தீர்மானித்துள்ளதாகத் தெரியவந்துள்ளது.
தற்போது கேரளாவில் உள்ள ஐடி பார்க்குகளில் சுமார் 1.10 லட்சம் பேர் வேலை பார்க்கின்றனர். ஐடி பார்க்குகள் மூலம் நேரடியாக அல்லாமல் மறைமுகமாகவும் 3.30 லட்சம் பேருக்கு வேலை கிடைத்துள்ளது.
இத்தகவல்களை கேரள அரசின் தகவல் தொழில்நுட்பத் துறை தெரிவித்துள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT