Last Updated : 19 Oct, 2020 02:10 PM

 

Published : 19 Oct 2020 02:10 PM
Last Updated : 19 Oct 2020 02:10 PM

திருவனந்தபுரம் விமான நிலையத்தை அதானி குழுமத்திடம் குத்தகைக்கு அளித்ததை எதிர்த்து வழக்கு: கேரள அரசின் மனுவைத் தள்ளுபடி செய்த உயர் நீதிமன்றம்

கேரள முதல்வர் பினராயி விஜயன் : கோப்புப்படம்

கொச்சி

திருவனந்தபுரம் விமான நிலையத்தின் பராமரிப்பை 50 ஆண்டுகளுக்கு அதானி குழுமத்துக்கு ஏலத்தில் அளித்த மத்திய அரசின் முடிவைச் செயல்படுத்தத் தடை விதிக்கக் கோரி திருவனந்தபுரம் உயர் நீதிமன்றத்தில் கேரள அரசு தொடரந்த வழக்குத் தொடர்ந்தது. அந்த வழக்கை உயர் நீதிமன்றம் இன்று தள்ளுபடி செய்து தீர்ப்பு வழங்கியது.

இந்திய விமான நிலைய ஆணையத்தின் ஜெய்ப்பூர், குவகாத்தி, திருவனந்தபுரம் ஆகிய மூன்று விமான நிலையங்களை பொதுத்துறை, தனியார் கூட்டு முயற்சியில் 50 ஆண்டுகளுக்கு அதானி குழுமத்திடம் குத்தகைக்கு விட மத்திய அமைச்சரவை கடந்த ஆகஸ்ட் மாதம் ஒப்புதல் வழங்கியது.

ஏற்கெனவே அதானி குழுமம், லக்னோ, அகமதாபாத், மங்களூரு ஆகிய விமான நிலையங்களைக் கடந்த 2019-ம் ஆண்டு முதல் பராமரித்து வரும் நிலையில் கூடுதலாக 3 விமான நிலையங்கள் வழங்கப்பட்டன.

திருவனந்தபுரம் விமான நிலையத்தின் பராமரிப்பை அதானி குழுமத்திடம் ஒப்படைத்த மத்திய அரசின் முடிவுக்கு ஒத்துழைப்பது கடினம் எனக் கோரி கேரள முதல்வர் பினராயி விஜயன் பிரதமர் மோடிக்குக் கடிதம் எழுதியிருந்தார்.

கேரள அரசு சார்பில் அனைத்துக் கட்சிக் கூட்டம் கூட்டப்பட்டு இது தொடர்பாக விவாதிக்கப்பட்டது. சட்டப்பேரவையிலும் மத்திய அரசின் இந்த முடிவுக்கு எதிராகத் தீர்மானம் கொண்டுவரப்பட்டு நிறைவேற்றப்பட்டு, இந்த முடிவை மத்திய அரசு திரும்பப் பெறவும் வலியுறுத்தப்பட்டது.

திருவனந்தபுரம் விமான நிலையத்தைத் தனியார்மயமாக்கும் முடிவுக்கும், அடுத்தகட்ட நடவடிக்கைகளை எடுக்கவும் தடை விதிக்கக் கோரி கேரள உயர் நீதிமன்றத்தில் கேரள அரசு சார்பிலும், சில தனி நபர்களும், கடந்த ஆகஸ்ட் 21-ம் தேதி தனித்தனியாக மனுத்தாக்கல் செய்தனர்.

கேரள அரசின் மனுவில், "திருவனந்தபுரம் விமான நிலையத்தைத் தனியார்மயாக்கும் முடிவுக்கும், அடுத்தகட்ட நடிவடிக்கைகளை எடுக்கவும் தடை விதிக்க வேண்டும். இல்லாவிட்டால், ஈடுசெய்ய முடியாத சேதத்தையும், கஷ்டத்தையும் கொடுத்துவிடும்.

விமான நிலையங்களைத் தனியார் மயமாக்கும் மத்திய அரசின் முடிவுக்கு எதிராகவும் ஏற்கெனவே ஒரு மனு உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அந்த மனு உச்ச நீதிமன்றத்தில் விசாரணையில் இருப்பதால் தனியார்மயமாக்கும் முடிவைச் செயல்படுத்தும் முடிவுக்குத் தடை விதிக்க வேண்டும்" எனவும் தெரிவிக்கப்பட்டது.

தனியாருக்கு விமான நிலையங்களை ஒப்படைப்பது குறித்த மத்திய அரசின் முடிவுக்கு எதிராக கடந்த ஆண்டு கேரள அரசு இதேபோன்று ஒரு மனுவை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்தது. ஆனால், அரசியலமைப்புச் சட்டம் 226-ன்படி மனுவை விசாரிக்க முடியாது என உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

இதைத் தொடர்ந்து கேரள அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. இந்த மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை நிறுத்தி வைத்து, விசாரணைக்கு ஏற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்தச் சூழலில் கடந்த ஆகஸ்ட் 21-ம் தேதி கேரள அரசு சார்பில் தாக்கல் செய்த மனு உயர் நீதிமன்ற நீதிபதிகள் கே.வினோத் சந்திரன், சி.எஸ்.தியாஸ் ஆகியோர் அமர்வில் விசாரிக்கப்பட்டு தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டது.

இந்த வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கிய நீதிபதிகள், கேரள அரசும், தனிநபர்களும் முன்வைத்த வாதங்களை ஏற்க முடியாது எனத் தெரிவித்து, மனுவைத் தள்ளுபடி செய்வதாக தீர்ப்பளித்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x