Published : 19 Oct 2020 12:45 PM
Last Updated : 19 Oct 2020 12:45 PM
பசுவின் சாணத்தால் செய்யப்பட்ட சிப், செல்போனிலிருந்து வரும் கதிர்வீச்சைத் தடுக்கும் தன்மை கொண்டது என்று ராஷ்ட்ரிய காமதேனு ஆயோக் தலைவர் கூறியதற்கு ஆதாரத்தையும், அறிவியல் ஆய்வுகளையும் கொடுங்கள் என்று 600 அறிவியல் விஞ்ஞானிகள் கடிதம் எழுதியுள்ளனர்.
ராஷ்ட்ரிய காமதேனு ஆயோக் என்பது மத்திய அரசின் அமைப்பாகும். மத்திய மீன்வளத்துறை, கால்நடை வளர்ப்பு மற்றும் பால்வளத்துறையின் கீழ் இந்த அமைப்பு வருகிறது. இந்த ராஷ்ட்ரிய காமதேனு ஆயோக்கின் நோக்கம், பசுக்களைப் பாதுகாத்து, அதன் வளர்ச்சியை மேம்படுத்துவதாகும்.
ராஷ்ட்ரிய காமதேனு ஆயோக் அமைப்பின் தலைவர் வல்லபாய் கதிரியா கடந்த 12-ம் தேதி ஊடகங்களுக்குப் பேட்டி அளித்தார். அப்போது, பசுவின் சாணத்தால் செய்யப்பட்ட “சிப்” போன்ற அட்டையை வல்லபாய் அறிமுகம் செய்தார்.
அந்த சிப்பின் பெயர் “கவுசத்வா கவாச்சி” என்ற அறிமுகம் செய்த வல்லபாய், அறிவியல் பூர்வமாக பசுவின் சாணத்தால் செய்யப்பட்ட இந்த சிப், செல்போன் கதிர்வீச்சைத் தடுக்கும் வல்லமை கொண்டது என்று தெரிவித்தார்.
பசுவின் சாணத்தால் செய்யப்பட்ட சிப்பை ஒவ்வொருவரும் வைத்திருந்தால் அனைவரையும் பாதுகாக்கும். இது கதிர்வீச்சைத் தடுக்கும் தன்மை கொண்டது என்று அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளது. இந்த சிப்பை மொபைல் போனில் பயன்படுத்தி, கதிர்வீச்சைத் தடுக்க முடியும். மக்கள் நோயிலிருந்து தங்களைக் காத்துக்கொள்ள முடியும் என்று வல்லபாய் தெரிவித்தார்.
இந்நிலையில் வல்லபாய் கத்திரியா கூறிய கருத்தைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த விஞ்ஞானிகள் 600க்கும் மேற்பட்டோர் பசுவின் சாணத்தால் செய்யப்பட்ட சிப், கதிர்வீச்சைத் தடுக்கும் என்று எந்த ஆய்வு கூறியது? அந்த ஆய்வு எங்கு நடத்தப்பட்டது, என்ன மாதிரியான ஆய்வுகளில் எந்தெந்த முடிவுகள் கிடைத்தன என்று கேட்டு ராஷ்ட்ரிய காமதேனு ஆயோக்கிற்கு கடிதம் எழுதியுள்ளனர்.
இந்தியன் மார்ச் ஃபார் சயின்ஸ் அமைப்பின் அறிவியல் விஞ்ஞானிகள் குழு இந்தக் கடிதத்தை ராஷ்ட்ரிய காமதேனு ஆயோக்கிற்கு எழுதியுள்ளனர்.
அதில், “பசுவின் சாணத்தால் உருவாக்கப்பட்ட சிப், மொபைல் போனில் கதிர்வீச்சைத் தடுக்கும் என்று எந்த ஆய்வுகள் கூறின? ஆய்வு நடத்திய அறிவியல் வல்லுநர்கள் யார், அறிவியல் பூர்வமான ஆதாரங்களை வெளியிட வேண்டும். அந்த ஆதாரங்கள் எந்த நாளேட்டில் பிரசுரம் ஆகின என்பதை வெளிப்படையாக அறிவிக்க வேண்டும்.
நீங்கள் நடத்திய ஆய்வில் எந்த மாதிரியான தரவுகள் சேகரிக்கப்பட்டன, ஆராய்ச்சியில் கிடைத்த விவரங்களையும் வெளியிட வேண்டும்’’ எனத் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து மத்திய தொழில்நுட்ப மேம்பாட்டுத்துறையின் இயக்குநர் டாக்டர் ரகுநாதனிடம் நிருபர் கேட்டபோது, “நிச்சயமாக பசுவின் சாணத்தால் செய்யப்பட்ட சிப், செல்போன் கதிர்வீச்சை ஒருபோதும் தடுக்காது, வாய்ப்பே கிடையாது.
ஏறக்குறைய 100 ஆண்டுகளுக்கும் மேலாக கதிர்வீச்சு குறித்து ஆய்வு நடத்தப்பட்டு வருகிறது. எந்தவிதமான ஆதாரங்களும் இல்லை. பசுவின் சாணம் நோய் எதிர்ப்புச் சக்தி உடையது என்று ஆய்வுகளில் கூறப்பட்டுள்ளன. ஆனால், கதிர்வீச்சைத் தடுக்கும் என எந்த ஆய்விலும் இல்லை” எனத் தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT